Loading...
மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்… கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்… அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே… ‘மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில் நெருஞ்சில் பற்றி தெரிந்து கொள்வோம்.
சகமனிதர் உதவியில்லாமல் இந்த உலகில் நம்மால் ஒன்றையும் பெறமுடியாது. உண்ணும் உணவு… உடுத்தும் உடை… இருக்கும் இடம்… என அனைத்திலும் அடுத்தவர்களின் பங்களிப்பு இருக்கிறது. ஆனால், நமக்கான செயல்களைச் செய்த அந்த எளிய மனிதர்களை என்றைக்காவது நினைவு கூர்ந்து நன்றி பாராட்டியிருக்கிறோமா? மனிதர்கள் செய்யும் உதவிகளையே கொண்டாடத் தெரியாத நாம், சிறிய தாவரங்கள் செய்யும் உதவிகளையா உற்றுப் பார்க்கப் போகிறோம்?
Nerunjil maruthuva kurippugal in tamil,Nerunjil tamil maruthuvam,Nerunjil mooligai maruthuvam,Nerunjil siddha maruthuvam,Nerunjil ayurveda maruthuvam
பாதையோரங்கள், புல்வெளிகள், தரிசுநிலங்கள், வயல்கள், வரப்புகள் என எங்கெங்கும் சின்னஞ்சிறு வடிவில் படர்ந்து கிடப்பவை… நெருஞ்சில். பாதங்களை பதம்பார்க்கும் முள்ளுடன் இருப்பதால்… வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுப் போல, இதைப் பார்த்து பழகிவிட்டோம். கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பது போல, முட்களை உடைய இந்த சின்னஞ்சிறிய செடிக்குள் இருக்கும் மருத்துவக் குணம்… மகத்தானது.
விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்து, நிலங்களில் படர்ந்து வளரும் இதன் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி… ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும். இந்தப் பூக்கள் சூரியனின் திசை நோக்கி திரும்பும் தன்மையுடையவை. புளிய மர இலையைப் போல், ஆனால், அளவில் அதைவிட சிறிய இலைகளை உடையவை. காய்கள், நிலக்கடலைப் பருப்பு அளவில் எட்டு முதல் பத்து கூரிய நட்சத்திர வடிவ முட்களுடன் இருக்கும். யானை நெருஞ்சில்…. இலை பெரியதாகவும், காயானது சிறுநெல்லி அளவிலும் இருக்கும். செப்பு நெருஞ்சில்… இலைகள் சிறியதாகவும், மிளகு அளவிலான முட்கள் இல்லாத காய்களுடன் மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற பூக்களுடன் இருக்கும். இவை அனைத்துக்குமான மருத்துவக் குணங்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.
பல நாடுகளிலும் பயன்பாடு!
நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில். இன்றைக்கும் சீனாவில்… சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்கேரியாவில், பாலியல் வேட்கையை அதிகப்படுத்தவும், குழந்தையின்மைப் பிரச்னைக்கும் நெருஞ்சிலைப் பயன்படுத்துகின்றனர். கிரேக்க நாடுகளில், சிறுநீர் பிரச்னைகளுக்கும், மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கும் இதைப் பயன்படுத்துகின்றனர்.
சிறுநீரகம் சீராகும்!
சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ‘அன்யூரியா’ (கிஸீuக்ஷீவீணீ) எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்த்த ‘கோக்சூராதி க்ருதம்’ நல்ல மருந்து.
சிதைந்த நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் ஆகியவற்றை 500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால்… கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும். நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்துப் பொடி செய்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். இதன் இலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால்… சிறுநீரில் ரத்தம் கலந்து போகும் பிரச்னை குணமாகும்.
சூடு தணிப்பான்!
இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து, அதில், ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டர் அளவுக்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் 50 மில்லி அளவு, மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.
கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும் மருந்து!
நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.
ஆண்மை அதிகரிக்கும்!
நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில், 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.
சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல்… பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் நெருஞ்சிலை நெஞ்சில் இருத்துங்கள்… வாழ்வு வளமாகும்… மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.
Loading...
Loading...

Leave a Reply


Recent Recipes

Sponsors