எலும்புகளை பலப்படுத்தும் அரைக்கீரை,arai keerai maruthuvam

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள பக்கவிளைவில்லாத மருத்துவம் குறித்து பார்த்து வருகிறோம். அந்தவகையில், எலும்புகளை பலப்படுத்தும் மருத்துவம் பற்றி பார்க்கலாம். எலும்பு பலமாக இருந்தால்தான் உடல்நலம் நன்றாக இருக்கும். வயது அதிகமாகும்போது எலும்புகள் பலம் குறையும். எலும்புகள் தேய்மானம் அடைகின்றன. இதனால் நடப்பதற்கு சிரமம், கூன் விழுவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். அரைக்கீரை, முருங்கை கீரை, புளிச்சை கீரை ஆகியவை எலும்புகளை பலப்படுத்தும் மருந்துகளாக விளங்குகின்றன.

அரைக்கீரையை பயன்படுத்தி எலும்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அரைக்கீரை, இஞ்சி, பனங்கற்கண்டு.
செய்முறை: அரை கீரையை அரைத்து சாறு எடுக்கவும். இந்த சாறு 20 முதல் 30 மில்லி வரை எடுக்கவும். இதனுடன், 10 மில்லி இஞ்சி சாறு கலக்கவும். இதுடன், சிறிது பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை, வடிகட்டி 48 நாட்கள் குடித்துவர எலும்புகள் பலம்பெறும். எலும்புகளில் உள்ள கால்சியம் குறைபாடு நீங்கும்.

பல்வேறு நன்மைகளை கொண்ட அரைக்கீரையில் இரும்பு சத்து, வைட்டமின் ஏ,சி சத்துக்கள், சுண்ணாம்பு சத்து மிகுந்துள்ளன. உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய நார்ச்சத்து இதில் மிகுதியாக உள்ளது. பற்கள் தொடங்கி பாதம் வரை உள்ள எலும்புகள் பலம்பெற கால்சியம் சத்து அவசியம். பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, வைட்டமின் ஏ, டி சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட்டுவர எலும்புகள் பலம் பெறும். உடற்பயிற்சி செய்வதாலும் எலும்புகள் பலம் அடைகிறது. சூரிய கதிர்களில் வைட்டமின் டி சத்து உள்ளது. இது எலும்புகளுக்கு பலம் கொடுக்கும்.

முருங்கை கீரையை பயன்படுத்தி கால்சியம் குறைப்பாட்டை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: முருங்கை கீரை, வெண்ணெய், கேழ்வரகு, உப்பு, மிளகுப்பொடி.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது வெண்ணெய் எடுக்கவும். இதனுடன் முருங்கை கீரை, பூ சேர்த்து வதக்கவும். சிறிது கேழ்வரகு மாவு, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து வேகவைத்து, 48 நாட்கள் சாப்பிட்டுவர கால்சியம் குறைபாடு நீங்கும். கழுத்து வலி, இடுப்பு வலி பிரச்னைகள் இல்லாமல் போகும்.

முருங்கை கீரை எலும்புகளுக்கு பலம் தரும் மருந்தாகிறது. கால்சியம், இரும்பு, வைட்டமின் ஏ, சி, டி மற்றும் நார்சத்துக்களை உள்ளடக்கியது. தினமும் முருங்கை கீரையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. தண்ணீர் விட்டான் கிழங்கை பயன்படுத்தி எலும்புகள் பலம்பெறும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: தண்ணீர் விட்டான் கிழங்கு, பனங்கற்கண்டு, பால். செய்முறை: மருந்துக் கடைகளில் கிடைக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி ஒரு ஸ்பூன் எடுக்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து வடிகட்டி குடித்துவர எலும்புகள் பலம்பெறும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு உள் உறுப்புகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. கால்சியம், இரும்பு சத்துக்களை உள்ளடக்கியது. பாலாடை, மோர் ஆகியவை எலும்புகளுக்கு பலம் தரும். புளிச்சை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் எலும்பு பலம்பெறும். உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கும்.
சிராய்ப்பு, தீக்காயங்களுக்கான மேல்பூச்சு மருந்து குறித்து பார்க்கலாம். இதற்கு உருளைகிழங்கு மருந்தாகிறது. உருளை கிழங்கை பசையாக்கி மேல் பூச்சாக போடுவதால் சிராய்ப்பு, தீக்காயங்கள் விரைவில் குணமாகும்.

Loading...
Categories: arokiya unavu in tamil, Maruthuva Kurippugal in Tamil

Leave a Reply


Sponsors