உயர் ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் பாதிப்புகள்

உயர் ரத்த அழுத்தம்: இன்று மக்களிடையே அதிகமாகக் காணப்படும் பாதிப்புகளில் ஒன்று உயர் ரத்த அழுத்தம். நன்கு படித்தவர்கள் கூட முறையாக தொடர்ந்து இதற்காக மருந்து எடுத்துக் கொள்வதில் தவறி விடுகின்றார்கள். உயர் ரத்த அழுத்தம் மிக ஆபத்தான பாதிப்புகளுக்கு அடிப்படை ஆகி விடுகின்றது. ஆக சில அவசிய குறிப்புகளை இங்கு மீண்டும் பார்க்கும் பொழுது சீரான ரத்த அழுத்தத்தினை பெற நமக்கு உதவும்

* மருந்துவர் ஒரு நபருக்கு உயர் ரத்த அழுத்த மருந்து கொடுத்துள்ளார் என்றால் அவரது அறிவுரை இன்றி மருந்தினை நிறுத்தவோ, மாற்றவோ, கூட்டவோ கூடாது.

* உயர் ரத்த அழுத்தம் சரி செய்யப்படும் எனப்படும் பொழுது மருத்துவர் ஒருவர் எடை கூடுதலாக இருப்பின் எடையை குறையுங்கள் என்ற அறிவுரையும் கூறுவார். அதிக எடை மட்டுமே உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாகாது என்றாலும் அதிக எடையினைக் குறைப்பது ரத்த அழுத்தம் சீராக உதவும்.

* பொட்டாசியம், மக்னீசியம் இரண்டும் உயர் ரத்த அழுத்தத்தினை சீர் செய்ய அவசியம். மருத்துவர்கள் நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள தாவர வகை உணவுகளையும், புரதத்தினையும் கூட்ட விரும்புவார்கள். கூடவே தாது உப்புக்களையும் உடல் ஆரோக்கியத்திற்காக சேர்ப்பர். பொட்டாசியம் சத்து மிகுந்த தாவர உணவுகளை பரிந்துரைப்பார். உயர் ரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம், தாது உப்பு பெரிதும் உதவுகின்றது. கீரை வகைகள், பசலை, பீட்ரூட் கீரை, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வாழைப்பழம் இவற்றில் இது அதிகம் உள்ளது. பசலை, முழு கோதுமை, கொட்டை வகைகளான பாதாம், முந்திரி, வேர்க்கடலை அவற்றில் மக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. ஸ்ட்ரெஸ் குறைய, உயர் ரத்த அழுத்தம் குறைய இது உதவுகிறது.
பீட்ரூட் கீரை

* அதிக கொழுப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழம், அதிக கொழுப்பு இல்லாத பால் உணவுகள், அதிக உப்பு சேர்த்த உணவுகளை தவிர்ப்பது போன்றவை உயர் ரத்த அழுத்தம் குறைய உதவும்.

* அடர்ந்த சாக்லேட் சிறிதளவு தினம் எடுத்துக்கொள்ளலாம்.

* மன உளைச்சல், சதா எதனையோ நினைத்து கவலைப்படுவது இவற்றினைக் குறையுங்கள்.

தைராய்டு: தைராய்டு சுரப்பி வண்ணத்து பூச்சிபோல் கழுத்தில் உள்ள சுரப்பி. உடல் செயல்பாட்டிற்கும். மூளை செயல்பாட்டிற்கு முக்கியமான தைராய்டு ஹார்மோனை இது சுரக்கின்றது. தைராய்டு குறைபாட்டின் அறிகுறிகளை கண்டவுடன் மருத்துவரிடம் செல்வதே நல்லது. இரவில் நன்கு தூங்குபவர், திடீரென நன்கு தூங்க முடியவில்லை என்றால் அது தைராய்டு பிரச்சினையாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. அதிகம் இயங்கும் தைராய்டு அதிகமாக ஜி3, ஜி4 ஹார்மோன்களை சுரந்து நரம்பு மண்டலத்தினைத் தூண்டி தூக்கமின்மையை உருவாக்கலாம். அதேபோல் இரவில் நன்கு தூங்கியும் காலையில் இன்னமும் அதிகம் தூங்க வேண்டும் என்று தோன்றினால் ஹார்மோன்கள் தேவையான அளவு சுரக்காமல் இருக்கலாம்.

* திடீரென்று பதட்டம் ஏற்படுவது தைராய்டு அதிகம் செயல்படுவதன் காரணமாக இருக்கலாம்.

* அடிக்கடி மலச்சிக்கல் ஏற்பட்டால் தைராய்டு குறைவாக செயல்படுவதன் காரணமாக இருக்கலாம்.

* தைராய்டு அதிகம் செயல்பட்டால் அடிக்கடி வெளிப்போக்கு இருக்கும். இது வயிற்றுப்போக்கு அல்ல. ஆனால் வெளிப்போக்கு மட்டும் அடிக்கடி இருக்கும்.

* முடி மெலிதானால், குறிப்பாக புருவ முடி மெலிதானால் தைராய்டு பிரச்சினை வாய்ப்புகள் அதிகம்.

* அதிக உடல் உழைப்பு இல்லாத பொழுதும் அதிகமாக வியர்ப்பது தைராய்டு அதிகம் வேலை செய்கின்றது என்பது ஒரு காரணமாக இருக்கக்கூடும்.

* திடீரென நமது முயற்சி எதுவும் இல்லாமல் எடை கூடுவது தைராய்டு குறைபாட்டின் காரணமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதேபோன்று முயற்சி இன்றி ஒருவர் அதிகம் இளைத்தாலும் தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

* மறதி, குழப்பம் இவையெல்லாம் தைராய்டு குறைவாக செயல்படுவது காரணமாக இருக்கலாம்.

* பெண்களுக்கு மாத விலக்கில் போக்கு அதிகமானதாகவும், நீண்ட நாட்கள் கொண்டதாகவும் இருந்தால் மருத்துவர் தைராய்டு பரிசோதனை செய்வார்.

* பகலில் சிறிது நேரம் தூங்க வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் தைராய்டு குறைபாடு ஒரு காரணமாக இருக்கலாம்.

* கருத்தரிக்கவில்லை, கருத்தரித்தாலும் கரு தங்குவதில்லை போன்ற பிரச்சினைகளுக்கும் தைராய்டு காரணமாக இருக்கலாம்.

ஆக அறிகுறிகளை ஆரம்ப காலத்திலேயே அறிந்து உடனடியாக மருத்துவரிடம் செல்வது அநேக பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.

Loading...
Categories: Pattivaithiyam

Leave a Reply


Sponsors