கத்தரிக்காய் பொரிக்கறி

கத்தரிக்காய் – 2 பெரியது (450 – 500 g)
வெங்காயம் – 1 பெரியது
பச்சை மிளகாய் – 3
உள்ளி – 4 பல்லு
உருண்டைக் கடலை – 1/2 டம்ளர்
பழப்புளி – ஒரு எலுமிச்சைப்பழம் அளவு
பால் – 1/2 டம்ளர் (தேங்காய் பால் எனில் முதல் வடி, பசும்பால் எனில் whole milk)
கறித்தூள் – ஒரு மேசைக்கரண்டி
காரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 2 தேக்கரண்டி
எண்ணெய் – 400 மில்லி

தேவையான பொருட்களை தயாராய் எடுத்து வைத்துக்கொள்ளவும். கடலையை முதல்நாள் இரவே ஊற வைத்துவிடவும்.

கத்தரிக்காயை சிறிய அரைவட்டத் துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் நீரெடுத்து 1 தேக்கரண்டி உப்பு போட்டு அதனுள் போடவும். வெங்காயத்தை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகப் பிளந்து வைக்கவும். உள்ளியைத் தட்டி, தோல் நீக்கி வைக்கவும்.

கத்தரிக்காயை மெதுவாக பிழிந்தெடுத்து, பொன்னிறமாகப் பொரித்து, ஒரு பேப்பரில் போடவும். அதேபோல் ஊறிய கடலையையும் பொரித்து (ஓரளவு பொரித்தால் போதும்), ஒரு பேப்பரில் போடவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.

கொஞ்சம் நிறம் மாறியதும், உள்ளியைப் போட்டு வதக்கவும்.

உள்ளியும் வதங்கியதும், அடுப்பை அணைக்கவும் அல்லது பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைத்து, கறித்தூளைப் போட்டு பிரட்டவும்.

ஒரு டம்ளம் வெந்நீரில் புளியைக் கரைத்து, 1 தேக்கரண்டி உப்பும் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அடுப்பை எரியவிடவும். (புளி முழுவதையும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நன்கு கரைத்து வடித்தெடுத்து விடவும்).

புளித்தண்ணீர் சூடாகியதும், பாலைச் சேர்த்துக் கொதிக்கவிடவும்.

கொதிவந்ததும், முதலில் கடலையைச் சேர்த்து 2 நிமிடம் பிரட்டவும்.

பின்னர் பொரித்த கத்தரிக்காயைப் போட்டுப் பிரட்டவும்.

நன்கு கிரேவி வற்றியதும். அடுப்பால் இறக்கவும். இறக்குவதற்கு முன் கரம் மசாலா போட்டு பிரட்டவும்.

சுவையான கத்தரிக்காய்ப் பொரிக்கறி இதோ ரெடி. பிறியாணிச் சோற்றுக்கு இது மிகவும் பொருந்தக்கூடிய கறி.

Categories: Kuzhambu Recipes Tamil, Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Recent Recipes

Sponsors