பாட்டி வைத்தியம் – நகச்சுத்து ஏன் வருது?

பல வருடங்களுக்குப் பிறகு இந்த முறை ஐப்பசி மாத மழை புரட்டி எடுத்துவிட்டது.  கண்மாய், குளமெல்லாம் பெருகி கரைதொட்டு விட்டது.

பாட்டிக்கு உற்சாகம் பிடிபடவில்லை.

இந்த வருஷம் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதை அவள் புரிந்துகொண்டு, விவசாய வேலைகளை ஜரூர்படுத்தி இருந்தாள்.

எதிர்பார்த்ததை விட வேகமாக நாற்று வளர்ந்து சரிந்துவிட்டதால், நடவைத் தாமதமின்றித் தொடங்கி விட்டாள் பாட்டி.

நடவு செய்ய பக்கத்து ஊரிலிருந்து பெண்களை அழைத்து வர  ஏற்பாடு செய்திருந்தாள்.  அவர்கள் நடவு முடித்து வீட்டுக்கு வரும்போது, அவர்களுக்கு சாப்பாடு தயாராக இருக்க வேண்டுமே…

பாட்டி பம்பரமாய் இயங்கிக் கொண்டிருந்தாள்.

வேலைக்கு வந்த பெண்கள் எல்லாம், நடவு முடித்து, வீட்டுக்கு வந்து வயிறார சாப்பிட்டு, வெற்றிலை போட்டுக்கொண்டு சாவகாசமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போதுதான் பாட்டி ஒரு வழியாக அமைதியாக அவர்களுடன் வந்து உட்கார்ந்தாள்.

அந்த நேரத்தில், அமுதா தன் மகளுடன் பாட்டியைத் தேடி வந்தாள்.

 

பாட்டி வைத்தியம்

“என்ன பாட்டி.. நடவு வேலை ஆரம்பிச்சுருச்சு.. இனி ஒன்னைய கையில புடிக்க முடியாது.. எப்பப் பார்த்தாலும் வயலுக்கும், வீட்டுக்கும் அலைய வேண்டியதுதான்…”

பாட்டியின் பரபரப்பை சிலாகித்தபடியே வந்த அமுதா, மகளுடன் எதிரில் அமர்ந்தாள்.

“என்னடியம்மா.. ஆத்தாளும் மகளுமா வம்பு வளத்தபடியே வந்து நுழையிறீய.. என்ன ஆச்சு.. சும்மா வரமாட்டியளே…”

பாட்டியின் வரவேற்பில் எப்போதும்போல கிண்டல் கலந்தே இருந்தது.

“ஒண்ணுமில்ல பாட்டி.. உன் பேத்திக்குத் தான் விரல்ல நகச்சுத்தி மாதிரி வந்து வீங்கிக்கிட்டு ரொம்ப வேதனப் படுத்துது… ஒடையவும் மாட்டேங்குது.. அதுக்கு என்ன பண்ணலாமுன்னு கேக்கத்தான் ஒங்கிட்ட வந்தோம்…”

என்று தான் வந்த காரணத்தைச் சொன்னாள் அமுதா.

இதனைக் கேட்ட பாட்டி, அமுதாவின் மகள் விரலைக் காட்டச் சொல்லி பார்த்தாள்.

“எங்கேயாச்சும் வெளியூர் போயிருந்தியாடி பேத்திக்குட்டி…என்று கேட்டாள் பாட்டி…”

“ஆமா பாட்டி… எங்க காலேஜ் டூர் கூட்டி போனாங்க… அங்கங்க தங்கினோம்… டூர் முடிஞ்சு திரும்பின உடனே இந்த மாதிரி வந்துருச்சு..” என்றாள்.

“கண்ட தண்ணியவும் குடிக்கிறது.. அளவுக்கு மீறுன அலைச்சல்.. சரியான தூக்கமில்லாதது… இதுனால ஏற்படுற உஷ்ணத்துல வர்றதுதான் இந்த மாதிரி கட்டியெல்லாம்…”

“சரி இப்ப நாஞ்சொல்ற மருந்த கவனமா கேட்டுக்க…

சின்ன வெங்காயம் 5,
கறிமஞ்சள் பொடி
கஸ்தூரி மஞ்சள் பொடி,
வசம்புப் பொடிதலா 5 கிராம் ,
சுக்கு ஒரு துண்டு
கொஞ்சம் முருங்கை இலை

இது எல்லாத்தையும் சேத்து அரச்சி, அதுல எலுமிச்சை சாறு 25 மிலி  விட்டு குழச்சி நகச்சுத்தி வந்த இடத்துல பத்து போட்டு, வெள்ளத் துணிய வச்சி கட்டுப்போட்டுக்கிட்டு வா.. 1 வாரத்துல எல்லாம் சரியாப்போயிடும்..” என்றாள் பாட்டி.

பாட்டி சொன்ன மருந்தை அமுதாவின் மகள் கவனமாக ஒரு தாளில் குறித்துக்கொண்டாள்.  பின் தாயும் மகளும் பாட்டியிடமிருந்து விடைபெற்றனர்.

Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors