வெப்பத்தைக் குறைக்கும் தாட்பூட்,Udal Soodu Kuraiya Passion Fruit in Tamil

நாகரிக வளர்ச்சியில் எவற்றை உண்பது, எவற்றைத் தவிர்ப்பது என்கிற ஒரு குழப்பமான சூழலில் வாழ்கிறோம் என்றால் மிகையில்லை. இல்லையேல், வரவேற்பு பானமாக (Welcome Drink) செயற்கை எலுமிச்சை வாசனையுள்ள பானத்தை விருந்தினர்களுக்கு தருவதும், கை கழுவுவதற்கு குவளையில் எலுமிச்சைப் பழத்தை (Finger Bowl) வெட்டித் தருவதையும் நாம் நாகரிகம் என்று கருதுவோமா? இறைவனுக்கு எலுமிச்சைப் பழத்தை அளிப்பதும், இறைநம்பிக்கையில் பற்றுள்ளவர்கள் வாகனங்களின் முகப்பில் அதைக் குத்தி வைத்திருப்பதையும் காண்கிறோம். ஆக, இறைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பொருள் இன்று கை கழுவவே பயன்படுகிறது. இப்படி வருந்துகிற தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், நலம் தரும் இன்னொரு பழத்தையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

பன்னாட்டு குளிர் பானங்கள் விளம்பரத்தால் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், நலம் தரும் பழ பானங்கள் அறியப்படாமலே உள்ளன. அவற்றுள் ஒன்று ‘தாட்பூட்’ என்று அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் (Passion fruit). இதன்  தாவரவியல் பெயர்: Passiflora edulis.   தென் அமெரிக்காவை தாயகமாகக் கொண்டது. மலைப்பாங்கான வெப்ப மண்டலப் பகுதிகளில் வேகமாக வளரும் இந்தக் கொடியின் பழங்கள் பானங்கள் தயாரிக்க ஏற்றது. விதை மூலமாகவும், ‘போத்து’ முறையிலும் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றின் மலர்கள் கண்கவரும் வகையில் மிக அழகாக இருக்கும்.

தாட்பூட்,Udal Soodu Kuraiya Passion Fruit in Tamil,Passion Fruit Tips in tamil

பேஷன் ஃப்ரூட் பழங்கள் தோன்ற 6 முதல் 10 மாதங்கள் வரை ஆகலாம். அதற்கு பல்வேறு காரணிகள் உண்டு. வகை, சூரிய ஒளி, வெப்ப அளவு, நாம் அளிக்கும் சத்துகள் என… மருத்துவ குணங்கள் நிறைந்த இதன் சாறு ரத்தக்கொதிப்பு, புற்றுநோய், ஆஸ்துமா போன்ற நோய்களின் கடுமையை குறைக்கும் என்கிறார்கள். அதிக நார்ச்சத்தும், இரும்புச் சத்தும், வைட்டமின் சி-யும் அதிகம் இருப்பதாக வல்லுனர்கள் சான்றளிக்கின்றனர். இதன் இலைகளைக் கொண்டு ஐரோப்பிய நாடுகள் சில மருந்துகள் தயாரிக்கின்றன. வடகிழக்கு மாநிலங்களில் வணிக நோக்கில் வளர்த்து சாறு எடுத்து விற்பனை செய்கிறார்கள்.

இக்கொடியை வீட்டிலேயே மிக எளிதாக வளர்த்து, பழரசங்களை நாமே தயாரிக்கலாம். இதில் பொதுவாக இரு வகை பழங்கள் உண்டு. கருநீலப்பழம் உண்பதற்கு ஏற்றது… மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படும். மற்றொன்று மஞ்சள் நிறப் பழம்… பானங்கள் தயாரிக்க ஏற்றது… சமவெளிப்பகுதியிலும் வளர்க்கக்கூடியது. மரங்களின் அருகில் வளர்க்கும்போது கொடியை மரத்தின் மேல் படரவிடலாம். மொட்டை மாடியில் பந்தல் அமைத்து வளர்க்கும் போது கோடையின் வெப்பத்தை குறைப்பதோடு, விருந்தினரை உபசரிக்கும் வகையில் சத்துமிக்க பழ பானமாகவும் பயன்படுத்தலாம். வீட்டின் சுற்றுப்புறத்தை பசுமையாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க அதிக பராமரிப்பில்லாத இந்த தாட்பூட் சிறந்தது!

 

Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors