முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி,murungai keerai paruppu usili

தேவையான பொருட்கள்: முருங்கைக் கீரை ஒரு கட்டு, கடலைப்பருப்பு, து,பருப்பு இரண்டும் சமமாய்க் கலந்தது ஒரு கிண்ணம், மி.வத்தல், நாலில் இருந்து ஆறு வரை, உப்பு, பெருங்காயம்.

முருங்கைக் கீரை ஒரு கட்டு: வீட்டிலே முருங்கை மரம் இருந்தா கீரையை நல்ல இளங்கீரையாகப் பார்த்து பறிச்சுக் கொள்ளவும்.கீரையைப் பறிச்சோ அல்லது வாங்கியோ வச்சாச்சா? இப்போ கீரையை நல்லா ஆயணும். குச்சிகளை எல்லாம் ஆய்ந்து கீரையை மட்டும் தனியா எடுத்து நறுக்கி வச்சுக்கணும். நறுக்கினப்புறமா நல்லாத் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க கீரையை.

து.பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப் இரண்டையும் சேர்த்துக் கழுவி நனைச்சு வைக்கணும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறட்டும். அப்புறமாய் மி.வத்தல் உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி, அல்லது கட்டியானால் பருப்போடயே சேர்த்து ஊற வைச்சுடலாம். எல்லாத்தையும் நன்கு நைசாக அரைச்சுக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையை ஒரு வாயகன்ற பாத்திரத்தில் போட்டுக்கவும். அரைச்சதை எடுத்ததும் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் ஜலம் விட்டு மிச்சம், மீதி இருக்கும் பருப்புக் கலவையை எடுத்துக் கொண்டால் ரசத்துக்கு விளாவிடலாம். அது தனியா வச்சுப்போம். இப்போ பாத்திரத்தில் போட்ட பருப்புக் கலவையில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அதை இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். வெந்த கலவையை ஒரு ஸ்பூனால் குத்தினால் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

வெந்த கலவை வெளியே எடுத்து ஆறினதும் உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், இந்த அளவுக்குக் குறைந்த பட்சமாய் ஒரு கப் எண்ணெயாவது தேவை. எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்புப் போட்டு வெடித்ததும் கருகப்பிலை சேர்த்துப் பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்கு உதிர்ந்து வரும் வரை கிளறவும். பின்பு சூடாக இருக்கும்போதே, மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்போடு பரிமாறவும்.

Loading...
Categories: Saiva samyal, Tamil Cooking Tips, சைவம்

Leave a Reply


Sponsors