பொடுதலை,poduthalai benefits in tamil,poduthalai Mooligai Maruthuvam

பொடுதலை முழுத் தாவரமும் கைப்பு, துவர்ப்புச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. பொடுதலை தாதுக்களைப் பலப்படுத்தும்; கோழை அகற்றும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். பொடுதலை வீக்கத்தைக் கரைக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; சீதக் கழிச்சல், இருமல், வெள்ளை படுதல் போன்றவற்றையும் குணமாக்கும். பொடுதலை சிறுசெடி வகையைச் சார்ந்தது. தரையோடு கிடைமட்டமாக படர்ந்து வளரும். பற்கள் கொண்ட சொர சொரப்பான கரண்டி வடிவ இலைகளையும், கதிரான பூங்கொத்துகளையும் உடையது. பொடுதலை ஆண்டு முழுவதும் பூக்கள், காய்களுடன் காணப்படும். பொடுதலை மலர்கள் சிறியவை. கருஞ்சிவப்புடன் கூடிய வெண்ணிறமானவை. பிளவுபட்ட நாக்குப் போன்ற தோற்றம் உடையவை. பொடுதலை விதைகள் நுண்ணியவை. தமிழகமெங்கும் ஈரப்பாங்கான நிலங்கள் வயல்கள், நீர்க் கரைகளில் பொடுதலை தானே வளர்கின்றது. களிமண் உள்ள ஆற்றங் கரையில் செழிப்பாக வளர்ந்திருப்பதைக் காண முடியும். கடற்கரை ஓரங்களில் மிகவும் அடர்த்தியாக வளர்ந்திருக்கும். பூற்சாம், பொறுதலை ஆகிய மாற்றுப் பெயர்களும் பொடுதலை தாவரத்திற்கு உண்டு. முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டது. பொடுதலை இலை, காய் ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.
பொடுதலையின் பயன்கள் :

பொடுகு பிரச்சனை குறைய, முடி உதிர்வதை தடுக்க பசுமையான பொடுதலை இலைகளை தேவையான அளவில் சேகரித்துக் கொண்டு, ஒரு கண்ணாடி சீசாவில் இட்டு அவை மூழ்கும் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி சூரிய வெளிச்சத்தில் 21 நாள்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் வடிகட்டி சீசாவில் வைத்துக் கொண்டு தினமும் தலையில் தேய்த்து வர வேண்டும்.
பொடுதலை இலையுடன் சம அளவு சீரகம் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு எருமைத் தயிர் அல்லது வெண்ணெயில் கலந்து குடிக்க வேண்டும். காலையில் மட்டும் 10 நாள்கள் இவ்வாறு தொடர்ந்து செய்து வர வெள்ளைபடுதல் குணமாகும்.
பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி மிளகு, சீரகம், உப்புச் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். குழந்தைகளுக்கான கழிச்சல் குணமாக ஒரு கைப்பிடி அளவு பொடுதலை இலைகளை வதக்கி, 10 கிராம் வறுத்த ஓமத்துடன் சேர்த்து அரைத்து ஒரு லிட்டர் நீரிலிட்டு ¼ லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி இரண்டு பாலைடை அளவு உள்ளுக்குள் கொடுக்க வேண்டும். 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 4 வேளை வரை கொடுக்கலாம்.
பொடுதலை இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பற்று போட கட்டிகள் உடையும். தலைப்பொடுகைக் குணமாக்கும் சிறப்பு கொண்டதாலேயே பொடுதலை என்கிற பெயர் இந்த தாவரத்திற்கு ஏற்பட்டது.
பொடுதலை இலைகளை அரைத்து பசையாக்கி, தலையில் தேய்த்து ½ மணி நேரம் ஊற வைத்துக் குளிக்க பொடுகு கட்டுப்படும். தலைக்கான சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்களின் தயாரிப்பில் பொடுதலை முக்கிய இடம் பெறுகின்றது.

Loading...
Categories: Maruthuva Kurippugal in Tamil, Mooligai Maruthuvam, மூலிகை மருத்துவம்

Leave a Reply


Sponsors