இன்று குருபெயர்ச்சி ஆரம்பம்: 12 ராசிகளில் எந்த ராசியினருக்கு அதிர்ஷ்டத்துடன் பணமழை கொட்டும்? எந்தெந்த ராசியினருக்கு எச்சரிக்கை?

மேஷம்

நிதானமே பிரதானம்

அஷ்டமத்து குரு என்ற சிரமமான காலத்திற்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். இத்தனை நாட்களாக குருவின் பார்வை பலத்தினைப் பெற்றிருந்த உங்களுக்கு வரவிருக்கும் ஒரு வருட காலமும் குருவின் பார்வை இல்லாததால் கடிவாளமற்ற குதிரையாக ஓட வேண்டியிருக்கும். சுயக்கட்டுப்பாடும், நிதானமும் இருந்தால் வெற்றி நிச்சயம். இந்த ஒரு வருடத்திற்கு மற்றவர்களின் பிரச்னைகளில் தலையிடாதீர்கள். உங்களது தைரியம்தான் உங்களை வழிநடத்திச் செல்கிறது என்றாலும் ஓவர் கான்ஃபிடன்ட் உடம்பிற்கு ஆகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன்னம்பிக்கையும். தைரியமும் பெற்றிருந்தாலும் அதிகமாக உணர்ச்சிவசப்படாதீர்கள். எப்பொழுதும் நிதானத்தையே பிரதானமாகக் கொண்டு செயல்பட்டு வருவதுதான் உங்களுக்கு நல்லது. நெருங்கி வந்த கல்யாண யோகம் தடைபடலாம். அதே நேரத்தில் குழந்தை பேறுக்காகக் காத்திருப்போருக்கு காலம் கனிந்து வரும்.

வியாபாரத்தில் முன்னேற்றமும், பணவரவும் சீராக இருந்து வரும். குடும்பத்தில் செலவிற்கேற்ற வரவு தொடரும். அசையா சொத்துக்கள் வாங்குவதில் ஈடுபாடுகள் தோன்றும். வெளியில் கொடுத்த பணத்தினை வசூல் செய்வதில் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தோள்வலி, முதுகுவலி, கழுத்துவலி ஆகியவை பாடாய்ப்படுத்தும். குழந்தைகளின் மேற்படிப்பிற்காக அதிகம் செலவழிக்க வேண்டியிருக்கும். தொழில்முறையில் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் அதிக அலைச்சலைக் காண்பீர்கள். உத்யோக ரீதியாக இடம் மாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றம் செய்ய வாய்ப்புகள் தோன்றும். முடிந்த வரை புதிதாக எந்தவித முயற்சியும் மேற்கொள்ள வேண்டாம்.

எந்த ஒரு செயலை செய்யும் முன்னர் நிதானமாக யோசனை செய்து, அனுபவம் மிக்கவர்களிடம் நன்கு கேட்டறிந்து செய்வதே நல்லது. தொழிலில் முன்னேற்றம் உண்டாக கடுமையான முயற்சியும் பொறுமையும் தேவை. சுயதொழில் செய்வோர் எதிர்பார்க்கும் லாபத்தினைக் காண சிறிது காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். பணவரவு சிறப்பாக இல்லாவிட்டாலும் சீராக இருக்கும். தொழில் முறையில் வாங்கிய கடனை அடைக்கத் தேவையான வரவினை நிச்சயம் காண்பீர்கள். வெளிநாட்டு பணிக்காகக் காத்திருப்போருக்கு அதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கெனவே நிலுவையில் உள்ள சொத்து தொடர்பான வழக்குகள் சமாதானத்திற்கு வரும். வெகு நாட்களாக விலகியிருந்த சொந்தம் ஒன்று உறவு நாடி வரக்கூடும். பெண்கள் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்.

விட்டுக்கொடுத்து செல்வதுடன், நிதானமாகப்பேசி காரியத்தினை சாதித்துக்கொள்வது நல்லது. வீட்டில் உள்ள முதியோர்களின் அனுபவ அறிவை பெற்று செயல்பட்டால் நன்மை கிடைக்கும். தாய்வழி உறவும், சகோதரர்களுடனான உறவும் நல்ல முறையில் அமையும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. திருமண வயது உடைய பிள்ளைகளுக்கு திருமண யோகம் வந்து சேரும். உத்யோகத்தில் உள்ள பெண்களுக்கு அதிக அலைச்சல் ஏற்படும். வீடு, மனை வாங்குவதற்கான முயற்சியினை தள்ளிவையுங்கள். நகை, உடைகளுக்கு அதிகம் செலவழிக்காமல் நேரத்தினை உணர்ந்துகொண்டு சேமிப்பில் ஈடுபடுங்கள். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று சிரமத்தினைத் தந்தாலும் பொறுமையுடன் இருந்தால் பூமியினை ஆளலாம் என்பதையே நினைவூட்டுகிறது.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமை தோறும் வீட்டினில் ஸ்கந்த குரு கவசத்தினைப் படித்து வாருங்கள். வருகின்ற குரு பெயர்ச்சி நாளில் சாம்பார் சாதம் நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது திருவண்ணாமலை திருத்தலத்திற்குச் சென்று அருணாசலேஸ்வரர் ஆலய வளாகத்திற்குள் அமைந்திருக்கும் கம்பத்து இளையனார் சந்நதிக்குச் சென்று தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ளுங்கள். நிதானத்தால் வெற்றி காண்பீர்கள்.

ரிஷபம்

மங்கள வாழ்வு மலரும்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடத்திற்கு வரும் குரு பகவான் சிறப்பான நற்பலன்களை அள்ளித்தர உள்ளார். தங்களது பேச்சுத்திறனால் அனைத்து காரியங்களையும் வெகு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இந்த குரு பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். திருமண யோகம் வருவதால் விரைவில் கெட்டிமேளம் கொட்டும். பணவரவு சிறப்பாக அமையும். ஆடை, ஆபரணங்கள் வந்து குவியும். இத்தனை நாட்களாக இருந்து வந்த இடைஞ்சல்கள் விலகும். வீடு கிரஹப்ரவேசம் செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். கலைத்துறையினர் நல்ல லாபத்தினைக் காண்பர். இதுநாள் வரை நோய்வாய்ப்பட்டிருந்தவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். நிலுவையில் இருந்து வந்த முன்னோர் வழிச் சொத்துக்கள் வந்து சேரும். சொத்து சம்பந்தமான பிரச்னைகளில் இருந்து நல்லதொரு முடிவைக் காண்பீர்கள். சொந்த, பந்தங்களுடனான உறவுகள் சிறப்பாக அமையும். உடன்பிறந்தவர்களுடனான மனஸ்தாபம் மறைவதுடன் நெருக்கமான உறவு அதிகரிக்கும். அரசாங்க உத்யோகத்திற்காக காத்திருப்போருக்கு வேலைவாய்ப்பு கைகூடும். உத்யோகத்தில் உள்ளவர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நினைத்ததை நினைத்தபடி செய்வதற்கான நேரமிது. புது முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பணவரவு தாராளமாக வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்குவதற்கு வாய்ப்புகள் தேடி வரும்.

ஆடை, ஆபரணங்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். நல்ல நேரத்தினைப் பயன்படுத்திக் கொண்டு அநாவசியமாக செலவழிக்காமல் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். குருவின் சாதகமான பார்வை இருந்தாலும் அஷ்டமத்துச் சனியின் காலம் தொடர்வதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்நிய தேசம் செல்ல நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புக்கள் கைகூடும். குழந்தைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக அமையும். குடும்ப முன்னேற்றம் சிறப்பாக அமையும். கணவன், மனைவிக்கிடையே அவ்வப்போது மனஸ்தாபங்கள் தோன்றி மறையும். இரவினில் தூக்கமின்மை காரணமாக அவஸ்தைப்படுவீர்கள். வண்டி, வாகனங்களை புதிதாக மாற்றிக் கொள்வதற்கான யோகம் உண்டு.

மாணவர்கள் குருவின் அருளால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். எழுத்துப் பயிற்சியில் ஈடுபடுவது கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும். பெண்களுக்கு குரு பெயர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. திருமணத் தடை கண்டு வந்தவர்களுக்கு வெகு விரைவில் கெட்டிமேளம் கொட்டும். குழந்தைப் பேறுக்காகக் காத்திருப்போர் வம்சவிருத்தி காண்பர். குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தைகளின் செயல்களில் திருப்தி அடைவீர்கள். உத்யோகத்தில் உள்ள பெண்கள் பதவி உயர்வு காண்பார்கள். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்னைகள் காணாமல் போகும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களின் வாழ்வினில் மகிழ்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் விதமாக அமைந்துள்ளது.

பரிகாரம்:

வெள்ளிக்கிழமை தோறும் பெண்கள் பஞ்சமுக குத்துவிளக்கினை ஏற்றி வைத்து மஹாலக்ஷ்மி பூஜை செய்து வாருங்கள். ஆண்கள் காமதேனு படத்தினை வைத்து பூஜை செய்து வழிபடுவது நன்மை தரும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கித்தந்து வழிபடுங்கள். நேரம் கிடைக்கும்போது புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருக்கோகர்ணம் திருத்தலத்திற்குச் சென்று அரைக்காசு அம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ள மனநிம்மதி காண்பீர்கள்.

 

மிதுனம்

ஆறில் குரு ரோக நிவாரணம்

கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் சாதகமான சஞ்சாரத்தினாலும், பார்வை பலத்தினாலும் குறிப்பிடத் தகுந்த நன்மையைக் கண்டு வந்த உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சற்று சிரமத்தினைத் தரக்கூடும். இதுநாள் வரை ஐந்தாம் இடத்தில் வாசம் செய்து வந்த குரு பகவான் வரும் 04.10.2018 முதல் ஆறாம் இடத்திற்கு வர உள்ளார். சகட யோகம் என்று சொல்லப்படக்கூடிய குருவின் ஆறாம் இடத்து சஞ்சாரம் இறங்கிய காரியங்களில் தடங்கல்களை ஏற்படுத்தும். எந்த ஒரு விஷயமும் எளிதில் முடிவடையாது இழுபறியைத் தோற்றுவிக்கும். எடுத்த காரியங்கள் எளிதில் முடிவடையாது தாமதமாவதால் சிறிது மன சஞ்சலத்தைக் காண்பீர்கள். உங்களுடைய சிந்தனைகளில் சிறிது மாற்றத்தை உணர்வீர்கள். செயல்திட்டங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாவீர்கள். கொள்கைகளில் சிறிது விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கும்.

ஆறில் குரு பகவான் அமர்வது சிரமம் என்றாலும் அவரது சிறப்புப் பார்வை தன ஸ்தானத்தின் மீது விழுவதால் பொருளாதார நிலையில் பிரச்னை ஏதுமின்றி தனவரவு என்பது தொடர்ந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பேசும் வார்த்தைகளில் இனிமையை உணர்வீர்கள். ஆறாம் இடத்து குரு ஆத்ம ஞானத்தைத் தருவதோடு, ஆன்மிகப் பணிகளிலும் ஈடுபடுத்துவார். நியாய, தர்மங்களை அலசி ஆராய்ந்து அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறும் திறன் வளரும். மந்திரப் பிரயோகம் என்பதை ஆறாமிடத்து குரு தருவார் என்பதால் ஆன்மிக விஷயங்களில் கவனத்தைக் கொண்டு செல்வீர்கள். உங்களது பேச்சுக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். ஆறாம் இடத்தில் குருவின் வாசம் உடல்நிலையை சற்று அசைத்துப் பார்க்கும். சர்க்கரை வியாதிக்காரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக தொடர்ந்து கொண்டிருக்கும் சரும வியாதிகள், ஆஸ்துமா, அலர்ஜி போன்ற ரோகங்களிலிருந்து விடுதலை பெறுவீர்கள். ஆறாம் வீட்டு குருபகவான் நீண்ட நாள் ரோகத்திலிருந்து நிவாரணம் தருவார். அதிகப்படியான உழைப்பின் காரணமாக அவ்வப்போது உடல் அசதியால் அவதிப்பட நேரிடும். நிலுவையில் இருந்து வரும் கடன்பிரச்னைகள் முடிவிற்கு வந்தாலும் புதிதாக கடன் வாங்குவதற்கான சந்தர்ப்பம் உண்டாகலாம். சயன சுக ஸ்தானத்தின் மீதான குருபகவானின் பார்வை இரவினில் நிம்மதியான உறக்கத்தினைத் தரும். உத்யோக ரீதியாக அதிக அலைச்சலை சந்திக்க வேண்டி இருந்தாலும் பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம். பத்தாம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீதும் குருபகவானின் சிறப்புப் பார்வை தொடர்வதால் தொழில் ரீதியாக எவ்விதத் தடங்கலும் இருக்காது. உத்யோகஸ்தர்கள் பதவி உயர்வோடு விரும்பிய இடமாற்றத்தினையும் அடைவார்கள்.

மற்ற பணியாளர்களின் ஆதரவின்றி தனித்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும் என்பதால் சற்று அதிகப்படியான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டியிருக்கும்.2019 பிப்ரவரி மாத வாக்கில் நீங்கள் கடுமையாக உழைப்பதுடன் 10 பேர் செய்ய வேண்டிய பணியை தனியொரு மனிதனாக செய்து முடித்து சாதிப்பீர்கள். வெளிநாட்டு உத்யோகத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மார்ச் மாத வாக்கில் சாதகமான தகவல்கள் வந்து சேரும். ஆடிட்டிங், வங்கி, இன்ஸ்யூரன்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களும், உணவுப் பொருட்களை வியாபாரம் செய்பவர்களும் இந்த வருடத்தில் நல்ல நிலையினை அடைவார்கள். வியாபாரிகள் தங்கள் தொழிலில் தனித்திறமையின் மூலம் நற்பெயரை அடைவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியத்தினை உடனுக்குடன் கண்டு வருவீர்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி அதிர்ஷ்ட வாய்ப்புகளைக் குறைத்தாலும், தன் முயற்சியால் வெற்றி காண வழிவகை செய்யும்.

பரிகாரம்:

பிரதி புதன்கிழமைதோறும் தவறாமல் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. குரு பெயர்ச்சி நாளில் வெண்பொங்கல் நைவேத்யம் செய்து அருகில் உள்ள ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்ய நன்மை உண்டாகும். நேரம் கிடைக்கும்போது சுசீந்திரம் திருத்தலத்திற்குச் சென்று ஆஞ்சநேய ஸ்வாமியை வழிபட்டு பிரார்த்தனை செய்ய தடைகள் விலகி வெற்றி கிடைக்கும்.

 

கடகம்

ஐந்தில் குரு ஐஸ்வர்யம் தரும்

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ய ஸ்தானத்திற்கு அதிபதியான குரு பகவான் நான்காம் இடமாகிய சுக ஸ்தானத்திலிருந்து ஐந்தாம் இடத்திற்கு இடம் பெயர உள்ளார். ஐந்தாம் இடம் என்பது சிந்தனையைப் பற்றிச் சொல்லும் ஸ்தானம் என்பதால் அங்கு வர உள்ள குரு பகவான் மனதில் நற்சிந்தனையைத் தோற்றுவிப்பார். மேலும் குருவின் சிறப்புப் பார்வையும் ராசியின் மீது விழுவதால் மனதில் தோன்றும் நல்லெண்ணங்களை உடனுக்குடன் செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். தன்னால் முடியுமா என்ற தயக்கம் மறைந்து தனித்துச் செயல்பட்டு சாதிப்பீர்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மதிப்பும், மரியாதையும் உயரும். பெயர் கெட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தால் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கத் தயங்குவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவிடும் வகையில் பரோபகார சிந்தனைகள் மனதினை அதிகம் ஆக்கிரமிக்கும். ஐந்தாம் இடத்து குருவினால் சாதுக்கள், சந்யாசிகள், அறிவிற் சிறந்த சான்றோர்களுடனான சந்திப்பு உண்டாகும்.

மனதில் சாந்தமும், வாழ்வியலில் நிம்மதியும் காண்பீர்கள். எதிரிகள், போட்டியாளர்கள், பொறாமைக்காரர்கள் ஆகியோர் உங்களுக்கு வழிவிட்டு விலகி நிற்பார்கள். ராசியின் மீது விழும் குருவின் பார்வை உங்களை மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்படச் செய்யும். உங்கள் கருத்துக்களில் உறுதியாய் நிற்பீர்கள். குருபலனின் அனுக்ரஹத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் ஆலோசனைகள் அடுத்தவர்களுக்கு மிகுந்த உதவியாய் அமையும். மனதிற்குப் பிடித்தமானவற்றை அனுபவிக்கும் வாய்ப்புகள் நாடி வரும். குடும்பத்தினரின் மனமகிழ்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படுவீர்கள். உறவினர்களால் அனுகூலம் காண்பீர்கள். மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களைப் பெற்றுத் தேர்ச்சி பெறுவதோடு உயர்கல்வி மாணவர்கள் நினைத்த பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள்.

வீடு, மனை போன்ற அசையாச் சொத்துக்கள் சேரும். விலகியிருந்த சொந்தக்காரர் ஒருவர் தன் தவறினை உணர்ந்து மனம் திருந்தி உங்களை நாடி வருவார். சேமிப்பாக வைத்திருந்த சொத்து ஒன்றினை விற்று தனலாபம் அடைவீர்கள். உறவுமுறையில் இதுநாள் வரை நிலுவையில் இருந்துவந்த கடன்தொகைகள் வசூலாகும். ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் குருவின் அனுக்ரஹத்தால் கடந்த காலத்தில் திருமணத்தடை கண்டவர்கள் இந்த வருடத்தில் மணவாழ்வினில் அடியெடுத்து வைப்பார்கள். குருபலத்தின் காரணமாக இல்லத்தில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாகப் பிள்ளைப்பேற்றிற்காகக் காத்திருப்போரின் இல்லங்களில் மழலைச்சத்தம் கேட்கும். பிள்ளைககளின் வாழ்வியல் தரம் உயர்வடையும். குருவின் பார்வையால் அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள்.

பல் மருத்துவர்கள், எலும்புமுறிவு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வருடத்தில் சிறப்பானதொரு நிலையினை அடைவார்கள். சமையல் கலைஞர்கள் வாழ்வினில் தங்களது தரத்தினை உயர்த்திக்கொள்வார்கள். தொழில் ரீதியாக இடமாற்றத்தினை சந்திக்க நேர்ந்தாலும் பதவி உயர்வால் இடமாற்றம் குறித்த வருத்தம் காணாமல் போகும். அயல்நாட்டுப் பணிக்காகக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் நேரடிப்பார்வை விழுவதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். கலைஞர்கள் தங்களுக்குரிய அங்கீகாரமும் விருதும் வந்து சேரக் காண்பார்கள். வியாபாரிகள் வருகின்ற ஒரு வருட காலத்திற்கு சீரான தனலாபம் அடைவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தரும் வகையில் அமையும்.

பரிகாரம்:

திங்கட்கிழமைதோறும் அருகில் உள்ள அம்பிகையின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது நன்மை தரும். மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் கற்கண்டு பால் சாதம் நைவேத்யம் செய்து அம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது திருக்கடையூர் திருத்தலத்திற்குச் சென்று அபிராமி அன்னையை தரிசித்து வணங்க வாழ்வினில் வளம் பெறுவீர்கள்.

 

சிம்மம்

நான்கிலே குரு நல்லறிவு கிட்டும்

கடந்த ஒரு வருட காலமாக இருந்து வந்த குரு பகவானின் மூன்றாம் இடத்துச் சஞ்சாரம் முடிவிற்கு வந்து நான்காம் இடமாகிய சுகஸ்தானத்தில் குருபகவானின் அமர்வைப் பெற உள்ளீர்கள். இதனால் வாழ்வியல் நிலையில் நிம்மதியான சுகத்தினை உணர்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் நன்கு ஆலோசித்து செயல்படும் திறன் ஓங்கும். குடும்பத்தில் ஒற்றுமையுணர்வு அதிகரிக்கும். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். கௌரவம், அந்தஸ்து ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதால் அதிகப்படியான செலவினத்திற்கு ஆளாவீர்கள். ஆடம்பர செலவுகள் அதிகரிக்கும். நான்காம் இடத்து குருவினால் ஆடை, ஆபரணங்கள் சேரும். சுக சௌகர்யங்கள் நிறைந்து விளங்கும். தாயார் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னோர்கள் இழந்த சொத்துக்களை மீட்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சதா உங்களைச் சுற்றி மனிதர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள்.

நீங்கள் இட்ட பணியைத் தட்டாமல் செய்யும் வகையில் பணியாளர்கள் அமைவார்கள். பணியாளர்களின் நலனுக்காக அதிகம் செலவழிப்பீர்கள். செலவுகளை ஈடுசெய்யும் வகையில் வரவு நிலையும் அதிகரிக்கும். குடும்பத்தில் செல்வமும், சுகமும் நிறைந்து விளங்கும். தனிப்பட்ட முறையில் உங்கள் அந்தஸ்து உயர்வதோடு அதிகாரமும் செல்லுபடியாகும் நிலை குருவின் சஞ்சாரத்தால் உருவாகிறது. எதிலும் அதிகாரத்தைப் பயன்படுத்தும் சிம்ம ராசிக்காரர்கள் குருவின் அருளால் நல்லறிவினைப் பெறுவதோடு நான்குபேர் மத்தியில் நல்லவன் என்ற பெயரினையும் பாராட்டினையும் பெறுவார்கள். குருவின் சாதகமான நிலையால் மாணவர்களின் கல்வித்தரம் உயரும். நல்ல மதிப்பெண்களோடு தேர்ச்சி பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் தாங்கள் விரும்பிய பாடப்பிரிவினில் இடம் கிடைக்கக் காண்பார்கள். வண்டி, வாகனங்கள் புதியதாய் சேரும்.

இன்னும் ஒரு வருட காலத்திற்கு அவ்வப்போது திடீர் பிரயாணங்கள் செய்ய நேரிட்டாலும் நல்ல வாகன சுகம் உண்டு. தாயார் வழி சொத்துக்கள் சேரும் அதே நேரத்தில் அவரது உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. விரய ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை அநாவசிய செலவுகளைக் குறைக்கும். குறிப்பாக இந்த வருடத்தில் மருத்துவ செலவுகள் அதிகம் இராது. 12ம் இடமாகிய சயன சுக ஸ்தானம் குருவின் அனுக்ரஹத்தினைப் பெறுவதால் இரவினில் நிம்மதியான உறக்கம் கொள்வீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். தம்பதியருக்கிடையே உள்ள தனிப்பட்ட பிரச்னைகளில் அந்நியர்களின் தலையீட்டினை எக்காரணம் கொண்டும் அனுமதிக்காதீர்கள். அந்நியர்களின் தலையீட்டால் குடும்ப உறவு பாதிப்பிற்கு உள்ளாகக்கூடும். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குருபகவானின் நேரடிப்பார்வை தொழில்முறையில் உங்களுக்கு மிகவும் சாதகமான நிலையை உருவாக்கித் தரும்.

அந்நிய தேசத்தில் நீண்ட நாட்களாகப் பணிபுரிந்து தாய் நாட்டிற்குத் திரும்ப விரும்பும் நபர்கள் அதற்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். உண்மையான உழைப்பினை வெளிப்படுத்த வேண்டிய காலம் என்பதால் தொழில் நிலையில் தொடர்ந்து ஓய்வற்ற நிலையையே சந்தித்து வருவீர்கள். அலுவலகத்திலும் சரி, இல்லத்திலும் சரி உங்கள் புகழ் பாடியே நன்றாக வேலை வாங்கிக் கொள்வார்கள். ஆயினும் புன்னகையோடு எடுத்த காரியத்தை முழு மூச்சுடன் செய்து முடிப்பீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உடனடியாகத் தேடி வரும். உத்யோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றத்தினை அடைவார்கள். குருபார்வை கிடைப்பதால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, விரும்பிய இடமாற்றங்கள் போன்ற சாதகமான சூழ்நிலைகள் உருவாகும். பலசரக்குக் கடை, ஹோட்டல் தொழில், ஸ்வீட் ஸ்டால், வித்தியாசமான தின்பண்டங்களை விற்பனை செய்தல் ஆகிய தொழில்களை செய்பவர்கள் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பார்கள். வியாபாரிகளின் தொழில் நிலை சிறக்கும். நவீன வியாபார உத்திகள் தொழில் முறையில் நல்ல வளர்ச்சியை உண்டாக்கும். பொதுவாக இந்த குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது.

பரிகாரம்:

ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் சரபேஸ்வரர் வழிபாட்டினைச் செய்து வாருங்கள். சரபேஸ்வரர் படத்தினை பூஜையறையில் வைத்து வணங்கி வருவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம் திருத்தலத்திற்குச் சென்று சரபேஸ்வரரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள எதிரிகள் காணாமல் போவதோடு நினைத்ததை சாதிக்கும் திறனையும் பெறுவீர்கள்.

 

கன்னி

முயற்சி திருவினையாக்கும்

கடந்த ஒரு வருட காலமாக சிறப்பான நற்பலன்களைக் கண்டு வந்த நீங்கள் தற்போது நடைபெற உள்ள குரு பெயர்ச்சியின் மூலம் சிறிது சிரமங்களையும், தடைகளையும் காண உள்ளீர்கள். சுக ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து மூன்றாம் இடத்திற்குப் பெயர இருப்பது பொருளாதார ரீதியாக சற்று சுமாரான பலன்களையே உண்டாக்கும். ஆயினும் மன உறுதியும், தைரியமும் கூடும். ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பாராத விதமாக அலைச்சல்களை சந்திக்க நேரிடும். எந்த ஒரு காரியத்தைத் துவக்கினாலும் முதலில் ஒரு தடங்கலும் அதன்பின் உங்களது விடாமுயற்சியால் அதில் வெற்றியும் கண்டு வருவீர்கள். குருவின் மூன்றாம் இடத்து சஞ்சாரம் மனோதிடத்தினை உங்களுக்கு அளித்தாலும், முக்கியமான பிரச்னைகளில் எளிதில் முடிவெடுக்க இயலாது சிரமத்திற்கு உள்ளாவீர்கள்.

எப்படிப்பட்ட விளைவையும் சந்தித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் இருந்து வந்தாலும் ராசிநாதன் புதன் என்பதால் ஒருவித எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டு வருவீர்கள். செயலைத் துவங்கும்போது உண்டாகும் தடங்கல் சற்றே மனசஞ்சலத்தை உருவாக்கினாலும் மதிநுட்பத்தால் நிதானமாக யோசித்து செயல்திட்டத்தை மாற்றி வெற்றி காண்பீர்கள். உடன்பிறந்தோர் உதவிகரமாய் செயல்படுவார்கள். புதிய நண்பர்கள் சேருவார்கள். இக்கட்டான நேரங்களில் உடன்பிறந்தோரின் உதவியால் வெற்றி காண்பீர்கள். பல புதிய மனிதர்களுடனான சந்திப்பு பல்வேறு அனுபவப் பாடங்களைக் கற்றுத் தரும். மாணவர்கள் தங்கள் கல்வி நிலையில் சிறிது சிரமத்தினைக் காண்பார்கள். ஞாபகமறதியினால் தேர்வு நேரத்தில் அவதிப்பட வேண்டியிருக்கும்.

பாடங்களை எழுதிப்பார்ப்பது நன்மை தரும். படித்து மனப்பாடம் செய்வதைவிட எழுதிப்பார்ப்பதே சிறந்தது என்பதை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் குறைவாகக் காணப்பட்டாலும் தன்முயற்சியினால் சிறப்பான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். தம்பதியருக்குள் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும். எனினும் ஏழாம் இடத்தின் மீதான குரு பகவானின் பார்வையால் வாழ்க்கைத் துணையோடு இணைந்து செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். வெற்றியைப் பெற்றுத் தரும் 11ம் இடத்தின் மேல் குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் அடுத்தவர்களுக்காக செய்யும் காரியங்கள் அனைத்திலும் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் கடமையைச் சரியாக செய்துமுடித்து மேலதிகாரிகளிடம் மிகுந்த நற்பெயரை அடைவீர்கள். உத்யோக ரீதியாக அவ்வப்போது தற்காலிக இடமாற்றத்தினை சந்திக்க நேரிடும். விடாமுயற்சியும் தனித்திறமையுடன் கூடிய செயல்பாடுகளும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும்.

பெயர் கிடைத்தாலும் அதற்குரிய தனலாபம் கிடைக்கவில்லையே என்ற மன வருத்தம் இருந்து வரும். இயந்திரங்கள், எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பணிபுரிபவர்கள் மிகுந்த முன்னேற்றம் காண்பார்கள். தொழில் ரீதியாக அடிக்கடி வெளியூர்ப் பிரயாணங்கள் செல்ல நேரிடும். அதிக அலைச்சல் உடல்நிலையை சோதித்துப் பார்க்கும் என்பதால் கவனத்துடன் இருப்பது நல்லது. வெளிநாட்டுப் பயணத்திற்காகக் காத்திருப்போருக்கு அதற்கான காலம் கனிந்து வரும். தொழில் ரீதியாக அதிக வேகத்துடன் செயல்படுவீர்கள். பல புதிய நண்பர்களை ஆங்காங்கே உருவாக்கிக்கொண்டு உங்கள் தொழிலினை அபிவிருத்தி செய்துகொள்ள வாய்ப்புகள் உருவாகும். வியாபாரிகள் தொழில் நிலையில் முன்னேற்றத்தைக் கண்டு வந்தாலும் எதிர்பார்க்கும் லாபத்தினை அடைய காத்திருக்க வேண்டியிருக்கும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி விடாமுயற்சியின் பேரில் வெற்றி தரும் வகையில் அமையும்.

பரிகாரம்:

புதன்கிழமை தோறும் ஸ்ரீ ஹயக்ரீவர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. பூஜையறையில் ஹயக்ரீவரின் படத்தினை வைத்தும் வணங்கி வரலாம். மன சஞ்சலம் அடையும் காலத்தில் ஹயக்ரீவரை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்யுங்கள். குழப்பத்திற்கான தீர்வு கிடைக்கும். நேரம் கிடைக்கும்போது கடலூரை அடுத்த திருவஹீந்திரபுரம் திருத்தலத்திற்குச் சென்று ஹயக்ரீவப் பெருமானை வழிபட்டு அர்ச்சனை செய்துகொள்ள மனவலிமை கூடும்.

 

துலாம்

சொல்வாக்கு செல்வாக்கு பெறும்

கடந்த ஒரு வருட காலமாக உங்கள் ஜென்ம ராசியில் அமர்ந்து நல்வழி காட்டிய குரு பகவான் தற்போது இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தில் வந்து அமர உள்ளார். பொதுவாக ஜென்ம ராசியை விட தன ஸ்தானத்தில் குரு பகவானின் செயல்பாடு உங்களுக்கு மிகுந்த நற்பயனைத் தரும். வரும் ஒரு வருட காலத்தில் தடையில்லாத தன வரவின் காரணமாக பொருளாதார நிலை நல்ல இலக்கை எட்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தினை நிறைவேற்றுவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவீர்கள். குரு பகவானின் அருளால் குடும்பத்தில் இந்த ஆண்டு சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இல்லற வாழ்வினில் இன்பத்தினைக் காண்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் கையில் எடுப்பதற்கு முன்னால் மிகவும் யோசிப்பீர்கள். அதில் உள்ள நன்மை தீமைகளை முதலிலேயே ஆராய்ந்து செயலில் இறங்குவதால் நிச்சயமாக வெற்றி காண்பீர்கள். நேரத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படும் புத்திசாலித்தனம் அதிகரிக்கும்.

இக்கட்டான நேரத்தில் உங்கள் புத்திகூர்மை வெளிப்படும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்வீர்கள். வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள் மற்றவர் காதிற்கு இனிமையானதாக இருக்கும். நீங்கள் கூறும் நல்லாசி அடுத்தவர் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் என்பதால் பலர் உங்கள் பேச்சினைக் கேட்க உங்களை நாடி வருவார்கள். சத்ரு ரோக ருண ஸ்தானமாகிய ஆறாம் வீட்டின் அதிபதி குரு பகவான் தன ஸ்தானத்தில் அமர்வதால் கடன் பிரச்னைகள் தீர்வடையும். புதிய சொத்து வாங்கும் முயற்சியில் வங்கி சார்ந்த கடனுதவி கிட்டும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமான தீர்வினைக் காணும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் சிறிது சலசலப்பு தோன்றும். சிறந்த அறிவுத்திறன் வளர்வதால் மாணவர்களின் கல்விநிலை சிறப்பாக இருந்து வரும். குருவின் பார்வை ஆறாம் இடத்தின் மீது விழுவதால் எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள்.

உடல்நிலை நன்றாக இருந்து வரும். சர்க்கரை வியாதிக்காரர்கள் மட்டும் தங்கள் உடல்நிலையை கவனத்தில் கொள்வது நல்லது. நிலுவையில் உள்ள பாக்கித் தொகைகள் வசூலாகும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்த முயல்வீர்கள். இந்த நேரத்திய சேமிப்பு எதிர்காலத்திற்கு பயன் தரும் என்பதால் சேமிப்பிற்கு முக்கியத்துவம் அளிப்பது நல்லது. வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்க கால நேரம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும் பிரச்னையில் சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு தோன்றக்கூடும். பெற்றோரின் உடல்நிலையில் சிறப்பு கவனம் தேவை. பல வருடங்களாக தொடர்பு விட்டுப்போயிருந்த சொந்தம் ஒன்று உங்களைத் தேடி வரும் வாய்ப்பு உள்ளது. சாதுக்கள், சந்யாசிகள், ஆன்மிகப் பெரியோர்களுடனான சந்திப்பு உங்கள் மனதிற்கு புத்துணர்ச்சியைத் தரும். தொழில் ரீதியாக பணிச்சுமை கூடும். தொடர்ந்து வேலைப் பளு அதிகரித்தவாறே இருக்கும்.

அலைச்சலுக்கு அஞ்சாதவர்கள் என்பதால் நன்றாக அலைந்து திரிந்து தொழில்திறமையினை வளர்த்துக் கொள்வீர்கள். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப் பார்வை உங்கள் வாழ்வியல் தரத்தை உயர்த்தும். உத்யோக ரீதியாக சிறப்பான நிலையைக் காண்பீர்கள். அரசுப்பணிக்காக காத்திருப்போருக்கு சாதகமான நிலை உருவாகும். உத்யோக முறையில் ஸ்திரமில்லாமல் இங்குமங்கும் அலைச்சலை சந்தித்தவர்கள் உத்யோகம் ஓரிடத்தில் நிலைபெறக் காண்பார்கள். நேர்மையும், நாணயமும் அலுவலகத்தில் உங்களுக்கு நற்பெயரைப் பெற்றுத் தரும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற்று பதவி உயர்வைக் காண்பீர்கள். 2019 மே மாத வாக்கினில் எதிர்பார்த்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. உணவுதானிய வியாபாரம் அபிவிருத்தி அடையும். வியாபாரத்தில் புதிய நுணுக்கங்கள் கைகொடுக்கும். சுயதொழில் செய்வோர் சீரான லாபத்தினை அடைவார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும்.

பரிகாரம்:

பிரதி வெள்ளிக்கிழமைதோறும் மகாலக்ஷ்மியை வழிபட்டு வாருங்கள். மாதந்தோறும் வருகின்ற சுவாதி நட்சத்திர நாளில் நரசிம்மர் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வருவது நல்லது. வீட்டுப் பூஜையறையில் நரசிம்மர் படத்தினை வைத்து வழிபடுவதும் பலன் தரும். நேரம் கிடைக்கும்போது உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள பரிக்கல் திருத்தலத்திற்குச் சென்று நரசிம்மரை தரிசித்து அர்ச்சனை செய்துகொள்ள நலம் உண்டாகும்.

 

விருச்சிகம்

 

தனம் தான்யம் விருத்தியடையும்

12ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இதுநாள் வரை சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு வர உள்ளார். ஏழரைச் சனியின் தாக்கத்தினை குறைக்கும் வகையில் இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு பெரிதும் துணைபுரியும். பொதுவாக ஜென்ம குருவினால் ஒரு சில சிரமங்களை சந்திக்க நேர்ந்தாலும், மனதில் நீதி, நேர்மை, நியாயம் போன்ற குணங்களுக்கு இடமளிப்பீர்கள். குறுக்கு வழிகளைப் புறக்கணிக்க நேரிடும் என்பதால் சற்று சிரமத்துடன்தான் முன்னேற்றம் காண வேண்டும். 5ம் இடத்தின் அதிபதியான குரு ஜென்ம ராசியில் இடம்பெறுவது சற்று மன சஞ்சலத்தை உருவாக்கும். எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவெடுக்க இயலாது சிரமப்பட நேரிடும். ஆயினும் குரு சுபகிரஹம் ஆதலால் இதனால் மிகப்பெரிய பிரச்னைகள் ஏதும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை.

ஐந்தாம் இடமாகிய மீன ராசிக்கும் அதிபதி குருவே ஆதலால், மனதில் தர்ம சிந்தனைகளும், ஆன்மிக எண்ணங்களும் அதிகமாகும். கோயில்களுக்குச் செல்லுதல், இயலாதவர்களுக்கு உதவுதல், தான தருமங்கள் செய்தல் போன்றவற்றை மனம் அதிகம் விரும்பும். இரண்டாம் இடமாகிய குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதி குரு பகவானே என்பதால் குடும்பத்தில் இருந்த வந்த குழப்பங்கள் முடிவிற்கு வரும். குடும்ப உறுப்பினர்களுடனான பந்தபாசம் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஒவ்வொருவரின் விருப்பத்தினையும் தனித்தனியே நிறைவேற்றி வைப்பதில் அதிக ஈடுபாடு கொள்வீர்கள். இதுபோன்ற செயல்களுக்கு அதிகம் செலவழிக்க நேரிடும் என்பதால் கையிருப்பு கரையும். முன்னோர்களின் சொத்துக்கள் அனுகூலத்தினைத் தரும். தகப்பனாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. மாணவர்கள் எதிர்பார்க்கும் பாடப்பிரிவில் இடம் பிடிக்க சற்று சிரமப்பட வேண்டியிருக்கும்.

ஆயினும் அவர்களின் கல்வித்தரம் குருவின் அருளால் உயரும். குரு ஜென்மராசியில் அமர்வதால் குருபலத்தினையும் அடைகிறீர்கள். இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குருவின் அருட்பார்வை ஐந்தாம் இடத்தின் மீது விழுவதால் பிள்ளைப் பேறுக்காக காத்திருப்பவர்கள் புத்ர பாக்யத்தை அடைவார்கள். பிள்ளைகளின் வாழ்வினில் குறிப்பிடத்தகுந்த சிறப்பான முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். குடும்பச் சூழ்நிலை காரணமாகப் பிள்ளைகளை விட்டுப் பிரிந்து வாழும் பெற்றோர்கள் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து செய்யும் செயல்களில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். நல்ல நண்பர்கள் சேருவார்கள். குடும்பத்துடன் சுற்றுலா செல்லும் வகையில் தொலைதூரப் பிரயாணங்களுக்கான திட்டமிடுதலில் இறங்குவீர்கள். வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்லக் காத்திருப்போருக்கு நேரம் சாதகமாக இருக்கும். உழைப்பதற்கு அஞ்சாத உங்களுக்கு இவ்வருடம் வரப்பிரசாதமாக இருக்கும்.

உங்களது உண்மையான உழைப்பு வெளியுலகிற்குத் தெரிய வரும். வண்டி, வாகனங்கள், மின்சார இயந்திரங்கள் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்கள் ஏறுமுகத்தினைக் காண்பார்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களால் லேசான பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடும். ஆயினும் அவர்களை விட்டுக்கொடுக்காது நடந்துகொள்வதால் அவர்களது ஆதரவினையும் பெற்று நற்பெயரினை அடைவீர்கள். உத்யோக ரீதியாக இருந்து வந்த மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். சுயதொழில் செய்பவர்கள் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருந்தாலும் அடுத்த படிக்கு முன்னேறுவார்கள். தொழில்முறையில் நல்ல பெயரை அடைந்தாலும், எதிர்பார்க்கும் தனலாபத்தினைப் பெறுவதில் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் கூட்டுத்தொழில் நல்ல லாபத்தினைத் தரும். இயற்கையில் வேகமான குணத்தினைக் கொண்ட உங்களுக்கு குருபகவான் ஜென்மத்தில் அமர்ந்து உங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக நிறைய அனுபவ பாடங்களைக் கற்றுத் தந்து நற்பலனை அருளுவார்.

பரிகாரம்:

செவ்வாய்க்கிழமைதோறும் விஷ்ணுதுர்க்கையின் சந்நதியில் எலுமிச்சை விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். பிரதி மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை அஷ்டமி நாட்களில் எலுமிச்சை சாதம் நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும்போது கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பட்டீஸ்வரம் திருத்தலத்திற்குச் சென்று துர்க்கையம்மனை தரிசித்து அர்ச்சனை செய்து கொள்ள ஜெயம் உண்டாகும்.

 

தனுசு

 

சோதனையைத் தாங்கினால் சாதிக்கலாம்

இந்த குருபெயர்ச்சியின் மூலம் அதிகப்படியான சோதனைக்கு ஆளாக இருப்பவர்கள் தனுசு ராசிக்காரர்கள் என்றால் அது மிகையில்லை. ஏற்கெனவே ஜென்மச் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டு வரும் உங்களுக்கு ராசிநாதன் குரு பகவானின் 12ம் இடத்து அமர்வுநிலை அதிகப்படியான அலைச்சலைத் தரக்கூடும். ஜனன ஜாதகத்தில் நல்ல தசாபுக்தி நடந்துவந்தால் மட்டுமே காரியவெற்றி சாத்தியமாகும். வெற்றியைத் தரக்கூடிய 11ம் இடத்தில் அமர்ந்திருந்த ராசிநாதன் குரு பகவான் தற்போது அங்கிருந்து இடம் பெயன்று 12ம் இடத்திற்கு வந்து அமர்வது சற்று சிரமத்தினைத் தரும். நினைப்பது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும் என்பதால் எதையும் திட்டமிட்டு செய்ய முடியாது. கற்பனையில் இருப்பவற்றை செயல்படுத்த நினைப்பது நடைமுறை வாழ்வினில் எவ்வளவு சிரமம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். நினைத்த காரியத்தில் வெற்றி பெற சற்று கூடுதல் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும்.

ராசிநாதன் குரு பகவானின் 12ம் இடத்துச் சஞ்சாரம் பொருளாதார ரீதியாக சற்று சிரமமான சூழ்நிலையை உருவாக்கும். அதே நேரத்தில் சுக ஸ்தானாதிபதியும் குரு பகவானே என்பதால் அடுத்தவர்களுக்காக அல்லாது சொந்த நலனுக்காக செய்யும் செலவுகளாகவே அமையும். வரவு நிலையிலும் பெருத்த உயர்வினைக் காண முடியாது என்பதால் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். நெருங்கிய உறவினர்கள் உதவிகேட்டு மறுக்க வேண்டிய சூழல் உருவாகும். இதனால் உறவுமுறையில் வீண் மனஸ்தாபம் தோன்றும். முக்கியமாக இந்த நேரத்தில் எவரையும் நம்பி ஜாமீன் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது கூடாது. உடன்பிறந்தோரின் நலனுக்காக ஒரு சில தியாகங்களை செய்வீர்கள். கல்வியைக் குறிக்கும் நான்காம் வீட்டின் மீது விழும் குருபகவானின் சிறப்புப் பார்வை மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும்.

உயர்கல்வி மாணவர்களுக்கு நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்காது போனாலும் எதிர்பார்த்த பாடப்பிரிவினில் வேறு கல்லூரியில் இடம் கிடைக்கும். குடியிருக்கும் வீட்டினில் காலத்திற்கேற்ற வகையில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். வண்டி, வாகனங்களால் செலவுகள் அதிகரிக்கும். ஆறாம் இடமாகிய ரோக ஸ்தானத்தை குரு பகவான் தனது நேரடிப் பார்வையின் மூலம் கவனித்து வருவதால் உடல்நிலையில் பெரிய பிரச்னைகள் ஏதும் நேரா வண்ணம் பாதுகாப்பார். அதே நேரத்தில் நீண்ட நாட்களாக தீராத வியாதியால் சிரமப்படுபவர்கள் சற்று கூடுதல் கவனத்துடன் இருந்து வருவது நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதிக்காரர்கள் தங்கள் உடல்நிலையை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கடன்பிரச்னைகள் தலைதூக்கினாலும் அதனை சமாளிக்கும் திறனை குருபகவான் அருள்வார். எதிரிகள் நண்பர்களாக மாறும் அதே நேரத்தில் இதுநாள் வரை நண்பர்களாக இருந்தவர்கள் உங்களை விட்டு விலகுவார்கள். வாழ்க்கைத்துணையின் உடல்நிலையில் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம்.

அடுத்தவர்களை நம்பி எந்த ஒரு செயலில் இறங்கினாலும் அது எளிதில் முடிவிற்கு வராது இழுபறியைத் தரும் என்பதால் புதிய முயற்சிகளில் அதிக கவனத்தோடு செயல்படுங்கள். அதிகம் அலையாமல் அலுவல் பணிகளை உடன்பணிபுரிவோரின் துணையுடன் சாதித்துக்கொள்வீர்கள். ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு உத்யோக ரீதியாக இடமாற்றம் உண்டாகும். அலுவல்பணி காரணமாக எதிர்பாராத பயணங்களையும், இடமாற்றத்தினையும் சந்திக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாபாரிகள் இந்த வருடத்தின் இறுதியில் அதிக அளவு அலைச்சலை சந்தித்தாலும் சிறிது காலம் கழித்து குறிப்பிடத்தகுந்த தன லாபத்தினை அடைவார்கள். மளிகை பலசரக்கு வியாபாரிகள் ஏற்றம் காண்பார்கள். வியாபாரிகள் எதிர்பார்க்கும் லாபத்தினை உடனுக்குடன் காண்பது சிரமம் என்பதால் அவசரப்பட்டு அதிக முதலீட்டில் ஈடுபடாமல் நிதானமாக செயல்படுவது நல்லது. பொதுவாக இந்தக் குரு பெயர்ச்சி உங்கள் பொறுமையை சோதிப்பதோடு பல்வேறு வழிகளில் தடைகளையும் உண்டாக்கும். பொறுமையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

வியாழன்தோறும் விரதமிருந்து மாலை ஐந்து மணிக்கு மேல் வடக்கு முகமாக நெய் விளக்கேற்றி வைத்து குரு பகவானை வழிபட்டு வாருங்கள். குரு பெயர்ச்சி நாளில் கொண்டைகடலை சுண்டலை நைவேத்யம் செய்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யுங்கள். நேரம் கிடைக்கும் போது திருச்செந்தூர் திருத்தலத்திற்குச் சென்று செந்திலாண்டவரை தரிசித்து பிரார்த்தனை செய்துகொள்ள சிரமத்தினை சமாளிக்கும் சக்தி பெறுவீர்கள்.

 

மகரம்

 

வெற்றி மீது வெற்றி வந்து சேரும்

ஏழரைச் சனியினால் உண்டாகும் சிரமங்களை சமாளிக்கும் வகையில் இந்த குரு பெயர்ச்சி அமைந்திருப்பது சற்றே ஆறுதலைத் தருகிறது. வெற்றியைத் தரும் பதினொன்றாம் இடத்திற்கு குரு பகவான் வரவிருப்பது இறங்கிய காரியங்களில் நியாயமான முறையில் உங்களது வெற்றியைப் பதிவு செய்யும். நினைத்த காரியங்கள் நல்லபடியாக நடைபெறும். மனதினில் அதிக தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் இது வரை குரு பகவான் சஞ்சரித்ததால் உங்களது உச்ச பட்ச உழைப்பினை வெளிப்படுத்தி வந்துள்ளீர்கள். இப்பொழுது அவர் உங்கள் ஜென்ம ராசிக்கு 11ம் இடமாகிய லாப ஸ்தானத்திற்கு வர உள்ளார். அதுவும் முயற்சியைக் குறிக்கும் 3ம் இடத்திற்கு அதிபதி லாபத்தினைத் தரும் 11ம் இடத்தில் அமர்வது மிகவும் விசேஷமான பலனைத் தரும். இதுநாள் வரை சிரமத்தினை சந்தித்து வந்த நீங்கள் அதற்கான லாபத்தை அடைய உள்ளீர்கள். உண்மையாக உழைத்ததற்கான பலன் தற்போது கிட்டும்.

என்றாலும் 12ம் இடமாகிய விரய ஸ்தானத்திற்கும் அதிபதி குரு பகவானே என்பதால் லாபத்தில் நஷ்டம் உண்டாவதற்கான வாய்ப்பு உண்டு. பண வரவு வந்ததும் அதனை உடனடியாக அசையாச் சொத்துக்களில் முதலீடு செய்வதும், வியாபார அபிவிருத்திக்காக மீண்டும் முதலீடு செய்துவிடுவதும் நன்மை தரும். கையிருப்பில் காசு வைத்துக்கொண்டால் அது காணாமல் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மேலும் 11ம் இடம் என்பது வெற்றியைக் குறிக்கும் இடம் என்பதால் நினைத்தது ஜெயமாகும். நல்ல தனலாபம் கிடைப்பதோடு ஸ்தான லாபமும் உண்டாகும். புதிதாக வீடு, மனை ஆகியன வாங்கும் யோகம் கிட்டும். உங்களது முயற்சிகளும், செயல்களும் மற்றவர்களுக்கு உதவும் வகையில் அமைந்து உங்கள் மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும்.

ஏழாம் இடத்தின் மீது குரு பகவானின் விசேஷ பார்வை விழுவதால் தாமதமாகி வந்த திருமணம் உடனடியாக நடக்கும். குழந்தை பாக்கியத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அதற்கான வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயர்வு காண்பதோடு அவர்களின் எதிர்கால நல வாழ்விற்காக சொத்து சேமிப்பில் ஈடுபடுவீர்கள். சிந்தனைகளில் தோன்றும் நல்லெண்ணமும், மகிழ்ச்சியான மன நிலையும் உங்களை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும். ஏழரைச் சனியினால் உடலில் உண்டான சோம்பல்தன்மையும், அசதியும் இன்னும் ஒரு வருட காலத்திற்கு எட்டிப் பார்க்காது. உடன்பிறந்த சகோதரர்களுடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். தகவல் தொடர்பு சாதனங்களின் உதவியுடன் அமர்ந்த இடத்திலிருந்தே நினைக்கும் விஷயங்களை சாதித்துக் கொள்வீர்கள். உங்களது நட்பு வட்டம் விரிவடைந்து அதன் மூலம் உங்கள் புகழ் பரவக் காண்பீர்கள்.

முன்னோர்களின் சொத்துக்களில் இருந்து வந்த பாகப்பிரிவினை பிரச்னைகள் சுமுகமான முடிவினை எட்டும். குடும்பத்தில் இருந்த சலசலப்பு நீங்கி கலகலப்பான சூழல் உருவாகும். கலைத்துறையில் இருப்பவர்கள் புதிய வாய்ப்புகளால் தங்களை வெளியுலகிற்கு அடையாளம் காட்டுவார்கள். அலுவலகத்தில் உங்களது நிர்வாகத்திறமை வெளிப்படும் அதே நேரத்தில் மேலதிகாரிகளிடமும் மோதல்போக்கு உண்டாகக் கூடும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு தள்ளிப் போகலாம். பொறுமை தேவை. பொன், வெள்ளி போன்ற ஆபரணத்தொழில் செய்பவர்கள் நல்ல தன லாபத்தினை அடைவார்கள். வங்கி, இன்ஸ்யூரன்ஸ் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தொழில் முறையில் அதிகமாகக் கடன்பாக்கிகளை நிலுவையில் வைத்துக்கொள்வது நல்லதல்ல. மொத்தத்தில் இந்த குருபெயர்ச்சியானது ஏழரைச்சனியிலிருந்து உங்களை காப்பாற்றுவதுடன் சிறப்பான நற்பலன்களையும் தரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

பரிகாரம்:

சனிக்கிழமைதோறும் சக்கரத்தாழ்வார் சந்நதியில் விளக்கேற்றி வழிபட்டு வாருங்கள். பிரதி மாதந்தோறும் வரும் கிருத்திகை நாட்களில் விரதமிருந்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து அருகில் உள்ள பெருமாள் கோயிலில் சுதர்ஸனர் சந்நதிக்கு வந்து வணங்கும் பக்தர்களுக்கு விநியோகம் செய்து வாருங்கள். நேரம் கிடைக்கும்போது கும்பகோணம் சக்ரபாணி ஆலயத்திற்குச் சென்று உங்கள் பெயரில் அர்ச்சனை செய்து வழிபட தொடர்வெற்றி கண்டு வருவீர்கள்.

 

கும்பம்

 

வாழ்வுநிலை உயர்வடையும்

வரவிருக்கும் குரு பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை தொழில்முறையில் சிறிது சிரமத்தினைத் தந்தாலும் இறுதியில் நற்பெயரைப் பெற்றுத் தரும். பத்தில் குரு பதவியைப் பறிக்கும் என்ற கருத்து உங்களைப் பொறுத்தவரை செல்லுபடியாகாது. 9ம் இடமாகிய பாக்ய ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு பகவான் 10ம் இடமாகிய ஜீவன ஸ்தானத்தில் வந்தமர்ந்து தொழில் ரீதியாக அதிக அலைச்சலைத் தருவாரே தவிர பதவியைப் பறிக்கமாட்டார். கும்ப ராசிக்காரர்களைப் பொறுத்த வரை தன லாப ஸ்தானங்களுக்கு அதிபதி ஆகிய குரு பகவான் 10ம் வீடாகிய தொழில் ஸ்தானத்தில் வந்தமர்வது உத்யோக முறையில் நற்பலனையே பெற்றுத் தரும். செய்யும் தொழிலில் சிறப்பான தனலாபத்தினைக் காண உள்ளீர்கள். உங்களது அர்ப்பணிப்புடன் கூடிய உண்மையான உழைப்பினால் நற்பெயரோடு புகழையும் அடைவீர்கள். எதிர்பார்க்கும் தன லாபமும் உடனுக்குடன் வந்து சேரும்.

தொழில்முறையில் அலைச்சல்தான் கூடுமே தவிர தடையேதும் உண்டாகாது. இரண்டாம் இடமாகிய தனஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் சேமிப்புகள் உயரத் துவங்கும். பொருளாதார நிலை உயரும். பணத்தேவைகள் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவி வரும். உங்கள் வார்த்தைகள் மிகுந்த மதிப்பினைப் பெறும். சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதில் மிகுந்த முனைப்புடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தோரால் ஒரு சில இழப்புகளுக்கு ஆளாகலாம். பிள்ளைகளின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றி வைக்கும் நீங்கள் அவர்களது உடல்நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத் துணையுடன் இணைந்து செயல்பட்டு எதிர்காலம் குறித்த திட்டங்களில் நல்ல முன்னேற்றத்தினைக் காண்பீர்கள். உங்கள் ஆதரவை நாடி வரும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உதவி செய்து உங்கள் கௌரவத்தை நிலைநாட்டுவீர்கள்.

சுகஸ்தானமாகிய நான்காம் வீட்டின் மீதும் குருபகவானின் நேரடிப்பார்வை விழுவதால் சுகமான வாழ்வியல் நிலைக்குக் குறைவிருக்காது. வீடு, வண்டி, வாகனம், மனை ஆகியன சேரும். திட்டமிட்டு செயல்படும் விஷயங்களில் நல்ல வெற்றியைக் காண்பீர்கள். குடியிருக்கும் வீட்டினில் மாற்றங்களைச் செய்ய முற்படுவீர்கள். புதிய வீடு கட்டும் முயற்சியில் உள்ளோருக்கு கால நேரம் சாதகமாக அமையும். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்கள் சேரும். மாணவர்களின் கல்வித் தரம் உயரும். உயர்கல்வி மாணவர்கள் தாங்கள் விரும்பிய படிப்புகளில் இடம் கிடைக்கப் பெறுவார்கள். சத்ரு, ரோக, ருண ஸ்தானமாகிய 6ம் வீட்டின் மீதும் குரு பகவானின் சிறப்புப்பார்வை விழுவதால் கடன்பிரச்னைகள் கொஞ்சம், கொஞ்சமாக முடிவிற்கு வரும். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். குருவின் அருளால் உடல்நிலை ஆரோக்யம் பெறும். நிலுவையில் உள்ள வழக்குப் பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

அலுவலகத்தில் உடன் பணி செய்பவர்களுடன் ஒத்துப்போவது அவசியமாகிறது. பிப்ரவரி மாதம் வரை தொழில் ரீதியாக சிரமத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
உத்யோகஸ்தர்கள் தற்காலிக இடமாற்றத்தினால் சிரமங்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. ஆயினும் உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். கூட்டுத்தொழிலில் உள்ளவர்கள் கணக்கு வழக்கில் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். வியாபாரிகள் வெளியில் இருந்து வர வேண்டிய கடன் பாக்கிகளை அதிகமாக நிலுவையில் வைக்காமல் உடனுக்குடன் வசூலிப்பது நன்மை தரும். தொழில்முறையில் புதிய முயற்சிகள் ஜூன் மாத வாக்கில் வெற்றி தரும். மொத்தத்தில் உங்களை இந்த குரு பெயர்ச்சியானது முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

பரிகாரம்:

பிரதி மாதந்தோறும் வருகின்ற வளர்பிறை பஞ்சமி நாட்களில் அருகில் உள்ள ஆலயத்தில் அமைந்திருக்கும் சப்தமாதர்களில் ஒருத்தியாக அமர்ந்து அருட்பாலிக்கும் வாராஹி அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வணங்கவும். வீட்டுப் பூஜையறையில் வாராஹியின் படத்தினை வைத்து வழிபட்டு வருவதும் நல்லது. நேரம் கிடைக்கும்போது தஞ்சாவூர் பெரியகோயிலுக்குச் சென்று அங்குள்ள வாராஹியை தரிசத்து அர்ச்சனை செய்துகொள்ள வெற்றி சாத்தியமாகும்.

 

மீனம்

 

குரு பார்க்க கோடி நன்மை

கடந்த ஒரு வருட காலமாக குரு பகவானின் எட்டாம் இடத்து சஞ்சாரத்தினால் கண்டு வந்த சிரமங்கள் அனைத்தும் நீங்கி நற்பலன்களைக் காண உள்ளீர்கள். 8ம் இடமாகிய விரய ஸ்தானத்தில் இது வரை சஞ்சரித்து வந்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ஜென்ம ராசிக்கு 9ம் இடமாகிய பாக்ய ஸ்தானத்திற்கு இடம் பெயர உள்ளார். மனதினில் தர்ம சிந்தனைகள் அதிகரிக்கும். தர்ம, நியாயத்திற்குப் புறம்பான விஷயங்களை எதிர்த்துச் செயல்படுவீர்கள். ராசியின் மீது குருவின் சிறப்புப்பார்வை விழுவதால் தன்னம்பிக்கையோடு எல்லா விஷயங்களையும் எதிர்கொள்வீர்கள். வருகின்ற ஒரு வருட காலத்தில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு எல்லா விஷயங்களிலும் வெற்றி கண்டு வருவீர்கள். உங்களின் புகழ் கூடும். உள்ளத்தில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சோம்பல்தன்மை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நான்குபேர் மத்தியில் உங்களுடைய செல்வாக்கு உயர்வடையும்.

குருபகவானின் சாதகமான சஞ்சாரத்தினால் மனதினில் நல்ல எண்ணங்களும், நற்சிந்தனைகளும் அதிகரிக்கும். சிந்தனையைக் குறிக்கும் ஐந்தாம் இடத்தின் மீது விழும் குரு பகவானின் சிறப்புப்பார்வை உங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். எண்ணிய காரியங்கள் நியாயமான முறையில் நடைபெறும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். திருமணத்தடையை சந்தித்து வந்தவர்கள், குருபலத்தின் காரணமாக தடைகள் விலகி விரைவில் திருமணம் நடக்கக் காண்பார்கள். 5ம் இடம் சந்தானப்ராப்தியைத் தரும் வல்லமை உடையது என்பதால் குழந்தைப் பேறுக்காகக் காத்திருப்போருக்கு சாதகமான நேரமாக அமையும். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயரும். அவர்களின் செயல்கள் குடும்பத்தின் பாரம்பரிய மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும் வகையில் அமையும்.

உயர்கல்வி பயிலும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் அகன்று அனுகூலம் காண்பீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமான முறையில் முடிவடையும். உடன்பிறந்தோருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். வெளியில் நிலுவையில் இருந்து வரும் நீண்ட நாள் பாக்கித்தொகைகள் வசூலாகும். குரு பகவானின் ஒன்பதாம் இடத்துச் சஞ்சாரம் ஆன்மிகப் பயணங்களுக்கான வாய்ப்புகளைப் பெற்றுத் தரும். தீர்த்தயாத்திரை, புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பியவர்களுக்கு கால நேரம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்விற்கான வாய்ப்பும், எதிர்பார்த்துக் காத்திருந்த இடமாற்றத்திற்கான வாய்ப்பும் உண்டு. ஒரு சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகம் வந்து சேரும். ஓடிப்போனவனுக்கு ஒன்பதுல குரு என்பதற்கேற்ப திரைகடல் ஓடி திரவியம் தேடுவதற்கான வாய்ப்பு வந்து சேரும்.

உத்யோக ரீதியாக பிப்ரவரி மாதத்திலிருந்து இன்னமும் கூடுதல் பொறுப்புகளை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் உங்களுக்குக் கீழ் பணிபுரிவோர் உங்களை ரோல்மாடலாகக் கொண்டு செயல்படுவார்கள். உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல தனலாபத்தினைக் காண்பார்கள். ஆசிரியர்கள், நீதித்துறை பணியாளர்கள், ஆடிட்டிங் துறையில் பணி செய்பவர்கள் உரிய அங்கீகாரத்தினைப் பெறுவார்கள். ஜவுளி வியாபாரிகள் சற்று அதிக அலைச்சலை சந்தித்தாலும் தொழில் முறையில் நல்ல லாபத்தினைக் காண்பார்கள். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி அதிக தனலாபத்தினைத் தருவதோடு, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வண்ணம் அமையும். அத்துடன் நற்பெயரையும், புகழையும் சம்பாதித்துத் தரும் என்றால் அது மிகையில்லை.

பரிகாரம்:

பிரதி சங்கடஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகப் பெருமானின் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டு வாருங்கள். புதிதாக எந்த ஒரு செயலைத் துவக்கினாலும் விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைத்துவிட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நேரம் கிடைக்கும்போது திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலுக்குச் சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு பிரார்த்தனை செய்ய உங்கள் வாழ்வு உயர்வடையும்.

Categories: தமிழ்

Leave a Reply


Sponsors