கொத்தவரங்காய் மூலிகை மருத்துவம்,kothavarangai Maruthuva palangal

அவரையின் நற்குணங்கள் பற்றி இரண்டு இதழ்களுக்கு முன்பு பார்த்தோம். பெயரிலும், உருவத்திலும் அவரையை நினைவுப்படுத்துகிற கொத்தவரங்காயும் அதேபோல எண்ணற்ற பலன்களைக் கொண்டதுதான். கொத்துக் கொத்தாய்க் காய்க்கக்கூடியது என்பதாலேயே கொத்தவரை என்று இதற்குப் பெயர் வந்தது.

கொஞ்சம் இனிப்புச்சுவை கொண்ட காய் என்பதால் சீனி அவரை என்றும் சொல்வதுண்டு.இந்தியா முழுமையிலும் பரவலாகப் பயிரிடப்படும் கொத்தவரங்காய், ஆங்கிலத்தில் Cluster bean என்று அழைக்கப்படுகிறது. Cyamopsis tetragonoloba என்பது இதன் தாவரவியல் பெயர் ஆகும். ஆயுர்வேதத்தில் கோரக்‌ஷ பாலினி என்று குறிப்பிடுகிறார்கள்.

சமையலுக்கு சுவைமிக்க காயான கொத்தவரை, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் முக்கிய இடம் பிடித்துள்ளது. சமீபகாலமாக மேலை நாடுகளின் பல்வேறு ஆய்வுகளிலும் இதன் மருத்துவ குணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.கொத்தவரையிலிருந்து எடுக்கப்பட்ட பசையை, நாள் ஒன்றுக்கு 15 கிராம் அளவில் 6 வாரங்கள் கொடுத்து வந்ததில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்துள்ளதை ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

 

கொத்தவரங்காய் மூலிகை மருத்துவம்,kothavarangai Maruthuva palangal

அதேபோல், உணவுடன் தினமும் 10 கிராம் அளவு கொடுத்ததில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்து வந்ததையும் ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. தினமும் உணவோடு கொத்தவரைப் பசையை சிறிதளவு உண்டு வந்த டைப்-1 சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு குறைந்து வந்ததையும் ஓர் ஆய்வு
உறுதிப்படுத்தியுள்ளது.

கொத்தவரையில் பொதிந்துள்ள மருத்துவப் பொருட்கள் சுமார் 100 கிராம் அளவுள்ள கொத்தவரையில் சுண்ணாம்புச்சத்து 130 மி.கி., மாவுச்சத்து 11 கிராம், எரிசக்தி 16 கலோரி, நார்ச்சத்து 3 கிராம், நீர்ச்சத்து 81 கிராம், பாஸ்பரஸ் 5 மி.கி., புரதச்சத்து 3 கிராம், இரும்புச்சத்து மற்றும் தாது உப்புகள் தலா ஒரு கிராம் அடங்கியுள்ளது.

கொத்தவரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் ஃபோலேட்ஸ் ஆகிய சத்துகள் மிகுதியாக அடங்கியுள்ளன. இதில் வைட்டமின் சி சத்து பற்களையும், எலும்புகளையும் பலமுடையதாகச் செய்ய துணை புரிகிறது. இதில் அடங்கியுள்ள வைட்டமின் கே சத்து கர்ப்பிணிகளின் வயிற்றில் உதித்து வளர்ந்து வரும் கரு சீராகவும் வலுவாகவும் வளர வகை செய்கிறது.

கொத்தவரையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தாகிறது. மேலும் பேதியை நிறுத்தவும், வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் பெரிதும் உதவி செய்கிறது. உடலின் உள்ளுறுப்புகள் சீராக இயங்கவும் இதன் நார்ச்சத்து உபயோகமாக உள்ளது. ரத்தத்தில் உள்ள கொழுப்பை நார்ச்சத்து குறைப்பதால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பைத் தடுத்து மாரடைப்பு வராத வண்ணம் காக்கிறது. கொத்தவரையில் நிறைந்திருக்கும் மாவுச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்குத் தேவையான எரிசக்தியைத் தந்து உடல் இயக்கத்துக்கு துணை செய்கிறது. உடல் பருமனைக் குறைக்க விரும்புவோருக்கு எடையைக் குறைக்க உதவி புரிவதாகவும் விளங்குகிறது.

கொத்தவரை தீர்க்கும் நோய்கள்Glyconutrient என்னும் மருத்துவ வேதிப்பொருள் கொத்தவரையில் மிகுதியாக உள்ளது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள இந்த கிளைகோநியூட்ரியன்ட் பெரிதும் உதவுகிறது.கொத்தவரையின் இலைகள் ஆஸ்துமா நோயைத் தணிக்க வல்லவை. கொத்தவரையின் செடி வலி நிவாரணியாகவும், கிருமிநாசினியாகவும், ஒவ்வாமைப் போக்கியாகவும், மூட்டுவலிக் குறைப்பானாகவும், கட்டிகளைக் கரைப்பானாகவும், புண்களை ஆற்றியாகவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் தன்மைகளைப் பெற்றுள்ளன.

சுண்ணாம்புச்சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள் நன்கு பலப்படும். இதனால் எலும்புகளின் தேய்மானம், மூட்டுவலி ஆகிய பிரச்னைகளுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாகிறது என்று சொல்லலாம்.கொத்தவரை இதய ஆரோக்கியத்துக்கும் இன்றியமையாத உணவாக விளங்குகிறது. ரத்த நாளங்களில் படிந்து ரத்த ஓட்டத்துக்குத் தடையாக இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து வெளியேற்ற உதவுகிறது.

கொத்தவரையில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் ஃபோலேட்ஸ் ஆகியவை இதயத்துக்கு வரக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்க வல்லவை.கொத்தவரையில் உள்ள சத்துகள் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வல்லவை ஆகும். சர்க்கரை மற்றும் கொழுப்புச் சத்துகளைக் குணப்படுத்தும் தன்மையை கொத்தவரை உள்ளடக்கியுள்ளதால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயலுகிறது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கொத்தவரை ஓர் உன்னத உணவும் மருந்தும் ஆகும். கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்குத் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புச்சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன.

மேலும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துகள் தேவைப்படுகின்றன. மேலும் கொத்தவரையில் உள்ள வைட்டமின் கே சத்தும் குழந்தையின் வளர்ச்சிக்கும் அதன் எலும்புகளின் வலிமைக்கும் மிக்க துணையாக விளங்குகிறது.

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெற உதவுகிறது. கொத்தவரையில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தியாகப் பயன்படுகிறது. மேலும் பிராண வாயுவைக் கடத்திச் செல்லும் மருத்துவ வேதிப் பொருட்களை உள்ளடக்கியுள்ளதால் ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற உதவுகிறது.

கொத்தவரை செரிமானத்துக்கு மிகவும் உதவியாக விளங்குகிறது. இதில் இருக்கும் Laxatin வேதிப்பொருள் ஜீரணப் பாதையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதனால் இரைப்பையில் தங்கிப் புற்றுநோய் வருவதற்குக் காரணமாக இருக்கும் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன.

மூளையில் ஏற்படும் அழற்சியைத் தவிர்க்க கொத்தவரை மருத்துவ உணவாகிப் பயன்தருகிறது. ரத்தத்தில் கலந்து துன்பம் செய்யும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை கொத்தவரைக்கு இருப்பதால் மத்திய நரம்பு மண்டலத்துக்கு புத்துயிர் தருவதாக விளங்கு கிறது. மேலும் இச்சத்துகள் மன
உளைச்சல் மற்றும் இதய படபடப்பு  ஆகியவற்றைப் போக்க உதவி செய்து மனிதனுக்கு அமைதி தரவல்லதாகவும் விளங்குகிறது.கொத்தவரை மருந்தாகும் விதம்கொத்தவரையின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது மிளகு, சீரகம், உப்பு சேர்த்து தீநீராக்கிக் குடிப்பதால் ஆஸ்துமா என்னும் மூச்சிறைப்பு நோய் தணிகிறது.

கொத்தவரை இலைகள் கைப்பிடி எடுத்து அதனுடன் சிறிது கறிவேப்பிலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி ஆகிய இலைகளைச் சேர்த்து
தீநீராக்கிக் குடிப்பதால் இரவு நேரப் பார்வைக் குறைபாடு விரைவில் நீக்கப் பெறுகிறது.கொத்தவரை விதைகளைச் சேகரித்து சுமார் 10 கிராம் அளவு எடுத்து நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிப்பதால் உடலில் ஏற்பட்ட வீக்கங்கள், வலிகள் விரைவில் குறைந்து நிம்மதி ஏற்படுகிறது.

கொத்தவரை இலை, காய், விதை, வேர் ஆகியவற்றை சேர்த்து கைப்பிடி அளவு எடுத்து நீரில் இட்டுக் கொதிக்க வைத்து இனிப்போ, உவர்ப்போ சேர்த்துக் குடித்து வருவதால் உடலில் தங்கிய பித்த கப தோஷங்களை வெளியேற்றி உடலுக்கு நல்ல சுறுசுறுப்பையும் விரைவான இயக்கத்தையும் தருவதாக உள்ளது.

கொத்தவரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதால் ரத்த ஓட்டம் சீர் பெறுகிறது. இதய அடைப்பு தடைபடுகிறது. சர்க்கரை நோயை தணிக்கிறது. ரத்த அழுத்தம் குறைகிறது. உணவுப்பாதை மற்றும் ஆசனவாய்ப் புற்றுநோயையும் தவிர்க்கும் வல்லமை கொத்தவரங்காய்க்கு உண்டு.பலன் தெரியாமலேயே பயன்படுத்தி வந்த கொத்தவரையை, இனி பரிபூரணமாக உணர்ந்து பயன்படுத்துவோம்.

கருவைச் சுமக்கும் தாய்மார்களுக்குத் தேவையான இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் கொத்தவரையில் மிகுதியாக உள்ளன. மேலும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலத்தையும் கொத்தவரை பெற்றுள்ளது. குழந்தையின் மூளை, எலும்பு, முதுகுத்தண்டு போன்றவை சீராக வளர்வதற்கு இச்சத்துக்கள் தேவைப்படுகின்றன.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors