கத்தரிக்காய் கடலை கறி

கத்திரிக்காய் – 7
வறுத்த வேர்க்கடலை – ஒரு மேசைக்கரண்டி
வெள்ளை எள்ளு – ஒரு மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – கால் கப்
தக்காளி – ஒன்று
நடுத்தரமான பெரிய வெங்காயம் – ஒன்று
மல்லித் தூள் – ஒரு மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் – அரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
கொத்தமல்லி – 2 கொத்து
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
புளி – நெல்லிக்காய் அளவு
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – 1/4 கப்

சிறிய அளவிலான உருண்டைக் கத்தரிக்காய் இந்த கறி வகைக்கு மிகவும் உகந்தது. கத்தரிக்காயின் மேல் காம்பை மட்டும் நீக்கி, நான்காக கீறி வைத்துக் கொள்ளவும். தனித்தனியே துண்டங்களாக வெட்டி விடக் கூடாது. கத்தரிக்காய் முழுதாக இருக்கவேண்டும்.

வெங்காயம், தக்காளியை சற்றுப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு விழுதினை அரைத்து ஒரு தேக்கரண்டி அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

வாணலியில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, நான்காக கீறி வைத்துள்ள கத்திரிக்காய்களைப் போட்டு மூடி வைத்து வேக விடவும். இரண்டு நிமிடம் சென்றதும் திறந்து வதக்கி விட்டு மீண்டும் ஒரு நிமிடம் மூடி வைக்கவும். நன்கு வெந்ததும் கத்தரிக்காய்களை எடுத்து தனியே வைத்துவிடவும்.

வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நறுக்கின வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.

அதனுடன் வறுத்த வேர்க்கடலை, மல்லித் தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கி எடுத்து வைக்கவும்.

வெறும் வாணலியில் எள்ளு போட்டு வறுத்து எடுக்கவும். எள்ளுடன் வதக்கி வைத்துள்ளவற்றை சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி ஊற்றி காய்ந்ததும் மிளகாய் தூள் போடவும். எண்ணெய்யில் மிளகாய்த்தூள் சேர்ப்பதால் நல்ல வண்ணம் கிடைக்கும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள விழுதை போட்டு ஒரு நிமிடம் கிளறவும். நன்கு கொதிக்கவிடவும்.

புளியை 1/4 கப் தண்ணீர் ஊற்றி திக்காக கரைத்து, கொதிக்கும் குழம்பில் ஊற்றவும். உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும். புளியை அரைக்க வேண்டிய பொருட்களுடன் சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்.

ஒரு நிமிடம் கழித்து திறந்து, வேக வைத்து எடுத்துள்ள கத்தரிக்காய்களைப் போட்டு கிளறி 30 விநாடிகள் கழித்து இறக்கி விடவும்.

கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும். நாவில் நீர் ஊறச் செய்யும் சுவையான கத்தரிக்காய் கடலைக் கறி தயார்.

Loading...
Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors