பஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )

இந்த இட்லிக்கு உயர் தர இட்லி அரிசியை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் அரிசி நிறம் மாறும், உப்பரி குறையும்.

அடுத்தது உளுந்தின் தரம் உளுத்தம் பருப்பு வாங்கும் சமயத்துல ஜாங்கிரி அல்லது ஜிலேபி செய்ய பயன்படுத்தும் உளுந்து என்று கேட்டு வாங்கவும் இல்லையெனில் நந்தி பிராண்ட் உளுந்தை பயன்படுத்தவும்.

இதற்கு சரியான காம்பினேஷன் தக்காளி அரைச்ச குழம்பு தான் !!!

இதை எங்கள் பெரிய பாட்டி அவிஞாசி அருகாமையில் சேவூர் என்ற சிற்றூரில் செய்து கொடுப்பார்கள் நானும் எனது தம்பிகளும் ரவுண்டு கட்டி அடிப்போம்.

அதே போல் எனது சின்ன பாட்டி ஊரான பெருந்துறை அருகாமையில் மலைச்சீனாபும் என்ற சிற்றூரில் இந்த வெந்தய இட்லி உடன் காலை டிப்பனுக்கு குடல் குழம்பு வைப்பார்கள் பாருங்கள் நாங்கள் நிதானமாக நாவில் ருசி தாண்டவம் ஆட வைத்து ஒரு புடி பிடிப்போம் !!!

தேவையான பொருட்கள்
இட்லி பச்சை அரிசி 2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உளுந்து பருப்பு 1/2 கப்
ஜவ்வரிசி 1/4 கப் ( வெள்ளை நிறத்தில் பெரிதாக இருப்பது கண்ணாடி போல் உள்ளதை பயன்படுத்த கூடாது )
உப்புத்தூள் தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு
சோடா உப்பு 1/4 தேக்கரண்டி

செய்முறை
1. அரிசியையும் உளுந்தையும் தனி தனியாக நன்கு அலசி ஆராய்ந்து, பின்பு அதை தனி தனியாக ஊற வைத்து கொள்ளவும். குறைந்தது 10 மணி நேரம். உளுந்து உடன் வெந்தயத்தை சேர்த்து அரைத்து கொள்ளவும்.

2. ஜவ்வரிசி யை குறைந்தது 12 மணி நேரமாவது ஊற விட வேண்டும்.

3. அரிசியை முதலில் நல்ல நைசாக அரைத்து விடுங்கள். பிறகு உளுந்து உடன் வெந்தயத்தையும் சேர்த்து நல்ல நுறைக்க ஆட்ட வேண்டும் உளுந்து கூடவே ஜவ்வரிசியையும் இட்டு நல்ல நுரைக்க ஆட்டி எடுத்து, அரிசி மாவையும் உளுந்து மாவையும் நன்றாக ஒன்றாக கலக்க வேண்டும்.

4. அதில் தேவையான அளவிலான உப்பு சேர்த்துகோங்க. இதை குறைந்தது ஒரு 8 மணி நேரமாவது புளிக்க வைக்க வேண்டும். ( 10 -12 மணி நேரம் வைத்தால் நல்லது ).

5. இட்லி ஊற்றும் நேரத்துல சோடா உப்பை சேர்த்துகோங்க நன்றாக கலக்கி 10 நிமிடங்கள் கழித்து இட்லி தட்டில் ஊற்றி 15 நிமிடங்கள் வேகவைத்து பின்னர் 4-5 நிமிடங்கள் கழித்து இட்லியை துணியில் இருந்து மெதுவாக எடுத்தால் வந்து விடும்.

குறிப்பு:
1. இட்லி தட்டின் குழியில் முக்கால் பாகம் தான் மாவு ஊற்ற வேண்டும்.

2. இன்னும் இட்லி மேலும் பஞ்சு போல் இருப்பதற்கு கொட்டை முத்து அல்லது ஆமணக்கு கொட்டையை வாங்கி தட்டி அதன் உள் இருக்கும் வெள்ளை நிற பருப்பை மட்டும் போட்டு நன்றாக உளுந்துடன் போட்டு ஆட்டி கொள்ளலாம் அது இன்னும் உங்களுக்கு நல்ல ரிசல்டை தரும்.

Loading...
Categories: idli Vagaigal In Tamil

Leave a Reply


Sponsors