மட்டன் உப்பு கறி ,tamil samayal

 

 

 

 

இது மதுரையில் பழங்காலத்தில் மிகவும் பிரசித்தம்.

ஆனால் எமது காலத்தில் நான் சாப்பிட்டு மயங்கியது ஈரோட்டு மாஞ்சோலை மண்பானை விருந்து உணவகத்தில் தான்.

இங்கு நீங்கள் ஒரு முறை உண்டு விட்டால் மதுரை கோனார் கடையில் கூட அந்த சுவை இருக்கிறதா ??? என்று உங்கள் நாவும் மணமும் யோசிக்க தோன்றும்….

இதற்கு அதிக மசாலா தேவையில்லை சாப்பிட்டால் கறி மட்டும் இறங்கி கொண்டே இருக்கும்.

எவ்வளவு கறி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம் காரம் மட்டும் சும்மா ஜிவ்வென்று நடுமண்டையில் இறங்கும்….

ருசிக்கு பஞ்சமே இருக்காது !!!

இதை தயிர் சாதம் , பருப்பு சாம்பார் சாதம், ரசம் சாதம் அனைத்து உணவுகளுடனும் சாப்பிட டக்கராக இருக்கும்.

தேவையான பொருட்கள்

மட்டன் 500 கிராம் ( ஒரு இன்ச் முன்னங்கால் கறி )
வரமிளகாய் 15
தூத்துக்குடி கடல் உப்பு தேவையான அளவு
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
குருமிளகு தூள் 1 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 250 கிராம் ( பொடியாக நறுக்கியது)
சோம்பு தூள் 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் 1/4 தேக்கரண்டி
மரசெக்கு நல்லெண்ணெய் 4 மேஜைக்கரண்டி

செய்முறை

1. ஒரு அகன்ற கெனமான இரும்பு வடச்சட்டியில் மரசெக்கு நல்லெண்ணெய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் வரமிளகாயை இரண்டு மூன்றாக உடைத்து 15 மிளகாயையும் போட்டு நன்றாக நெடி வரும் வரை வதக்கவும்.

2. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து கோங்க நன்றாக பொன்னிறமாக ஆகும் வரை வதக்கவும். பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

3.அதில் நன்றாக கழுவி வைத்துள்ள மட்டன் துண்டுகளை சேர்த்து நன்றாக தண்ணீர் வற்றும் வரை கிளறவும்.

4. அதில் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் வரை வதக்கவும்.

5. அதில் இப்போது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மட்டனை வேகவைக்க வேண்டும்.

6. மட்டன் வெந்து விட்டது என்று உறுதிபடுத்தியபின்னர் அதில் தண்ணீர் சுண்டும் வரை கிளறவும்.

7. அதில் உள்ள மட்டன் சாறு முழுவதுமாக சுண்டியதும் இப்போது வைத்துள்ள பொடி வகைகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

8. இப்போது தேவையெனில் உப்பு சேர்த்து கொள்ளலாம்.

9. அதே சமயத்தில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.

10. நன்றாக கறி சுருண்டு காரம் மற்றும் உப்பு உடன் ஒன்றாக சேர்ந்து ருசி சேர்ந்த உடன் இறக்கி வைக்கவும்.

Loading...
Categories: Non Vegetarian Recipes Tamil

Leave a Reply


Sponsors