எள்மருத்துவம்,sesame medical tips in tamil

“நம்ம தமிழ்நாட்டு சமையல்ல எள்ளுலயிருந்து எடுக்குற நல்லெண்ணெய்தான் பிரதானமா பயன்படுது! இந்த நல்லெண்ணெய் உடல் ஆரோக்கியத்துக்கு பலவிதத்துல பயன்தருது. நல்லெண்ணெய்ய உணவுல தொடர்ந்து சேத்து வந்தா புத்தி தெளிவு, கண் குளிர்ச்சி, உடல் பூரிப்பு, உடற்வன்மை தரும். உடல் வெப்பத்தால் வர்ற கண் நோய், காது சம்மந்தமான பிரச்சனை, தலைவலி தீரும். முட்டையோட வெள்ளைக்கரு கூட கலந்து முகப் பருக்கள் மீது தடவி வந்தா, பருக்களில் வலி தீரும்; மஞ்சள்கருகூட கலந்து தீப்புண், சுண்ணாம்பு வேக்காட்டுனால உண்டான புண்ணுல பூசினா, புண் ஆறும். நல்லெண்ணெய் தேய்ச்சு வாரம் ரெண்டு தடவ குளிச்சு வந்தா, உடல் வெப்பமும் அது சம்மந்தமான நோய்களும் நீங்குறதோட, கண் குளிர்ச்சி அடையும், இரத்த ஓட்டம் சீராகும்.” “ஓ… நல்லெண்ணெய் இவ்வளவு பலன் தருதா பாட்டி…?! இவ்வளவு நல்லது செய்யுறதுனாலதான் நல்லெண்ணெய்னு சொல்றாங்களோ?” “ஆரம்பிச்சிட்டியா… இந்த வார்த்தை ஆராய்ச்சியெல்லாம் நீயே பண்ணிக்கோ! எள் சாப்பிடுறதுனால சில பலன் இருக்கு, அத வேண்ணா நான் உனக்கு சொல்றேன்… கேளு!” “சரி… சரி… சொல்லுங்க கேக்குறேன்” “எள்ள ஊற வச்சு அந்த தண்ணிய பெண்கள் குடிச்சு வந்தா (தினமும் கால் டம்ளர்), மாதவிடாய் சம்பந்தமான அனைத்துப் பிரச்சனைக்கும் நல்ல பலன் கிடைக்கும். எள் விழுது 1 சுண்டைக்காய் அளவு வெண்ணெயில கலந்து சாப்பிட்டு வந்தா, குருதி மூலம் குணமாகும். எள்ளை அரைச்சு கொதிக்க வச்சு, உடலில் ஏற்படும் கட்டிகளில் கட்டி வந்தா, கட்டி பழுத்து உடையும். எள் சாதம் உடலுக்கு வலிமை குடுக்கும்.” எள் தரும் பலன்களை பாட்டி சொல்லியதைக் கேட்டபின், எள் ஆரோக்கியத்திற்கு அவசியம் என்பது குறித்து எனக்கு எள்ளளவு சந்தேகம் இருக்கவில்லை! எள் பற்றி எனக்கு எடுத்துக் கூறிய பாட்டியிடம் கேட்க ஒரு கேள்வி இருந்தது, அதைக் கேட்டவுடன் பதில் சொல்லாமல் கோபமாக முறைத்தபடி அடுக்கறைக்குள் நுழைந்துகொண்டாள் பாட்டி! நான் கேட்டது இதுதான், “எள்ளுன்னா எண்ணெயா நிக்கணும்னு சொல்றாங்களே… அது எதுக்கு பாட்டி?” குறிப்பு: எள் இலை – 1 (அ) 2 பச்சை இலைகளை (fresh leaves) எடுத்து குளிர்ந்த நீரில் அலசினால், அதிலிருந்து பசை போன்ற தன்மை இறங்கும். அது கண்களில் ஏற்படும் புண்களை கழுவ உதவும். எள்ளினை அதிகளவு எடுத்துக்கொண்டால் கரு கலையும் வாய்ப்புள்ளது. எனவே பெண்கள் கர்ப்ப காலத்தில் எள் அதிகம் உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

எள்மருத்துவம்,sesame medical tips in tamil

 

எள்ளில் வெள்ளை, கருமை, செம்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இது இந்தியா முழுதும் பயிரிடப்படும் சிறிய செடி வகையாகும். இதனை திலம் என்றும் அழைக்கின்றனர்.

எள் விதைகளில் இருந்து எடுக்கப்படுவது தான் நல்லெண்ணெய். இதை எள்நெய் என்றும் அழைக்கின்றனர்.

இதன் இலை, பூ, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. இந்த எள் வறட்சிப் பகுதியிலும் வளரக் கூடியது. இதை பயிரிடும்போது ஒருமுறை தண்ணீர்விட்டால் போதும். பிறகு தண்ணீர் விடத் தேவையில்லை. அந்த அளவுக்கு வறட்சி தாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டது.

இதன் இலைகளை எடுத்து நீரில் போட்டு கசக்கினால் வழுவழுவென்று பசை இறங்கும். இந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் கண்கள் நன்கு ஒளிபெறும். கண் நரம்புகள் பலப்படும். இதன் இலைகளை நன்கு மசிய அரைத்து கட்டிகள் மேல் பூசி வந்தால் கட்டிகள் மறையும்.

Tamil – Ellu

English – Gingeli Oil plant, sesame

Telugu – Nuvvulu

Sanskrit – Tila

Malayalam – Karuthellu

Botanical name – Sesamum indicum

இதன் பூ கண்நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது. இதன் காயையும், தோலையும் உலர்த்திச் சுட்டு சாம்பலாக்கி ஆறாத புண்கள் மீது தடவினால் புண்கள் ஆறும்.

விதை

எள்ளுமருத் தைக்கெடுக்கும் எறனலாந் திண்மைதரும்

உள்ளிலையைச் சேர்க்கும் உதிரத்தைத் – தள்ளுமிரு

கண்ணுக் கொளிகொடுக்குங் காசமுண்டாம் பித்தமுமாம்

பண்ணுக் கிடர்புரியும் பார்

இது மருந்தின் செயல்பாட்டை முறிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய்க்கு மருந்து சாப்பிடுபவர்கள் நல்லெண்ணெயைப் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

எள்ளின் விதையில் உடலுக்குத் தேவையான கால்சியம், இரும்பு, வைட்டமின் பி1, வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. உடலுக்கு வன்மையும், குருதி பெருக்கையும் உண்டாக்கும்.

எள்ளில் கருப்பு எள் அதிக மருத்துவத் தன்மை கொண்டது. அதில் அதிகளவு சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.

வெள்ளை மற்றும் சிவப்பு எள்ளுவில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

மூல நோயின் தாக்கம் குறைய

மூல நோய் அஜீரணக் கோளாறால் வாயுக்கள் சீற்றமாகி மலச்சிக்கல் உண்டாகி மூலநோய் ஏற்படுகிறது. இந்த மூல நோயின் தாக்கம் உள்ளவர்கள் ஒரு இடத்தில் அமர்ந்திருக்க முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் எள்ளின் விதையை வெல்லப் பாகுவில் கலந்து தேங்காய் சேர்த்து சாப்பிடலாம். அல்லது எள்ளு விதையை லேசாக வறுத்து பொடி செய்து நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் மூல நோய் குறையும்.

சரும நோய்கள் அகல

சருமத்தில் சொறி, சிறங்கு புண்கள் உள்ளவர்கள் எள்ளு விதையை அரைத்து மேல் பூச்சாக பூசினால் சரும நோய்கள் அகலும். அல்லது நல்லெண்ணெயுடன் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து உடலில் பூசி குளித்து வந்தால் சரும நோய்கள் ஏதும் அணுகாது.

இரத்த சோகை நீங்க

கருப்பு எள்ளில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தச் சோகையை குணப் படுத்தும். எள்ளுவை நன்கு காயவைத்து லேசாக வறுத்து பொடி செய்து அதனை நல்ல சூடான நீரில் போட்டு 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் தேவையான அளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து காலையும் மாலையும் அருந்தி வந்தால் இரத்தச் சோகை விரைவில் மாறி உடல் வலுப்பெறும்.

வயிற்றுப் போக்கு மாற

வயிற்றுப் போக்கு உள்ளவர்கள் எள்ளை வறுத்து பொடியாக்கி ஒரு ஸ்பூன் அளவு எடுத்து நெய் கலந்து தினமும் மூன்று வேளை என ஆறு நாட்கள் சாப்பிட்டு வந்தால் காலரா மற்றும் தொற்றுநோயால் உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்கும்.

பெண்களுக்கு

பூப்பெய்திய சில பெண்களுக்கு முறையாக உதிரப்போக்கு இருக்காது. மேலும் அடிவயிற்றுவலி போன்ற உபாதைகள் இருக்கும். இவர்கள் எள்ளை பொடி செய்து அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து அருந்தினால் மாத விலக்கு சீராகும். மேலும் பெண்களுக்கு உண்டாகும் இரத்தச்சோகை மாறும். இதை மாதவிலக்குக் காலங்களில் அருந்தக் கூடாது.

முடி உதிர்வது குறைய

எள்ளுவின் இலையையும் வேரையும் அரைத்து தலையில் தடவி அரை மணி நேரம் ஊறவைத்து தலை குளித்து வந்தால் முடி உதிர்தல் குணமாகும்.

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் உணவுப் பொருளாக பயன்படுகிறது. இதன் பயன்கள் அளப்பறியது. அது பற்றி ஒரு புத்தகமே எழுதலாம்.

கருவுற்ற பெண்கள் எள் சாப்பிட்டால் கரு கலைந்துவிடும். எனவே எள்ளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த எள் கருக்கலைப்பு மருந்துகளில் அதிகம் சேர்க்கப்படுகிறது. சுவாசக் கோளாறுகளை நீக்கும்.

(வெட்டுக் காயங்களில் நல்லெண்ணெய் பட்டால் தேவையற்ற சதை வளரும். அதனால் காயங்களில் நல்லெண்ணெய் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்)

 

எள் பற்றி கருட புராணத்தில் வரும் குறிப்பை அபிதான சிந்தாமணியில் காண்கிறோம்: “ இது ஒரு சிறு செடி. இதன் வித்தில் எண்ணெய் எடுப்பர். விஷ்ணுவின் வியர்வையில் உண்டானது ( பாமர மக்களுக்குப் புரிவதற்காக இப்படிச் சொல்லுவதுண்டு. அதன் உருவம் வியர்வைத் துளி போல தோன்றும்) ஆகையால் மிகத் தூய்மையானது. இதனைக் கண்டால் அசுரரும் பூதப்பிரேத பைசாச முதலியோரும் வெகுண்டு ஓடுவர். இந்த எள் கருப்பும் வெண்மயுமென இரு வகைத்து. எந்த நிறமுள்ள எள்ளையேனும் தானங்களோடு சேர்த்துக் கொடுப்பின் அதிகப் பயனுள்ளதாகும் சிரார்த்தத்தில் கறுப்பு எள்ளைச் சேர்த்தால் பிதுர்தேவர்கள் அதிகக் களிப்படைவர்—(கருடபுராணம்)

எள்ளும், சனைஸ்வர பகவானும், சனியின் வாகனமான காகமும் கறுப்பு நிறத்தவை. மரணத்துக்கு அதிபதியான எமனும் அவனது வாகனமான எருமையும் கறுப்பு நிறத்தவை. ஆக மரணத்துக்கும் கறுப்பு நிறத்துக்கும் உள்ள தொடர்பு காரணமாக நீத்தார் கடன்களில் எள் பயன்படுத்தப்படுகிறது என்றும் கொள்ளலாம். சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள்ளுஞ் சாதம் படைக்கப்படுகிறது.

மனிதர்கள் நாகரீகம் அடைவதற்கு முன், இறந்தோருக்கு மாமிசத்தைப் படைத்து வந்தனர் என்றும் பிற்காலத்தில் மாமிசத்துக்குப் பதிலாக எள் கொடுக்கப்பட்டது என்று கூறுவாரும் உளர். உண்மையில் எள்ளில் தாவர வகை புரத்ச் சத்து அதிகம். எண்ணையில் கொழுப்பு சத்தும் அதிகம்.
காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகள் உபந்யாசம் (16-11-1932, சென்னை)

“ ஆவணி அவிட்டத்தன்று எள்ளு மாத்திரம் சாப்பிட்டு அன்று முழுதும் பட்டினி இருந்து மறுநாள் 1008 ஸமித்தால் ஹோமம் பண்ணவேண்டும். அந்த ஹோமம் ஸ்வர வர்ண லோபங்களுக்காகச் செய்ய வேண்டும் அதை ஒவ்வொரு வருஷமும் பண்ணவேண்டும்”.

ஷட் தில ஏகாதசி:

மாசி மாத கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி ஆறு எள் (ஷட் தில= ஷடில) ஏகாதசி என்று அழைக்கப்படும். அன்ன தானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும்கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.

அன்றைய தினம் ஆறு விதத்தில் எள் பயன்படுத்தப்படுகிறது. ஆறு வகை உபயோகங்கள்: இறந்து போன உறவினருக்கு நீருடன் அளிப்பது, தானம் செய்வது, உணவில் சேர்ப்பது, எண்ணை தேய்த்து குளிப்பது, மசாஜ் செய்வது, யாகத்தில் பயன் படுத்துவது.

மகர சங்கராந்தி, சகட் சௌத் பண்டிகைகளில் எள் உருண்டை கொடுக்கும் பழக்கமும் மஹாராஷ்ட்ரம் முதலிய மாநிலங்களில் உண்டு. அவ்வாறு கொடுக்கும் போது “ இந்த எள் உருண்டையை ஏற்றுக் கொண்டு இனிய சொற்களைக் கூறுங்கள்” என்று சொல்லும் வழக்கமும் இருக்கிறது. அதாவது பழைய மோதல் சம்பவங்களை மறந்து நட்புடன் வாழத் துவங்குவோம் என்பது இதன் பொருள். இதனால் மகர சங்கராந்தியை தில (எள்) சங்கராந்தி என்றும் அழைப்பர்.

 

அலிபாபாவும் நாற்பது திருடர்களும் கதையில் “ஓப்பன் சிசேம்” என்று சொன்னவுடன் குகையின் வாயில் திறக்கும். இந்த சொற்றொடரை இப்போது ஆங்கிலத்தில் காணலாம். ஆனால் இதன் மூலமோ காரணமோ யாருக்கும் தெரியாது. ஒருவேளை இது இந்துமததில் இருந்து சென்றிருக்கலாம். ஏனெனில் சுவர்க்கத்தின் வாயில் திறக்கவும், இறந்தோர் வாழும் இடத்துக்கு நமது மதிப்பையும் மரியாதையையும் அனுப்பவும் எள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது (ஷடில ஏகாதசி கதையில் விவரம் காண்க).

தென் இந்தியாவில் எல்லா சமயச் சடங்குகளிலும் நல்லஎண்ணைதான் பயன்படுத்தப்படுகிறது எள்ளில் ஏராளமான வகைச் சத்துகள் இருக்கின்றன. எள் செடியின் எல்லா பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுகின்றன. (விக்கிபீடியா முதலிய கலைக் களஞ்சியங்களில் கண்டு கொள்க)

சங்க இலக்கியத்தில் எள்

தமிழில் சங்க காலம் முதலே எள் பற்றிய குறிப்புகள் உண்டு. எள் பற்றிய வினைச் சொற்கள், பெயர்ச் சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பார்க்கையில் தமிழர்களின் வாழ்வில் எள் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டறக்கலந்த ஒரு பண்டம் என்பதும் புலனாகிறது. கீழே விவரங்களைக் காண்க:

எள்ளல்= கேலி செய்தல், மட்டம் தட்டுதல்
எள்ளி நகையாடுதல்= நகைப்புரியவனாக்குதல், அவமானப்படுத்தல்
எள் அளவும் சந்தேகம் இல்லை= ஒரு துளியும் சந்தேகம் இல்லை
ஏழைக்கேற்ற எள்ளுருண்டை= மிகவும் மலிவான பொருள்
கூட்டத்தில் எள் போட இடம் இல்லை= நெருக்கமான கூட்டம், கொஞ்சமும் இதம் இல்லை
அவ்வளவு கூட்டம்! எள்ளுப் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்!= எள் நசுக்கப்படு எண்ணை வெளியேறும்.

 

இப்படி எத்தனையோ சொற்களும் சொற்றொடர்களும் இருப்பதைக் காண்கையில் இந்த தானியம் பாரத நாட்டிலேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. ‘தில’ என்ற சம்ஸ்கிருத சொல் மூலமோ ‘எள்’ என்ற சொல்லின் மூலமோ வேறு மொழிகளில் இல்லாததால் வெளி தேசத்தின் செல்வாக்கு நம் மீது இல்லை; எள் என்பது இறக்குமதியான பொருள் இல்லை என்பதும் விளங்கும்.

பிராமணர் வீட்டு திதிகளிலும் எள்ளுருண்டை பயன்படுத்தப்படுகிறது மத்தியக் கிழக்கில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள், யூதர்கள் ஆகியோர் எள்ளைக் கொண்டு செய்யப்படும் இனிப்பு முதலியவைகளைச் சாப்பிட்டாலும் இந்துமதம் ஒன்றில்தான் இது சமயச் சடங்குகளில் பயன்படுகிறது. பொதுவாக வேற்று நாட்டுச் சரக்குகள் சமயச் சடங்குகளில் இடம்பெறாது. பிராமணர்கள், திவசங்களில் மிளகாய் முதலிய இறக்குமதிப் பண்டங்களையோ, முட்டைக்கோசு, காலிபிளவர், முதலிய வெளிநாட்டுக் காய்கறிகளையோ இன்றுவரை திவசத்தில் சமைக்கமாட்டார்கள். ஆகவே எள் எனபதை இந்தியர்களுக்கு யாரும் அறிமுகப் படுத்தவில்லை. இந்தியர்கள்தான் மற்றவர்களுக்கு அறிமுகப் படுத்தினார்கள் என்றால் மிகை இல்லை.

சங்க இலக்கியத்தில் எள் :– அகம்-71, கலி-35-23, குறுந்த்- 112, புற—174, 246, 313, 321, மலை-562.. இதுதவிர, எள்ள, எள்ளப்படு, எள்ளல், எள்ளலன், எள்ளலான், எள்ளார், எள்ளி, எள்ளிய, எள்ளினும், எள்ளீயும், எள்ளு, எள்ளுக, எள்ளுதல், எள்ளுநர், எள்ளுபு, எள்ளும், எள்ளுமார், எள்ளுவாய், எள்ளுற்று என்று பல வினை சொற்களும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் இருப்பதால் எள் என்பது இந்தியாவில் தோன்றி வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கவேண்டும் என்பது என் முடிவு. எள் என்பதில் இருந்தே எளிய, எளிமை முதலியன வந்ததா என்பதும் ஆய்வுக்குஇய விஷயங்கள்.
திருவள்ளுவரும் 281, 470, 1298 முதலிய குறள்களில் எள்ளைப் பயன்படுத்துகிறார்.

 

புறநானூற்றில் எள் துவையல்
பூதப் பாண்டியன் இறந்தவுடன் கணவனின் சிதைத் தீயில் பாய்ந்து உடன்கட்டை ஏறமுயன்ற கோப்பெருந்தேவியை (மஹா ராணியை) சான்றோர்கள் தடுத்து நிறுத்தமுயன்றனர். இதனால் மிகவும் கோபம் அடைந்த தேவியார் ஒரு அழகான பாட்டைப் பாடி அவர்களை நிந்தித்துவிட்டு தீயில் பாய்ந்தார். அந்தப் பாட்டில் “ என்னை நெய் இல்லாத தண்ணீரில் ஊறவைத்த சோறும், புளிச்ச கீரையும், எள்ளுத் துவையலும் சாப்பிடும் பெண் என்று நினத்துவிட்டீர்களா?” என்று சாடுகிறார். இதிலிருந்து அக்கால உணவுப் பழக்கங்களும் தெரியவருகிறது.

சூடாமணி நிகண்டு எள், நூ, எண் ஆகிய மூன்று பெயர்களை எள்ளுக்குத் தருகிறது. எள் என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த எல்லா வினைச் சொற்களும் மட்டமான பொருளிலேயே (எ.கா. எள்ளி நகையாடுதல்) வரும். ஆனால் எள்ளின் மகிமை தெரிந்த பின்னர் இனிமேல் எள்ளை மதிப்புடன் நடத்துவோம்!!

 

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors