சுவாதி கொலைக்கு நான் மட்டும் காரணமல்ல!’ -புழல் சிறையில் குமுறிய ராம்குமார்

Loading...

சுவாதி படுகொலை வழக்குத் தொடர்பாக வெளியாகும் தகவல்கள், காவல்துறையின் புலனாய்வையே கேள்விக்குட்படுத்துவதாக இருக்கிறது. ‘நான் மட்டும் குற்றவாளியல்ல. இன்னும் நிறைய உண்மைகள் இருக்கிறது’ என புழல் சிறையில் குமுறிக் கொண்டிருக்கிறாராம் ராம்குமார்.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24-ம் தேதி காலை வெட்டிக் கொல்லப்பட்டார் மென்பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் செங்கோட்டையைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். கழுத்தறுபட்ட நிலையில் நெல்லை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ராம்குமாரிடம் நெல்லை மாவட்ட மாஜிஸ்திரேட் ராமதாஸ், ரகசிய வாக்குமூலம் வாங்கினார். ‘என்னுடைய காதலை சுவாதி ஏற்றுக் கொள்ளாமல் அவமானப்படுத்தியதால் கொன்றேன்’ என ராம்குமார் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறையில் இருந்தே தகவல்கள் வெளியானது. இந்நிலையில், நேற்று புழல் சிறையில் ராம்குமாரை சந்தித்துப் பேசியிருக்கிறார் வழக்கறிஞர் ராமராஜ்.

“ராம்குமாரிடம் தனியாகப் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்காமல், சிறைத்துறை கண்காணிப்பாளர், மூன்று காவலர்கள் என சுற்றி நின்று கொண்டனர். இவ்வாறு அவர்கள் நடந்து கொள்வது ஆச்சரியமளிக்கிறது. நிதானமான குரலில் சிலவற்றைப் பேசினார் அவர். ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தவர். சிறு வயதில் இருந்தே அந்தக் குடும்பத்தை எனக்குத் தெரியும். இப்போது மொத்தக் குடும்பமும் இந்த சம்பவத்தால் பரிதவித்து வருகிறது. அவர்களது அனுமதியின் பேரில்தான் புழல் சிறைக்குச் சென்று பார்த்தேன். கைது செய்யப்பட்ட நாளில் இருந்தே மிகுந்த மனப்பதட்டத்தில் இருக்கிறார் ராம்குமார். உளவியல்ரீதியாகவும் உடல்ரீதியாகவும் காவல்துறை கடுமையான சித்ரவதைகளைச் செய்திருக்கிறது. அவரது கழுத்துப் பகுதி, அரை வட்டத்தில் அறுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை முயற்சியில் ராம்குமார் இறங்கவில்லை. காவல்துறையினரே அனைத்தையும் செய்தார்கள்” என்று அதிர்ச்சி கிளப்பிய ராமராஜ் மேலும் தொடர்ந்தார்,

 

ramkumar

“சிறை அதிகாரிகள் அருகில் இருந்தாலும் அதைப் பற்றிக் கவலைப்படாத ராம்குமார், ‘ நிறைய சொல்ல வேண்டியிருக்கிறது சார். என்னை மட்டும் சிக்க வைத்துவிட்டார்கள். ஒரு வருடத்திற்கு முன்பே சுவாதியை எனக்குத் தெரியும். ஃபேஸ்புக் மூலமாகத்தான் இருவரும் பேசி வந்தோம். சேட்டிங்கில் நிறைய பேசுவார். பி.ஈ படிப்பில் நான்கு அரியர் இருந்ததால், எங்குமே வேலைக்குப் போக முடியவில்லை. சென்னையில் ஏதேனும் வேலை கிடைத்துவிடும் என்று நம்பித்தான் சென்னை வந்தேன். சுவாதி வசிக்கும் பகுதியிலேயே மேன்சனில் அறை எடுத்து தங்கினேன். ஆனால், சென்னை வந்த நாளில் இருந்து எந்தக் கம்பெனிக்கும் வேலைக்குப் போகவில்லை. இடையில் எதிர்பாராமல் என்னவெல்லாமோ நடந்துவிட்டது. சுவாதி சாவுக்கு நான் மட்டும் காரணமல்ல. சிலரின் தூண்டுதலில்தான் நடந்தது’ என்ற  ராம்குமார் மேலும் சில தகவல்களைச் சொன்னார்.

ஆனால், அதை இப்போதைக்கு சொல்வதற்கில்லை. வழக்கு விசாரணையின்போது தேவைப்பட்டால் சொல்லுவேன். தற்போது ராம்குமார் அளவுக்கு அதிகமான மனப் பதட்டத்தில் இருக்கிறார். போலீஸார் எதையாவது செய்துவிடுவார்கள் என பயப்படுகிறார். தொடக்கத்தில் இருந்தே வழக்கை முடித்துவிடவே காவல்துறை அவசரம் காட்டுகிறது. உண்மையை நிலைநாட்டுவதற்கு காவல்துறை விரும்பவில்லை என்றே தெரிய வருகிறது. பட்டப் பகலில் நடந்த ஒரு பெண்ணின் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்!” என்றார் கொந்தளிப்போடு.

Loading...
Loading...
Categories: News

Leave a Reply


Recent Recipes

Sponsors