மாதவிடாய் சீராக உதவும் மலைவேம்பு|mathavidai mooligai maruthuvam in tamil

எனக்கு polycystic ovarian syndrome உள்ளது. ஹார்மோன் எடுக்க வேண்டி வருகிறது. மாதவிடாய் விட்டுவிட்டு வருகிறது. மிகவும் அவதிப்படுகிறேன். இதனால் மனசோகமும் ஏற்படுகிறது. எனக்கு ஆலோசனை தந்து உதவுவீர்களா?

கவிதா, காரைக்கால்.

Polycystic ovarian syndrome (PCOD) என்று சொல்லக்கூடிய நோயில் ஒழுங்கற்ற மாதவிடாய் காணப்படும். சில நேரங்களில் வராது. முகத்தில் பருக்கள் காணப்படும்.

ஆண்களைப் போல் முகத்தில் முடி வளரும். இவர்களுக்கு உடல் எடை அதிகமாகவோ, நீரிழிவு நோய் வருவதற்கோ, ரத்தக்கொதிப்பு வருவதற்கோ, இதய நோய் வருவதற்கோ வாய்ப்பு உண்டு.

சரியான சிகிச்சை மூலம் காரணிகளை அப்புறப்படுத்தி குணப்படுத்தலாம். இது ஒரு ஹார்மோன் பிரச்சினை. இந்த நோய் வரும் பெண்களுக்குச் சினைமுட்டைப் பையில் (ovary) சிறு கட்டிகள் காணப்படும். பல காரணங்களால் சினைமுட்டைகளில் நீர்கட்டிகளை காணலாம். 5 முதல் 10% பெண்களுக்கு இது காணப்படுகிறது. குழந்தையின்மைக்கும் இது முக்கியக் காரணம். பருவமடையும் சமயத்தில் இது தொடங்குகிறது.

mathavidai mooligai maruthuvam in tamil

ஒழுங்கற்ற மாதவிடாய் மூலமும் இது தெரியவருகிறது. சிலர் திருமணம் முடிந்து குழந்தையின்மை ஏற்படும் பொழுதுதான் இதைக் கண்டறிகிறார்கள். இது ஏன் வருகிறது என்பதற்குச் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கு மரபணு தொடர்பு காரணமாக இருக்கிறதா என்று ஆராய்ச்சி நடந்துவருகிறது. கட்டிகள் மட்டுமே இதற்குக் காரணம் என்று சொல்ல முடியாது.

இவர்களுக்கு இன்சுலின் செயல்படும் தன்மை பாதிக்கப்பட்டுக் காணப்படலாம். இவர்களுக்கு இன்சுலின் அதிகமாக இருக்கும். இவர்களுக்கு ஆண் ஹார்மோன் ஆன்ட்ரோஜன் அதிகமாகச் சுரக்கும். எல்.ஹெச். என்ற ஹார்மோனும் மாறுபட்டு இருக்கும். இவை மூளையில் இருந்து சுரக்கப்படுபவை.

இந்த நோயாளிகளுக்குத் தைராய்டு சுரப்பி பரிசோதனை, Prolactin hormone test, ஆண் ஹார்மோன் பரிசோதனை, DHEA hormone test, வயிற்றில் Ultra sound scan, LH Hormone போன்றவற்றையெல்லாம் நவீன மருத்துவர்கள் பார்ப்பார்கள். Ultra sound scan பார்க்கும்போது சினைமுட்டையில் உள்ள நீர்க்கட்டிகள் கண்டுபிடிக்கப்படும். இவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புண்டு. அபூர்வமாக endometrial cancer வரலாம்.

இது தொடர்பாக தாய்மை அடைவதில் உள்ள பிரச்சினை என்றே பலரும் என்னிடத்தில் வருகிறார்கள். மாதவிடாய் வருகிறது, வந்தால் நிற்பதில்லை என்றும் சொல்கிறார்கள். சினைமுட்டை சரியான நேரத்தில் உருவாகாது. பலரும் உடல் எடை மிகுந்தவர்களாக இருப்பார்கள். கொழுப்புச் சத்தும் அதிகமாகக் காணப்படும். கழுத்தைச் சுற்றிக் கருமையான நிறம் உருவாகும்.

ஆயுர்வேதத்தில் மாதவிடாய் என்பது நெருப்பின் தன்மை கொண்டது. இடுப்பு என்ற யோனிப் பகுதி அபான வாயுவின் இருப்பிடமாகும். நெருப்பின் செயல்பாடும், அபான வாயுவின் செயல்பாடும் பெண்களுக்குச் சீராக இருக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருத்தல், டிவியைப் பார்த்துக் கொண்டு இருத்தல், தின்பண்டங்களை அளவுக்கு மீறி சாப்பிடுதல், பாரம்பரிய உணவை அறவே புறக்கணித்தல் போன்ற காரணங்களால் பருவமடைந்து வரும் நேரத்தில் இடுப்பைச் சுற்றிச் சதை வளர்ந்து விடுகிறது.

இந்திய முறை கழிப்பறை போய்விட்டது. நவீன முறையிலேயே சிறு குழந்தைகளும் அமர்கிறார்கள். இந்திய முறையில் குத்துக்காலிட்டு அமர்ந்து மலம் கழிப்பது, ஒரு வகை ஆசனம். இது அபான வாயுவைச் சீராக்கும். அபான வாயுவைப் பெண்கள் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். இந்த PCOD நோயை நான்கு விதங்களில் அணுகலாம்.

1.ஒரு குல்மமாக (ஒரு கட்டி போன்று) கருதலாம்

2.விஷமத் தன்மையுடைய வாயுவாகக் கருதலாம்

3.விஷமத் தன்மையுடைய ரத்தப் போக்கு (விஷமபிரதரம்)

இம்மாதிரி மாதவிடாயே வராமல் இருப்பவர்களுக்குக் கபவாதத்தைக் குறைத்து உஷ்ணத்தைக் கூட்டுகின்ற மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அதற்குச் சிறந்த மருந்துகள் உள்ளன.

கருஞ்சீரகம், சீரகம், நாயுருவி, மாவிலங்கப்பட்டை, உளுந்தங் களி, உளுந்தங் கஞ்சி, 30 கிராம் எள்ளுருண்டையுடன் சீரகக் கஷாயம், 30 கிராம் கருவேப்பிலை, மாதுளம் பழம், தினமும் 20 மி.லி. நல்லெண்ணெய் உள்ளுக்குக் கொடுத்தல், கொள்ளு கஷாயம், சதகுப்பை, கொத்தமல்லி சூர்ணம், சுக்கு, மிளகு, திப்பிலி சூர்ணம், கண்டுபாரங்கி சூர்ணம் போன்றவை நல்ல பலன் அளிப்பவை.

இவை தமது உஷ்ண வீர்யத்தால் மாதவிடாயை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் அதீத ரத்தப் போக்கு உண்டாகும், நிற்காது. அந்த நிலையில் அசோகப்பட்டை, செம்பருத்தி, நாவல்கொட்டை, மாங்கொட்டை, புளியாரை, மரமஞ்சள் கஷாயம், மாசிக்காய்ச் சூர்ணம் போன்றவற்றைக் கொடுப்போம். அசோக கிருதம் (அசோகப்பட்டை சேர்ந்த நெய்), புஷ்யானுக சூர்ணம் (பாடாகிழங்கு, நாவல்கொட்டை, மாம்பருப்பு முதலிய மருந்துகள் சேர்ந்தது) போன்ற மருந்துகள் உள்ளன.

அப்படி இருந்தும் மாறிமாறி வருபவர்களுக்கு வாயுவின் நிலையற்ற தன்மை என்று கருதிக் கல்யாணக கிருதம் போன்றவற்றைத் தொடர்ந்து கொடுத்து,அவர்களுக்கு மலசுத்தி செய்து (மலத்தை வெளியேற்றி), ஒரு சில வஸ்தி (ayurvedic enema) சிகிச்சைகளைச் செய்வோம். உடல் எடையைக் குறைப்பதற்கு உள்ள மருந்துகளைக் கொடுப்போம். மனச் சோகத்தைத் தவிர்ப்பதற்கும் மருந்து கொடுப்போம். மூக்கில் நஸ்யம் (எண்ணெய் விடும் சிகிச்சை) செய்தலும், தாரை செய்வதும் இதற்கு முக்கியமான பிரயோகங்கள்.

உடல் எடையைக் குறைப்பதற்குச் சிலாஜத் (கன்மதம்) என்கிற மலையில் இருந்து கிடைக்கும் ஒரு தாதுப் பொருளைக் கொடுப்போம். இதற்கு கொழுப்பை அழிக்கும், எடை குறையச் செய்யும் குணம் உண்டு. இது கபத்தைக் குறைத்துக் கரையச் செய்து, உடலை மெலிய வைத்து மாதவிடாயை உருவாக்கும்.

சந்திரப்பிரபா குளிகை சிலாஜத் சேர்ந்த குளிகை அகும். ஒரு சிலருக்கு 30 நாட்களில் பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஒன்றரை வருடம்வரை சிகிச்சை தேவைப்படும். மிகுந்த பொறுமையும், நிதானமும் இந்தச் சிகிச்சைக்குத் தேவை.

இந்த நோய் இன்று காட்டுத் தீ போல் வேகமாகப் பரவிவருவதால், பருவமடையாத பெண்களை வீட்டில் வைத்திருக்கும் தாய்மார்கள் நொறுக்குத் தீனிகளைக் கொடுக்காமல் குழந்தைகளை உடல் வெயில்பட வைத்து, வியர்வை வரும்வரை உடற்பயிற்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் 10க்கு ஐந்து குழந்தைகள் இந்த மாதிரி பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

அசோகம் செடி பெண்களுக்கு உகந்த மருந்து. அசோகப்பட்டை பெண்களுக்கு உயர்ந்த மருந்து. மாதவிலக்கான மூன்றாவது நாளில் வாழைப்பூ, பச்சை சுண்டைக் காய், வெண்டைக் காய் ஆகியவற்றைக் காரம் இல்லாமல் சேர்த்துக்கொண்டால் அதிக ரத்தப் போக்கு நிற்பதுடன், வெள்ளைப்படுதல் பிரச்சினையும் தீரும். துத்தி இலை, மிளகு, பூண்டு ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைத்துச் சாப்பிட்டால் தடைப்பட்ட மாதவிலக்கு ஒழுங்காகும்.

மலை வேம்பும் விழுதி எண்ணெயும்

வேப்பமரத்தையொத்த எண்ணெய் குடும்ப மர வகையைச் சேர்ந்த, மிக வேகமாக வளரும் விலை மதிப்புமிக்க அரிய மர வகைகளில் ஒன்று மலைவேம்பு. இது ஒரு மூலிகை மரம். மலைவேம்பு மரத்தின் இலை, பூ, காய், பட்டை, கோந்து, வேர் ஆகிய அனைத்தும் மூலிகை வைத்தியத்துக்குப் பயன்படுகிறது.

மருத்துவப் பயன்கள்

பெண்களுக்குக் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகும் பிரச்சினைகளுக்கும், கருமுட்டை வளர்ச்சி குறைந்த பிரச்சினைகளுக்கும் மலைவேம்புச் சாறை மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் வெறும் வயிற்றில் குடித்தால், நீர்க்கட்டி வளர்ச்சி குறையும். கருமுட்டை வளர்ச்சி அதிகரிக்கும். குழந்தை உருவாகாத சிக்கலுக்கும் இது பலனளிக்கும். சாறு அருந்தும் நாட்களில் எண்ணெய், புளி சேர்க்காமலிருக்கவும்.

விழுதி

இது தனியிலைகளையும் மங்கலான வெண்ணிற பூக்களையும் செந்நிறப் பழங்களையும் உடைய முள்ளில்லாத சிறு செடி. இதன் இலை, காய், வேர் முதலியன மருத்துவப் பயன் கொண்டவை. விழுதி இலையை இடித்துச் சாறு எடுத்து அதில் நல்லெண்ணெய் கலந்து 25 மி.லி. அளவு உட்கொண்டுவந்தால் சினை முட்டை உருவாகும்.

அதித ரத்தப்போக்கு உள்ள நிலையில் மலைவேம்பும், மாதவிடாய் வராத நேரத்தில் விழுதி எண்ணெயும், தாறுமாறாக வருகின்ற நிலையில் இவற்றின் இணைப்பு சிகிச்சையும் எனது அனுபவத்தில் பலன் அளித்துள்ளன.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam

Leave a Reply


Sponsors