உளுந்து வடை|ulundu vadai recipe in tamil

தேவையான பொருள்கள்:

உளுத்தம் பருப்பு – 1 கப்
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை

செய்முறை:

  • உளுத்தம் பருப்பை தண்ணீரில் ஒரு மணி நேரம்(மட்டும்) ஊறவைத்துக் கொள்ளவும்.
  • கிரைண்டர் அல்லது மிக்ஸியில் உளுந்தை பச்சைமிளகாய், பெருங்காயம் சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து, அத்துடன் தேவையான உப்பைக் கலந்துகொள்ளவும்.
  • மாவில் மற்ற எல்லாப் பொருள்களும் நன்றாக சீராகக் கலந்தபின் கடைசியில் கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை பொடியாக நறுக்கி லேசாக அழுத்தாமல் விரல்களால் கலந்துகொள்ளவும்.
  • அடுப்பில் வாணலியில் எண்ணை காய்ந்ததும் மிதமான சூட்டில் வைத்துக் கொண்டு, மாவை வடைகளாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் நன்கு சிவப்பாகும் வரை பொரித்து எடுக்கவும். (நன்கு சிவக்கப் பொரித்தெடுத்தால் அதிக நேரம் கெடாமல் இருக்கும்.)

ulundu vadai recipe in tamil,ulundu vadai samyal kurippu,vadai seivathu eppide,ulundu vadai tamilnaadu

* உளுந்தை அதிகம் ஊறவிடக் கூடாது. அரை மணிக்குமேல் ஒரு மணிநேரமே போதுமானது.

* மாவு கெட்டியாக இருக்கவேண்டியது முக்கியம். அப்பொழுதான் வடைகளாகத் தட்ட முடியும். மேலும் தளர்வாக இருந்தால் அதிக எண்ணை குடிக்கும்.

கிரைண்டரில் தண்ணீர் சேர்க்காவிட்டாலும், கையால் தள்ளிவிட்டுக்கொண்டே அப்படி கெட்டியாக அரைப்பது சுலபம். மற்றும் கல்லில் அரைபடுவதால் சுவையாகவும் இருக்கும். மாவு அதிகம் கிடைக்கும்.

மிக்ஸியில் தண்ணீர் விடாமல் அரைப்பது சிரமம். அதனால் பிளேடு உயரம் வரை மட்டுமே உளுந்தைப் போட்டு 3,4 தவணைகளாக அரைத்தால் அதைச் சுலபமாக அரைக்க முடியும். எல்லா மாவையும் அரைத்தபின் உப்பையும் சேர்த்து மொத்தமாக நன்கு கலந்துகொள்ள வேண்டும்.

எந்த முறையில் அரைத்தாலும் மொத்தமாக மாவு அரைத்தபின் கடைசியிலேயே உப்பைச் சேர்த்துக் கொள்ளவும்.

* அரைத்த மாவை உடனே தட்டாமல், 10லிருந்து 20 நிமிடங்கள் ப்ரிட்ஜில் வைத்துவிட்டு, தண்ணீரைத் தொட்டுக் கொண்டு வடைகளாகத் தட்டுவது சுலபமாக இருக்கும்.

* இத்தனை மெனக்கெடலுக்குப் பிறகும் ஏதாவது காரணத்தால் வடை மாவு நெகிழ்ந்துவிட்டால்….

எக்காரணம் கொண்டும் உளுத்தம் மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கக் கூடாது. இதனால் வடை கல் மாதிரி ஆகிவிட வாய்ப்பு அதிகம்.

சிறிது அவலைக் கலந்து தட்டலாம். அவல் கலப்பது, தட்டச் சுலபமாகவும் வடை மிருதுவாகவும் இருக்க உதவும்.

ரவையைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். ரவை ஊறி, மாவு கெட்டியாவதுடன், சூடு ஆறியபின்னும் கூட இந்த முறையில் வடை கரகரப்பாகவே இருக்கும்.

ஜவ்வரிசி சிறிது சேர்த்து ஊறவைக்கலாம்.

பாயச சேமியா(அளவில் மெலிதாக இருக்கும்) சிறிது சேர்க்கலாம்.

ஒரு பிடி பயத்தம் பருப்பைக் கலந்து சிறிது நேரம் ஊறவைக்கவும். பருப்பு நீரை உறிஞ்சுவதுடன், நன்றாகப் பொரிந்து, வடை நன்றாக இருக்கும். பருப்பு வடைகள் அனைத்துக்கும் இதுவே ஆகச் சிறந்த திரிசமன். யாராவது கேட்டால், வடை ingredients-லியே ப.பருப்பு உண்டாக்கும் என்று சொல்லிக் கொள்ளலாம்.🙂

* வடையிலும் ஆங்கங்கே நறுக்கிய பச்சை மிளகாய் இருந்தால் சாப்பிடும்போது இடையிடையே சுரீர் என மிளகாய் அகப்பட்டு, சுவையாக இருக்கும். காரத்திற்கு அஞ்சுபவர்கள் பிஞ்சு மிளகாயாகவாவது சேர்க்கலாம்.

* பச்சை மிளகாய்க்குப் பதில் அரைத்த மாவில் மிளகை ஒன்றிரண்டாக உடைத்தும் போடலாம். மாவோடு சேர்த்து மிளகை அரைப்பதோ, மிளகை பொடியாக்கிக் கலப்பதோ சுவையைக் கெடுத்து ஒருவித மருந்து வாசனை வந்துவிடும்.

* வடை வெளியே கரகரப்பாக இருந்தாலும் உள்ளே மிருதுவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். வெங்காயம் சேர்க்காத நாள்களில் கோஸ் அல்லது கேரட்டைத் துருவிக் கலக்கலாம். (எப்பொழுதும்  சொல்வதுதான், தேங்காய் தவிர, எந்தக் காய்கறி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சேர்ப்பதாக இருந்தாலும் முதலில் வேண்டிய பொருள்களைச் சேர்த்து கலவையை நன்கு அழுத்தமாக சீராகக் கலந்துகொண்டு, கடைசியில் காய்கறிகளை அழுத்தாமல் விரல்களால் மேலாகக் கலந்துகொள்ள வேண்டும்.)

ரசத்தில் ஊறவைத்து சாப்பிடும் ரச வடை மிக மிக மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். இதை ஏனோ எப்பொழுதும் சாப்பாட்டுடனே தான் பரிமாறுகிறார்கள். ரசத்தைக் கொதிக்கவைத்து, அதில் வடைகளை நேரடியாகப் போட்டு, சுடச் சுட சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

சாம்பார் வடை, தயிர் வடை எல்லாம் அப்புறம்.

Categories: Tamil Cooking Tips, சிற்றுண்டி

Leave a Reply


Recent Recipes

Sponsors