கர்ப்ப காலத்தில் கால் வீக்கம்,karpa kala kaal veekam tips

கால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது.

கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மார்பு எக்ஸ்ரே, இசிஜி, எக்கோகார்டியோகிராபி, வயிற்று அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் முழுமையான ரத்தப் பரிசோதனைகள் அவசியப்படும்.

பொதுவாக, கர்ப்பிணிகள் பகலில் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்க வேண்டும். நின்றுகொண்டே பணி செய்கிறவர்களுக்கும், ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கும் கால்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இவர்கள் நீண்ட நேரம் தொடர்ந்து நின்று கொண்டிருப்பதைத் தவிர்த்து, சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டாலோ, கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாலோ, கால்களை கால் மனையில் வைத்து உயர்த்திக் கொண்டாலோ கால் வீக்கம் குறைந்து விடும்.

தரையில் அமரும்போது கால்களைக் குறுக்காக மடக்கி உட்கார வேண்டாம். இரவில் உறங்கும்போது, கால்களுக்குத் தலையணை வைத்துக் கொண்டாலும் கால் வீக்கம் குறையும். பகலில் பணிகளுக்கு இடையில் சிறிது நேரம் நடப்பது நல்லது. கர்ப்ப கால உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். முறையான யோகாவும் நீச்சல் பயிற்சியும் மிக நல்ல பயிற்சிகள்.

கர்ப்பிணிகள் சத்துள்ள சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டால், சத்துக்குறைவு காரணமாக ஏற்படும் கால் வீக்கத்தைத் தவிர்க்கலாம். மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பைக் குறைத்துக் கொள்வதும் பொட்டாசியம் அதிகமுள்ள வாழைப்பழம் போன்ற பழங்களைச் சாப்பிடுவதும் நல்லது. அதிகம் காபி குடிக்கக்கூடாது. தேவையான அளவுக்குத் தண்ணீர் அருந்துவது முக்கியம்.

இடுப்பில் இறுக்கமான ஆடைகளை அணிவது கூடாது. இறுக்கமான காலணிகளை அணிவதும் கூடாது. ஹைஹீல்ஸ் செருப்புகளை அணியவே வேண்டாம். மருத்துவர் யோசனைப்படி ‘ஸ்டாக்கிங்ஸ்’ எனப்படும் கால் மீளுறைகளை அணிந்து கொள்ளலாம். பகலில் வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்க வேண்டும்.

Loading...
Categories: Pregnancy Tips Tamil

Leave a Reply


Sponsors