தாய்ப்பால் கொடுக்கும் பொழுது விழிப்புணர்வு தேவை

தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் பாதிப்பு வெகுவாய் குறையும், எலும்பு தேய்மானமும் நன்கு கட்டுப்படுகின்றது.

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது விழிப்புணர்வு தேவை
தாய் பால் கொடுப்பது என்பது ஒரு தாயின் தனி விருப்பம்தான். இதற்கு உறவும், நட்பும் அத்தாய்க்கு ஊக்கமான, கருத்துக்களைச் சொல்லி உதவ வேண்டும். இதனை ஏன் இப்படி எழுத வேண்டியிருக்கின்றது என்றால் என்னதான் அரசாங்கம் முன் வந்து அநேக சலுகைகள் கொடுத்தாலும் அநேக சுமைகள் ஒரு தாய்க்கு இருக்கத்தான் செய்கின்றது. அந்நேரத்தில் சோர்ந்து விடும் அப்பெண் தன் குழந்தைக்கு புட்டி பாலே கொடுத்து விடலாம் என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகின்றாள். அந்நேரத்தில் அத்தாய்க்கு கை கொடுக்க உறவும், நட்பும் அவசியம் ஆகின்றது.

நம் அனைவரது மனதிலும் ஒரு உறுதி வேண்டும். வருங்கால இந்தியா ஆரோக்கியமான பலமான இந்தியாவாக உருவாக வேண்டும். அதற்கான உழைப்பினை ஒவ்வொரு குழந்தையினை உருவாக்குவதிலும் தர வேண்டும். அதன் அடிப்படையில்தான் குழந்தைக்கு அளிக்கும் தாய்பால். இதனை அனைவரும் நன்கு உணர வேண்டும்.

தாய்பால்தான் குழந்தைக்கு சரியான உணவு. புரதம், வைட்டமின், கொழுப்பு இவை அனைத்தும் சரியான விகிதத்தில் உள்ளன. எளிதாக செரிக்கக் கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்தது. வைரஸ், பாக்டீரியா இவற்றினை எதிர்க்கும் பலம் கொண்டது.

தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அலர்ஜி, ஆஸ்துமா பாதிப்புகள் ஏற்படுவது மிகவும் குறைவு. மேலும் முதல் ஆறு மாதம் முழுமையான தாய்பாலில் மட்டுமே இருக்கும் குழந்தைகளுக்கு காது கிருமி பாதிப்பு ஏற்படுவது மிகவும் குறைவு. மேலும் மூச்சு குழல் நுரையீரல் கிருமி பாதிப்பு, வயிற்று போக்கு இவை ஏற்படுவதும் மிக மிக குறைவு. பொதுவில் தாய்பால் குடிக்கும் குழந்தைகள் நோய் என அடிக்கடி மருத்துவரிடம் செல்லமாட்டார்கள்.

தாய்பால் குடித்து வளரும் குழந்தைகளின் மூளைத்திறன் சிறப்பாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் தாய்பால் கொடுக்கும் பொழுது தாயின் கண்ணும், குழந்தையின் கண்ணும் நேருக்கு நேர் பார்ப்பதும், இருவரின் உடலும் தொட்டுக் கொண்டு இருப்பதும் தாயின் அன்பான பேச்சும் அக்குழந்தையினை உடலாலும், மனதாலும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். தாய் பால் குடிக்கும் குழந்தைகள் ஆரோக்கியமான எடையுடன் இருப்பர். குண்டாக இருப்பதில்லை. இக்குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், சில வகை புற்று நோய் பாதிப்புகள் அபாயம் மிக மிக குறைவு எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

தாய்பால் கொடுப்பதன் மூலம் தாய் கர்ப்பகாலத்தில் ஏற்பட்ட எடையினை வெகுவாய் குறைத்து விட முடியும். இக்காலத்தில் வெளியாகும் ஆக்ஸிடோசின் என்ற ஹார்மோன் கர்ப்ப காலத்திற்கு முன் இருந்தது போன்ற அளவிற்கு கருப்பையினை சுருங்கச் செய்யும். பிரசவத்திற்கு பின் ஏற்படும் உதிரப்போக்கும் கட்டுப்படும். தாய்ப்பால் கொடுக்கும் தாய் மார்களுக்கு மார்பக புற்றுநோய், கருப்பை புற்று நோய் பாதிப்பு வெகுவாய் குறையும், எலும்பு தேய்மானமும் நன்கு கட்டுப்படுகின்றது.

குழந்தை பிறந்த முதல் சில நாட்கள் மார்பகத்திலிருந்து வெளி வரும் திரவம் ‘கொலோஸ்ட்ரம்’ எனப்படும். இந்த திரவம் சற்று தடித்தும், மஞ்சள் நிறமாகவும், சற்று குறைவாக இருப்பது போலவும் இருக்கும். இது போதாதோ என்று நினைக்காதீர்கள். இதுவே குழந்தைக்கு தேவையான அளவு சத்துக்கள் கொண்டதாக இருக்கும். இத்திரவம் குழந்தையின் உணவுப் பாதையினை நன்கு தயார்படுத்தும்.

பிறந்த முதல் 3-5 நாட்களில் குழந்தை சற்று எடை குறையும். குழந்தைக்கு பால் பற்றவில்லை என உடனே பயந்து விட வேண்டாம். இது இயற்கையானதே. பின் தானே எடை கூடும். குழந்தை தேவைக்கேற்ப தாயின் மார்பகம் பால் கொடுக்கும். முதல் ஆறுமாதம் தாய் பால் மட்டுமே போதும் வேறு எதுவும் வேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆறுமாத காலத்திற்கு பிறகு மற்ற உணவுகளை கொடுக்கும் பொழுதும் தாய்பாலும் அவசியம் என்பதனை உணர்க.

தாய்பால் கொடுக்கும் பொழுது குழந்தையினை எப்படி வைத்துக் கொண்டு தாய்பால் கொடுக்க முடியும் என்ற முறைகளை மருத்துவர் மூலம் அறிக. தாய் பால் கொடுக்கும் பொழுது தாய்க்கு விழிப்புணர்வு தேவை. குழந்தைக்கு பசி இருக்கின்றதா என தாய் அறிய வேண்டும். அப்பொழுது தான் குழந்தையும் நன்கு பால் அருந்தும். பிறந்த முதல் சில வாரங்களுக்கு நாள் ஒன்றுக்கு அதாவது 24 மணி நேரத்தில் நீங்கள் 12 முறை கூட பால் கொடுக்க வேண்டி இருக்கலாம். விரல் வாய் அருகில் செல்வதும், வாயால் பால் குடிப்பது போன்ற சத்தம் வருவதும் குழந்தை பசியாக உள்ளது என்பதன் அறிகுறி. வீறிட்டு அழும் வரை காத்திருக்க வேண்டாம். அந்நேரம் அதிக பசி கூடி அழும். பால் குடிக்க சிரமப்படும்.

* பொறுமை தேவை. குழந்தை தன் தேவைபடி குடிக்கட்டும். அதனை அவசரப்படுத்தாதீர்கள். ஒவ்வொரு மார்பகத்திலும் 10-20 நிமிடங்கள் மாறி மாறி கொடுங்கள்.

தாய்ப்பால் கொடுக்கும் பொழுது விழிப்புணர்வு தேவை

* மன உளைச்சல் இன்றி அமைதியாய் இருத்தல் அவசியம். மன உளைச்சல் இன்றி, கோபம், வேதனை இன்றி இருக்கும் பொழுதே பால் நன்றாக சுரக்கும். இனிமையான எண்ணங்களுடன் இருங்கள்.

இன்றைய தாய்மார்கள் தாய்பாலின் சிறப்பினை நன்கு அறிந்தவர்களாகவே இருக் கின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் கல்வி அறிவுதான். ஆகவே இக்காரணங்களை மேலும் விளக்கிக் கூறுவது மேலும் நன்மை பயக்கும் என்பதால் கீழ் கண்ட காரணங்களை மேலும் வலியுறுத்துகின்றோம்.

* தாய் பாலே சிறப்பாக குழந்தையை வளர்க்கும். அதில் சரியான விகிதத்தில் புரதம், கார் போஹைட்ரேட், கொழுப்பு உள்ளது. பாலின் தன்மையும் குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப மாறும் என்பது அதிசய உண்மை.

* குழந்தையின் மூளை வளர்ச்சி சிறந்து இருக்கும்.

* சுகாதாரமானது. மிக எளிது.

* மார்பகம் சிறியது, பெரியது அதனால் பால் சுரப்பதில் பாதிப்பு இருக்கும் என்றெல்லாம் கிடை யாது. குழந்தைக்கு தேவையான பால் கிடைக்கும் என்பதனை உணர்க.

* வேலைக்கு செல்லும் தாய் மார் கள் மருத்துவ ஆலோசனைபடி பால் சுரந்து பாட்டிலில் வைத்து விட்டு வேலைக்குச் செல்லலாம். எவ்வளவு நேரம், எப்படி வைக்க வேண்டும் என்பதற்கு குழந்தை நல மருத்து வரின் அறிவுரை அவ சியம் தேவை.

Loading...
Categories: Pregnancy Tips Tamil, குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors