கர்ப்ப கால உடல்பருமன்,karpa kala udal paruman tips in tamil

கர்ப்பகாலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு இல்லாமலும் வைத்திருப்பார்கள். இந்த இரண்டின் காரணமாக கர்ப்பிணிகளின் உடல் எடை எக்குத்தப்பாக எகிறிவிடும். இப்படி ஏறிய எடை, பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். பலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? எது நார்மல்? எது அசாதாரணம்? விளக்கமாகச் சொல்கிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

கர்ப்ப காலத்தில் எல்லோரும் ஒரே மாதிரி யாக எடை அதிகரிப்பதில்லை. ஒரே கர்ப்பிணிக்கு ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் வெவ்வேறு மாதிரியான எடை அதிகரிப்பு இருக்கும். உயரம், எடை, வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் மருத்துவர், நீங்கள் எவ்வளவு எடையைக் கூட்டினால் போதுமானது என்பதைச் சொல்வார். தோராயமாக 9 கிலோ இருக்கலாம். குழந்தையின் 3 கிலோ தனி. மொத்தத்தில் அதிகபட்சமாக பன்னிரண்டரை கிலோ எடை அதிகரிக்கலாம்.

 

கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பைவிட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14-வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
நல்ல ஊட்டம் பெறும் கர்ப்பிணிக்கு சுமார் 20 வாரம் எடை வரை அதிகரிப்பு இருக்கும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் 30-வது வாரத்துக்குள் எடை அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். கர்ப்ப காலத்தில் உடலின் பல உறுப்புகள் (குறிப்பாக மார்பகம், வயிறு, கருப்பை, அதிலுள்ள குழந்தை மற்றும் பனிக்குடம் அதிலுள்ள நீரின் அளவு ஆகியவை) அளவில் வளர்ச்சியடைவதாலும், ரத்த ஓட்டம் சுமார் 30 சதவிகிதம் அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பு இருக்கும். இதனால்தான் கர்ப்பிணி 9 கிலோ எடை இருக்க வேண்டும்.

உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.கர்ப்பிணிக்கு வழக்கத்துக்கு மாறாக எடை உயர்ந்தால், அவர் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்பதை மருத்துவர் தெரிந்துகொள்வார். எனவே, கர்ப்பிணி வழக்கமாக உணவில் என்ன சாப்பிடுகிறார், எதை கூடுதலாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காபி அல்லது தேநீர் அருந்தலாம். இதில் குறைந்த கலோரிச் சத்து இருக்கும். அதே போல
அஜீரணக் கோளாறை உண்டாக்கும் வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் டீ, கிரீம் போன்றவற்றையும்
தவிர்ப்பது நல்லது.

Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Recent Recipes

Sponsors