1 வயது முதல் மூன்று வயது வரை குழந்தைகளுக்கான உணவுமுறை,Kulanthaigal Unavu

ஒரு வயது நிறைந்த குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளை அதிகம் தரக் கூடாது. ஒருமுறை மட்டுமே பழரசம் கொடுக்கலாம். நாம் சாப்பிடும் உணவுகளைக் குழந்தைக்குத் தரலாம். கட்டாயப்படுத்திச் சாப்பிடவைக்கக் கூடாது. ஒரே மாதிரியாகச் செய்யாமல், விதவிதமாக செய்து தரவேண்டும். உணவில் தினமும் கீரை நல்லது. கீரையில் ஒரு நாள் கூட்டு, மறுநாள் மசியல், மறுநாள் பருப்பு கடைசல் என வெரைட்டியாகச் செய்துதந்தால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும்.

எந்த உணவையும் முதலில் சிறிது கொடுத்த பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். எடுத்தவுடன் திணிக்கக் கூடாது. இந்த வயதில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிக அதிகமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் கொழுப்பு நிறைந்த உணவுகள் அவசியம். குழந்தைகளின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவுக்கு 100 கி. கலோரி, 1.2 கிராம் புரதம் மற்றும் வைட்டமின் ஏ, சி சத்துள்ள உணவுகளைக் கொடுக்க வேண்டும்.

1 வயது முதல் மூன்று வயது வரை குழந்தைகளுக்கான உணவுமுறை

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு எதிர்ப்புச் சக்தி குறையும். இதைத் தவிர்க்க மஞ்சள் நிறப் பழங்களைக் கொடுக்கலாம். கேரட், உருளைக்கிழங்கு, மீன், கீரை ஆகியவற்றையும் உணவில் அவசியம் சேர்க்க வேண்டும். இவற்றில் இருந்து வைட்டமின் ஏ கிடைக்கிறது.

கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பால் தர வேண்டும். இது, நரம்பு வளர்ச்சிக்கு நல்லது. காலையில் ஒன்றேகால் கப் சாதம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கு தரலாம். காய்கறி சேர்த்து சமைத்த உப்புமா, சேமியாவும் தரலாம்.

இடைப்பட்ட நேரங்களில் வேகவைத்த சுண்டல், கால் கப் பழச்சாறு மற்றும் கால் கப் பழக்கலவை தரலாம். மதிய உணவில் ஒரு முட்டை/மீன்/மட்டன் தரலாம். கீரையை நன்கு வேக வைத்து சாதத்துடன் பிசைந்து தரவும். வெண்ணெய், எண்ணெய் வகைகள் சேர்த்துக்கொள்ளலாம்.

குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி என்பது வேகமாக இருக்கும். அதேநேரம் குழந்தைகளின் உடல் வளர்ச்சியும், மனவளர்ச்சியும் நன்றாக இருக்க நல்ல சத்தான சரிவிகித உணவு மிகவும் அவசியம். அது குழந்தைகளுக்கு அதிக பருமன், எடை சார்ந்த நோய்களையும் தடுக்கும்.

குழந்தைகளுக்கு நார்ச்சத்து அதிகம் உள்ள முழுத் தானிய பிரெட் போன்றவற்றைக் குழந்தைகளுக்குக் கொடுங்கள். எண்ணெயில் பொரித்த உணவுகளைவிட சுட்ட, வறுத்த, ஆவியில் வேகவைத்த உணவுகளைக் கொடுப்பது, குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

ஃபாஸ்ட் புட் உணவுகளைக் கூடிய மட்டும் தவிர்த்துவிடுங்கள். கடைகளில் விற்கப்படும், இனிப்பு சேர்த்த பழச்சாறுகள், சோடாக்களைக் கொடுக்கவே கூடாது.
இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.

நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.

Loading...
Categories: குழந்தை மருத்துவம்

Leave a Reply


Sponsors