கிச்சன் டிப்ஸ்,samayal kurippugal tamil

திராட்சை ஸ்குவாஷ் தயாரிக்க, சாறு பிழிவதற்கு முன் திராட்சைப் பழங்களை கடாயில் போட்டு, சிறிது புரட்டிவிட்டுத் தயாரித்தால் அதிகமாக சாறு  கிடைக்கும். வெயில் காலத்தில் ஜில்லென சாப்பிட்டால் சிலருக்கு உடனடியாக ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். தூதுவளைப் பழங்களை வாங்கி,  அதில் குண்டூசியால் பல துளைகள் போட்டு, தேனில் ஊறப் போட்டு, தேனுடன் தினமும் இரண்டு-மூன்று பழங்களை காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

ஐஸ் டிரேயில் கொதித்து, ஆறிய நீரை ஊற்றி வைத்தால் சீக்கிரமாக ஐஸ் கட்டிகள் கிடைக்கும்.  மாம்பழ மில்க் ஷேக் தயாரிக்கும் போது சில  முலாம்பழத் துண்டுகளையும் சேர்த்துப் பாருங்கள். இந்த டூயல் மில்க் ஷேக் வெகு ஜோர். தர்பூசணியை சாப்பிட்ட பின், அதிலுள்ள வெண்மையான  பகுதியை பொடியாக நறுக்கி, அதை தயிரில் போட்டு, சிறிது உப்பு சேர்த்து பச்சடி செய்தால் வெயிலுக்கு இதமான சுவை!

 

கிச்சன் டிப்ஸ்,samayal kurippugal tamil

சோற்றுக் கற்றாழையின் சதைப் பற்றை எடுத்து, நன்கு அலசி கடாயில் வதக்கி, தேனில் ஊற வைத்து, தேவைப்படும் போது சிறிது தண்ணீர் கலந்து  ஜூஸ் போல குடிக்கலாம். கோடை காலத்தில் உண்டாகும் வயிற்றுப் போக்குக்கு சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயம் கலந்து பருகினால் உடனே  குணமாகும்.  முருங்கைக்காய்களை அப்படியே குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால் காய்ந்து விடும். செய்தித்தாளில் சுற்றி வைத்தால் பசுமையாக இருக்கும். வெள்ளரிப்பிஞ்சை நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லம் தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். வத்தக்குழம்பு செய்யும் பொழுது வெல்லம்  போடுவதற்கு பதில் தேன் சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் கூடும்.

முற்றிய வெண்டைக்காயைத் தூக்கி எறிய வேண்டாம். சீரான துண்டுகளாக வெட்டி, வெயிலில் இரண்டு நாள் காய வைக்கவும். வீணாகும் புளித்த  மோரில் உப்பு, மிளகாய்தூள் போட்டு, இரண்டு நாள் ஊற வைக்கவும். தேவைப்படும்போது சிறிது எண்ணெயில் வறுத்துச் சாப்பிட்டால் மிகவும்  சுவையாக இருக்கும். பூரி தயாரிக்கும்போது கோதுமை மாவை சாதம் வடித்த தண்ணீரில் பிசைந்தால் பூரி சூப்பர் டேஸ்ட்டாக இருக்கும்.

அரிசி உப்புமா செய்யும் போது, அரிசி ரவையில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, பிசறி வைத்து பிறகு செய்தால் உப்புமா பொலபொலவென  இருக்கும்.  காய்ந்து போன ஊறுகாயில் அரை ஸ்பூன் கரும்புச்சாற்றை விட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.  குலோப் ஜாமூன் செய்யும் போது அதில்  சிறிதளவு ரோஸ் எசென்ஸ் கலந்தால் ருசியும் மணமும் அதிகமாகும்.

அப்பளத்தில் எண்ணெய் தடவி, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுத்தால் சுவையாக இருக்கும். எண்ணெய் செலவு குறைவு… உடலுக்கும் நல்லது. சேப்பங்கிழங்கையும் கருணைக்கிழங்கையும் இட்லித் தட்டில் வைத்து வேக விட்டால் குழைந்து போகாது. இரண்டு பங்கு பயத்தம்பருப்புக்கு ஒரு பங்கு  பச்சரிசி கலந்து, ஊற வைத்து, உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயம் கலந்து அரைத்து தோசை வார்த்தால் பிரமாதமான சுவையோடு இருக்கும்.

துவரம் பருப்புடன் வேர்க்கடலை சேர்த்து வேக வைத்து சாம்பார் செய்தால் தனிச்சுவையாக இருக்கும். கொழுக்கட்டை, போளி, சுழியம் செய்யும்போது  சில நேரங்களில் பூரணம் உருட்ட வராமல் இளகலாக  அமைந்துவிடும். அதில் ஒரு ஸ்பூன் பால் பவுடர் கலந்து பிசைந்து உருட்டுங்கள். பூரணம்  கெட்டியாவதுடன், ருசியும் பிரமாதம்.

Loading...
Categories: Veettu Kurippugal TIps

Leave a Reply


Sponsors