30 வகை சிங்கப்பூர், மலேசியா ரெசிப்பி!, 30 singapore, malasiya cooking tips in tamil, tamil samayal kurippukal

மலேசியர் மட்டுமின்றி இந்தியர், சீனர் என அனைவரும் விரும்பிச் சாப்பிடக்கூடிய முக்கியமான உணவுகளின் தொகுப்பு இது. இந்தியாவில் கிடைக்காத பொருட்கள் மற்றும் முட்டைக்கு மாற்றாகச் சேர்க்கப்பட வேண்டியவை பற்றியும் குறிப்புகள் உள்ளன. 

01. பேக்ட் குயே

தேவையானவை: பாண்டன் இலை – 5, மைதா மாவு – ஒரு கப், முட்டை – ஒன்று (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), சர்க்கரை – 1/2 கப், கெட்டியான தேங்காய்ப்பால் – 150 மில்லி, எண்ணெய்/நெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – 1/4 டீஸ்பூன், பச்சை ஃபுட் கலர் – சில துளிகள் (விரும்பினால்).

செய்முறை: பாண்டன் இலையைக் கழுவி நறுக்கி, அதனுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். அதில் முட்டை மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். சர்க்கரை கரைந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கி, மைதா மாவு மற்றும் உப்பு சேர்த்து கட்டி இல்லாமல் கலக்கவும். விரும்பினால் பச்சை ஃபுட் கலர் சேர்க்கலாம் (பாண்டன் இலை இயற்கையாகவே பச்சை நிறம் கொடுக்கும்). பேக்கிங் தட்டில் எண்ணெய் அல்லது நெய் தடவி, அதில் கலவையைச் சேர்த்து, `அவனை’ 180 டிகிரி ப்ரீஹீட் செய்து, கலவையை ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும். விரும்பிய வடிவத்தில் கட் செய்யவும்.

குறிப்பு: `அவன்’ இல்லாதவர்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கலாம். ரமலான் மாத ஸ்பெஷலான இந்த குயேயில், மணமும் சுவையும் நிறைந்திருக்கும்!

02. காயா (ஜாம்)

தேவையானவை: கெட்டியான முதல் தேங்காய்ப்பால் – அரை டம்ளர், முட்டை – 2 (விரும்பாதவர்கள் கண்டன்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம்), பாண்டன் இலை – ஒன்று (இதற்கு மாற்றாக, லவங்கப்பட்டை பயன்படுத்தலாம்), பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) – 1/4 டம்ளர்.

செய்முறை: டபுள் பாய்லர் முறையில் இந்த ஜாமை பக்குவமாகக் கிளற வேண்டும். அதாவது, ஒரு பாத்திரத்தில் முக்கால் அளவு தண்ணீரைச் சூடுபடுத்தவும். அதற்குள் மற்றொரு பாத்திரம் வைத்து, அதில் தேங்காய்ப்பால், பிரவுன் சுகர் சேர்க்கவும். பாண்டன் இலை நீளமாக இருப்பதால், அதை இரண்டு மூன்றாக மடக்கி, இலையின் நுனியாலே முடிச்சுப் போட்டு, அதில் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்துவிட்டு, இந்தப் பாத்திரத்தை மேலே வைத்து (ஏற்கெனவே இருக்கும் நிலையில்) சர்க்கரை கரையும்வரை கிளறவும்.

சர்க்கரை கரைந்ததும் ஜாம் கலவைப் பாத்திரத்தை கீழே இறக்கவும். கலவை மிதமான சூட்டில் இருக்கும். இப்போது அடித்த முட்டையை இந்தக் கலவையுடன் சேர்த்து ஒன்று சேர, நன்கு அடித்துக் கலக்கி, பின்னர் மீண்டும் அந்தத் தண்ணீர் பாத்திரத்தின் மேல் வைத்து, மிதமான தீயில் கைவிடாமல் கிளறவும். கலவை கொதிக்க ஆரம்பிக்கும் முன் ஓரத்தில் ஒட்டுவது போன்று தோன்றும். அப்படி ஒட்டாத வண்ணம் நன்கு கிளறிக்கொண்டே இருக்கவும். 15 நிமிடங்களுக்குள்ளாகவே கொஞ்சம் கெட்டியாகிவிடும். கரண்டியால் எடுத்து அதிலேயே ஊற்றிப் பார்த்தால், நெய் ஊற்றுவதுபோது விட்டுவிட்டு விழும். இந்தப் பதத்தில் அடுப்பில் இருந்து இறக்கி, கைபடாமல் கரண்டியாலேயே பாண்டன் இலையை வழித்து எடுக்கவும். ஜாம் ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் சேமித்து, ஃப்ரிட்ஜில் வைத்து இரண்டு வாரம்வரை பயன்படுத்தலாம்.இதை பிரெட்டில் தடவி சாப்பிட, அருமையாக இருக்கும்.

03. குயே ததார் (கோகனட் ரோல்)

தேவையானவை: தேங்காய்த் துருவல் – ஒரு கப், கருப்பட்டி (அ) வெல்லம் – ஒரு கப், மைதா மாவு – 3 கப், தேங்காய்ப்பால் அரை டம்ளர், சர்க்கரை – அரை டீஸ்பூன், பாண்டன் இலை – 5+பாதி இலை, பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன், முந்திரி – 10, நெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய், முந்திரியைப் பொடியாக துருவவும். ஒன்றிரண்டாக உடைத்த கருப்பட்டியுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, பாண்டன் இலை பாதியை நறுக்கி அதில் சேர்த்து, கருப்பட்டி கரையும்வரை காய்ச்சவும். கரைந்ததும் வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேர்த்து, அதனுடன் துருவிய தேங்காய், முந்திரி சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறவும். லேசான பிசுபிசுப்புடன் கெட்டியானதும் இறக்கவும்.

மற்றொரு பாத்திரத்தில் மைதா மாவுடன் தேவையான அளவு உப்பு, சர்க்கரை, பேக்கிங் சோடா எடுத்துவைக்கவும். பாண்டன் இலையுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டி, அதை மாவில் சேர்க்கவும். அத்துடன் தேங்காய்ப்பால், ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து, கெட்டியில்லாமல் தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, ரவா தோசைக்கு ஊற்றுவது போல மாவை ஓரத்திலிருந்து ஊற்றி நடுவுக்கு கொண்டுவந்து, சிறிய தோசைகளாக வார்க்கவும். நெய் தடவி, மிதமான சூட்டில், அடி மிகவும் சிவக்காதவாறு சுட்டு எடுக்கவும் (திருப்பிப் போட வேண்டாம். சீக்கிரம் வெந்துவிடும்). சுட்ட தோசையின் நடுவில் தேங்காய்க் கலவையைக் கொஞ்சம் பரப்பி வெளியே வராதவாறு சுற்றி வைத்து, சுவைக்கவும்.

04. ஆசார் அவா(க்) (வெஜிடபிள் ஊறுகாய்)

தேவையானவை: வெள்ளரிக்காய் – ஒன்று (பெரியது), கேரட் – ஒன்று, முட்டைகோஸ் – க்யூப்புகளாக அரிந்தது (மெல்லியதாக இல்லாமல் ஒவ்வொரு முட்டைகோஸ் இதழும் ஒரு சதுர இன்ச் துண்டுகளாக) – அரை கப், எள் – ஒரு டேபிள்ஸ்பூன், கொரகொரப்பாகப் பொடித்த வேர்க்கடலை – ஒரு டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், வினிகர் – 1+1+1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், புளித்தண்ணீர் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப. இவற்றோடு, சில்லி சம்பல் பேஸ்ட் (பக்கம் 107-ல் கூறியுள்ளபடி), கூடுதலாக அதில் 2 இன்ச் லெமன் க்ராஸ் மட்டும் சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.

செய்முறை: கேரட்டை 2 இன்ச் அளவு நீளவாக்கில் நறுக்கவும். வெள்ளரிக்காயை இரண்டாக வெட்டி, நடுவில் இருக்கும் விதைப் பகுதியை ஸ்பூனால் வழித்து எடுத்து விட்டு, அகலவாக்கில் 1/4 இன்ச் அளவு வெட்டவும். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வினிகரும், சிறிது உப்பும் கலந்து, விதை நீக்கிய வெள்ளரிக்காயைப் பிரட்டி வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு, அதில் ஒரு டேபிள்ஸ்பூன் வினிகர், நறுக்கிய கேரட், முட்டைகோஸ் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு நிமிடம் கழித்து தண்ணீரை வடிக்கவும். வெள்ளரியுடன் வடித்த காய்களையும் சேர்த்து நன்கு பிரட்டிவிட்டு, தண்ணீர் இல்லாமல் பிழிந்தாற்போல் எடுத்து ஒரு தட்டில் பரப்பி, வெயிலில் உலரும்படி சிறிது நேரம் வைக்கவும்.

எள்ளை வெறும் வாணலியில் வறுக்கவும். ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் சில்லி சம்பல் பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து புளித் தண்ணீர் சேர்த்து, அது கொதித்துக் கொண்டிருக்கும்போதே மசாலாவுக்குத் தேவையான அளவு உப்பு, வினிகர், சர்க்கரை சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். பின்னர் வேர்க்கடலைப் பொடி சேர்த்து, உடன் உலர்ந்திருக்கும் காய்களையும் சேர்த்து, ஒருசேர நன்கு கிளறிவிட்டு இறக்கவும். இதனுடன் வறுத்த எள்ளை சேர்த்துப் பிரட்டி, ஆறியதும் ஒரு கண் ணாடி பாட்டிலில் சேமித்து ஃபிரிட்ஜில் வைக்கவும். மூன்று நாட்களுக்குப் பிறகு எடுத்துச் சாப்பிட, மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: இதில் பீன்ஸ், காலிஃப்ளவரும் சேர்க்கலாம்.

05. சில்லி சம்பல் பேஸ்ட்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 5, பெரிய சிவப்பு மிளகாய் (ஜாலபினோ) – 3, லெமன் க்ராஸ் – 2 இன்ச் அளவு, கலங்கா (அ) இஞ்சி – ஒரு இன்ச் அளவு, பூண்டு – 4 பல், சின்ன வெங்காயம் – 4, கட்டி மஞ்சள் – 1/2 இன்ச் அளவு (அ) மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: கொதிக்கும் தண்ணீரில் காய்ந்த மிளகாயை அரை மணிநேரம் ஊறவைத்து, அதனுடன் மேலே கொடுத்துள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நைஸாக அரைக்கவும். இந்த சில்லி பேஸ்ட்தான் அனைத்து வகை கிரேவி (சம்பல்)களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஃப்ரெஷ் மசாலா.

06 . கறி பஃப்

தேவையானவை: மைதா மாவு – 2 கப், மார்ஜரின் (அ) வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் + 1/4 கப், உருளைக்கிழங்கு – 2 பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு – ஒரு பல், கறி மசாலா பவுடர் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: உருளைக்கிழங்கை சதுரத் துண்டுகளாக நறுக்கி முக்கால் பதம் வேகவைத்து எடுக்கவும். தோல் நீக்கிய பூண்டு, பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும். இரண்டு சிறு பாத்திரங்களை எடுத்து, ஒவ்வொன்றிலும் ஒரு கப் மைதா மாவைச் சேர்க்கவும். முதலில் ஒரு பாத்திரத்தில் உள்ள மாவில் தேவையான அளவு உப்பு மற்றும் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நன்கு பிசிறி, பிறகு சிறிது சிறிதாகத் தண்ணீர் தெளித்து கெட்டியாக நன்கு பிசைந்து மூடி வைக்கவும் (இதை மாவு 1 என வைத்துக்கொள்வோம்).

மறு பாத்திரத்தில் உள்ள மாவில் 1/4 கப் வெண்ணெய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசிறி, இரண்டு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துப் பிசைய, கெட்டியாகத் திரண்டு உருண்டையாக வந்துவிடும். இல்லையெனில், இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும் (இது மாவு 2).

இப்போது மாவு 1-ஐ ஒரே அளவுள்ள ஐந்து உருண்டைகளாக்கிக் கொள்ளவும். அதே போல மாவு 2-ஐயும் ஐந்து உருண்டைகளாக்கிக் கொள்ளவும். மாவு 1-ல் ஓர் உருண்டையை எடுத்து உள்ளங்கையால் லேசாகத் தட்டி, அதனுள் மாவு 2 உருண்டை ஒன்றை வைத்து நன்கு மூடி உருண்டையாக்கி வைக்கவும். இதேபோல எல்லா உருண்டைகளையும் செய்யவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். லேசாக நிறம் மாறியதும், கறி மசாலா பவுடரை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து அதில் சேர்த்து லேசாகப் பிரட்டிவிட்டு, வாசம் வரும்போது வேகவைத்த உருளைத் துண்டுகள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, கொஞ்சம் மசிய வேகும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, நறுக்கிய கறிவேப்பிலை தூவி மூடிபோட்டு வேகவிட்டு, வற்றியதும் இறக்கி ஆறவிடவும்.

ஒவ்வோர் உருண்டையையும், லேசாகத் தொடுமாவை கொண்டு ஓவல் வடிவில் ஓரளவு மெல்லியதாக திரட்டி, அதனை ரோல் போல சுருட்டிக்கொண்டு, பின்பு அதை நீளவாக்கில் வைத்து நீளமாக – கொஞ்சம் மெல்லியதாக திரட்டி, அதையும் சுண்டுவிரல் அளவு ரோல் போல உருட்டி, சம அளவுள்ள மூன்று துண்டுகளாக கட் செய்ய, உள்ளே அடுக்காகத் தெரியும். அந்த ஒவ்வொன்றையும் வட்டமாக திரட்டி, உள்ளே ஒரு டீஸ்பூன் ஆறிய உருளை மசாலா வைத்து, ஓரங்களை நன்கு அழுத்திவிட்டு மடக்கி வைக்கவும். அதைக் காய்ந்த எண்ணெயில் மிதமான சூட்டில் பொன்னிறமாகச் சுட்டெடுக்கவும்.

குறிப்பு: சிங்கப்பூர், மலேசியாவில் எந்த ஒரு விஷேசமானாலும், கறி பஃப் நிச்சயம் இடம்பெறும்.

07. தவுக்கை பிரட்டல்

தேவையானவை: தவுக்கை (பீன்ஸ் ஸ்பிரவுட் – உளுந்து அல்லது பச்சைப்பயறை ஒரு வாரம் முளை கட்டச் செய்தால் கிடைக்கும்) – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, பூண்டு – 2 பல், சில்லி பேஸ்ட் – அரை டீஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பூண்டு, பச்சை மிளகாயைத் தட்டவும் (அரைக்கக் கூடாது). வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் தட்டிவைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்கி, முளைகட்டிய பீன்ஸ், தேங்காய்ப்பால், தேவையான அளவு உப்பு சேர்த்துப் பிரட்டி, மூடி போட்டு சிறிது நேரம் மிதமான தீயில் வைக்கவும். அரைவேக்காட்டில் இறக்கவும். சத்தான இந்த தவுக்கை இல்லாத மலேசிய, சிங்கப்பூர் உணவகங்களே இல்லை!

08. ரொட்டி ஜாலா முர்தபா

தேவையானவை: ரொட்டி ஜாலா – 10, முட்டை – 2 (மாற்றாக சீஸ் (அ) பனீர் சேர்க்கலாம்), மிளகுத்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

ஸ்டப்ஃபிங்க்கு: பெரிய வெங்காயம் – 2, பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப், துருவிய கேரட் – கால் கப், பச்சை மிளகாய் – 3, மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, முட்டை – ஒன்று (விரும்பினால்), எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். நிறம் மாறியதும் கேரட், முட்டைகோஸ் சேர்த்துக்கிளறி… மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு பிரட்டி ஒரு நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும். பின் முட்டையை உடைத்து ஊற்றிப் பிரட்டி உதிரியாக இருக்கும்படி ஆனதும் நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிரட்டி இறக்கி ஆறவிட, ஸ்டஃபிங் தயார்.

ஒரு கோப்பையில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் இரண்டு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடிக்கவும். ஒரு தட்டில் இரண்டு ரொட்டி ஜாலாவை ஒன்றன் மேல் ஒன்று வைத்து அதன் நடுவில் தேவையான அளவு ஸ்டஃப்பிங்கை பரவலாக வைத்து நான்காக மூடும்படி மடிக்கவும் (சப்பாத்தி அல்லது தோசை நடுவில் ஸ்டஃப்பிங் வைத்து ரோல் பண்ணுவோமே, அப்படியல்லாமல், ஸ்டஃப்பிங்கை பரவலாக வைத்து, இடது, வலது, மேலே, கீழே என நான்கு புறமும் மடித்து மூட வேண்டும்.மடித்த நான்கு ஓரங்களும் ஒன்றன் மேல் ஒன்றாக பட்டு ஸ்ட்ஃப்பிங்கை மூடியிருக்கும்). மடித்த மேல் பகுதியின் மேல் அடித்த முட்டையை ஸ்பூனில் எடுத்துப் பரவலாகத் தடவவும். வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், முட்டை தடவிய பகுதி எண்ணெயில் படும்படி வாணலியில் மெதுவாக எடுத்துப் போடவும். இப்போது மேலிருக்கும் பகுதி யிலும் முட்டையைத் தடவி, கீழே பொன்னிறமாகச் சிவந்ததும் திருப்பிப் போட்டு ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு இருபுறமும் சிவந்ததும் எடுக்கவும். இதேபோல எல்லாவற்றையும் ஸ்டஃப் செய்து சுட்டு எடுக்கவும். அப்படியே அல்லது இரண் டாக கட் செய்து பரிமாறவும். முட்டை இல்லாமலும் செய்யலாம்.

09. ரொட்டி ஜாலா

தேவையானவை: மைதா மாவு – 2 கப், முட்டை – ஒன்று (முட்டை தவிர்த்தும் செய்யலாம்), தேங்காய்ப்பால் – அரை கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், நெய் – தேவைக் கேற்ப, உப்பு – ஒன்றரை டீஸ்பூன்.

செய்முறை: மைதா மாவில் நெய்யைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்ஸி யில் கட்டியில்லாமல் நன்கு அடிக்கவும். ஒரு பாத்திரத் தில் அதை வடி கட்டி ஊற்றவும். கெட்டியாகவும் இல்லாமல் தண்ணீராகவும் இல்லாமல் மாவு இருக்கும் படி பார்த்துக்கொள்ளவும். சிறிய தண்ணீர் பாட்டிலின் மூடியில் ஓட்டை போட்டு அந்த பாட்டிலில் கரைத்திருக்கும் மாவை ஊற்றி நன்கு மூடி, கவிழ்த்து ஊற்றலாம். தோசைக்கல் சூடானதும் தோசை அளவுக்கு மாவைச் சுற்றினால் கோடு கோடாக விழும் (ஓட்டையிலிருந்து திரி திரியாக மாவு விழும். அதைச் சுற்றி சுற்றி ஊற்றிவிட்டு அதன்மேல் அந்தக் கோடுகள் இணையும்படி பூப்போல ஊற்றவும்). மேலே சிறிது நெய் தடவி, மிதமான தீயில் அடி சிவக்காமல் மடித்து சுருட்டி எடுத்துப் பரிமாறவும்.

10. பீ ஹூன் (ரைஸ் நூடுல்ஸ்)

தேவையானவை: ரைஸ் நூடுல்ஸ் – 100 கிராம், டோஃபு – 6 சிறிய துண்டுகள், பெரிய வெங்காயம் – ஒன்று, பீன்ஸ் ஸ்பிரவுட் (முளைகட்டிய பீன்ஸ்) – அரை கப், கடுகுக் கீரை – 2 கொத்து, நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய முட்டைகோஸ், கேரட் – கால் கப், பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 2, சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், சில்லி பேஸ்ட் – ஒன்றரை டீஸ்பூன், முட்டை – ஒன்று (விரும்பினால்), எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நூடுல்ஸ், 2 டீஸ்பூன் உப்பு சேர்த்து நூடுல்ஸ் மூழ்கும் அளவுக்கு கொதிக்கும் சூட்டில் வெந்நீர் சேர்த்து, 2 நிமிடத்தில் வடிகட்டவும் (குழைந்துவிடாமல்). தோல் உரித்த பூண்டு, பச்சை மிளகாயைத் தட்டவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். டோஃபு ஒரு இன்ச் அளவு சதுரத் துண்டாக இருக்க வேண்டும். கடுகுக் கீரையை கழுவி, நறுக்கவும்.

அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் முதலில் டோஃபு துண்டுகளைச் சேர்த்து லேசான பொன்னிறத்தில் வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் தட்டிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கிய பெரிய வெங்காயம், முட்டைகோஸ், கேரட் சேர்த்து வதக்கவும். பிறகு சில்லி பேஸ்ட், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிரட்டிவிடவும். பின்பு முளை கட்டிய பீன்ஸ் மற்றும் நறுக்கிய கீரையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நூடுல்ஸை சேர்த்து நன்கு ஒன்றுசேரப் புரட்டவும். செட் ஆனதும் இறக்கவும். வறுத்த டோஃபு துண்டுகளைச் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

11. சில்லி பேஸ்ட்

தேவையானவை: காய்ந்த மிளகாய் – 20, வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை: காய்ந்த மிளகாயை வெது வெதுப்பான நீரில் நான்கு மணி நேரம் ஊறவைத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு (தண்ணீர் சேர்க்காமல்), பின்னர் வினிகரும், விரும்பினால் ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து நைஸாக அரைத்துக்கொள்ளவும். இதைக் கை படாமல் ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து, ஃப்ரிட்ஜில் வைத்து, ஒரு மாதம்வரை பயன் படுத்தலாம்.

இதனுடன் உரித்த பூண்டு ஆறு பல் சேர்த்து அரைத்து, பேஸ்டைச் சிறிது எண்ணெயில் கொஞ்சம் வதக்கி, ஆறியதும் எடுத்தும் சேமித்துக் கொள்ளலாம்.

குறிப்பு: இந்த பேஸ்ட்டைதான் சிங்கப்பூரில் நூடுல்ஸ் (மீகொரிங், பீ ஹூன், நாசி கொரிங்)வகைகளுக்கு முக்கியமாகச் சேர்ப்பார்கள். நமக்கும் நிறைய பயன்படப்போவது இதுதான்.

12. நாஸி பிரியாணி

தேவையானவை: பாஸ்மதி அரிசி – 2 கப், சின்ன வெங்காயம் – 8, பாண்டன் இலை – ஒன்று, கண்டன்ஸ்ட் மில்க் (இனிப்பு சேர்க்காதது) – 1/4 கப், துருவிய கேரட் – 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லித்தழை, குங்குமப்பூ – சிறிது, பால் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

தாளிக்க: பட்டை – ஒரு விரல் அளவு, காய்ந்த மிளகாய் – 2, கிராம்பு – 3, ஏலக்காய் – 2, அன்னாசிப்பூ – ஒன்று, எண்ணெய் – 1/4 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: சின்ன வெங்காயத்தை வட்டவடிவில் மெல்லியதாக நறுக்கவும். அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் பாலில் குங்குமப்பூவை ஊறவைக்கவும். வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்துவிட்டு, தாளிப்புப் பொருட்கள் மற்றும் துருவிய கேரட் சேர்க்கவும். பாண்டன் இலையை முடிச்சிட்டு, கலவையில் சேர்க்கவும்.

ஒரு நிமிடம் வதக்கியபின் இரண்டரை கப் (அரிசி அளந்த அதே கப்) தண்ணீர் சேர்க்கவும். கொதி வந்ததும் கண்டன்ஸ்ட் மில்க், உப்பு சேர்த்து, ஊற வைத்த பாஸ்மதி அரிசியை, தண்ணீரை வடித்து விட்டு சேர்த்துக் கிளறவும். தண்ணீர் சுண்டியதும் கீழே `தம் ப்ளேட்’ போட்டு, அதில் பாத்திரத்தை வைத்து நன்கு மூடி, மிதமான தீயில் 5 நிமிடம் வைக்கவும். பின்பு மூடியைத் திறந்து கிளறிவிட்டு, குங்குமப்பூ பாலைச் சேர்க்கவும் (நிறம் போதவில்லை என்றால் மஞ்சள் ஃபுட் கலர் சேர்க்கலாம்). நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து, மீண்டும் மூடிவைத்து, 10 பத்து நிமிடம் கழித்து இறக்கவும். பரிமாறும் முன் பிரியாணியை நன்கு கிளறி, பொரித்த வெங்காயம், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவவும்.

13. கறி லக்ஸா

தேவையானவை: ரைஸ் நூடுல்ஸ் – 50 கிராம், தேங்காய்ப்பால் – 250 மில்லி, டோஃபு – 200 கிராம், எலுமிச்சைச் சாறு – 3 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் ஸ்பிரவுட் (முளைகட்டிய பீன்ஸ்) – ஒரு கப், சோயா சாஸ் – 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லித்தழை, சிறிது, உப்பு – தேவைக்கேற்ப.

அரைக்க: காய்ந்த மிளகாய் – 20, வினிகர் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – ஒரு டீஸ்பூன், முந்திரி 1/4 கப்.

செய்முறை: நூடுல்ஸில் கொதிநீர் சேர்த்து வடிக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்து சில்லி பேஸ்டை தயார்செய்யவும். டோஃபுகளை சிறுசிறு துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் டோஃபுகளை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும். அதே எண்ணெயில் சில்லி பேஸ்ட் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்கவும். பின் சோயா சாஸ், தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலக்கி, கூடுதலாக ஒன்றரை டம்ளர் தண்ணீர், உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கொதிக்கவிடவும். இரண்டு நிமிடம் கழித்து, வறுத்து வைத்திருக்கும் டோஃபுகளை சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

இதை அப்படியே சூப்பாகவும் சாப்பிடலாம். அல்லது ஒரு கோப்பையில் வேகவைத்த நூடுல்ஸ் கொஞ்சம் சேர்த்து, அதன் மேல் டோஃபுவுடன் கறியைச் சேர்த்து, அதன் மேல் ஸ்பிரவுட் பீன்ஸை பரவலாகச் சேர்த்து, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி, விரும்பினால் வறுத்த சின்ன வெங்காயத்தை தூவி, பின்னர் சுவைக்கலாம்.

14. ஸ்பெஷல் அகர்கா

தேவையானவை: அகர் அகர் ஸ்டிக் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) – ஒரு கைப்பிடி அளவு, தண்ணீர் – 2 டம்ளர், கருப்பட்டி (அ) வெல்லம் – முக்கால் கப், உப்பு – 1/4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் – அரை டம்ளர், முட்டை – ஒன்று (விரும்பாதவர்கள் கெட்டி தேங்காய்ப்பால் மட்டும் சேர்த்தும் செய்யலாம்), பாண்டன் இலை (அ) லவங்கம் – ஒன்று, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தேங்காய்ப்பாலுடன் முட்டையைச் சேர்த்து முள்கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கவும். பாண்டன் இலையைக் கழுவி தண்ணீரில் சேர்த்து, அதில் அகர் அகர் ஸ்டிக்கையும் சேர்த்து கொதிக்கவிடவும். அகர் அகர் பாதி கரைந்ததும், கருப்பட்டி (அ) வெல்லம், உப்பு சேர்த்து நன்கு கரையும்வரை கொதிக்கவிடவும். அனைத்தும் நன்கு கரைந்ததும் வடிகட்டி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். தேங்காய்ப்பால் – முட்டையை கொதிக்கும் கலவையில் சேர்த்து, முள்கரண்டியால் நன்கு அடித்துக் கலக்கியபடி இருக்கவும். தளதளவென்று கொதிக்க ஆரம்பித்ததும் ஒரு இன்ச் உயரத் துண்டுகள் வரும்படியான பெரிய தட்டில் ஊற்றி ஆறவிடவும். இறுகியதும் துண்டுகள் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து கால் மணிநேரம் கழித்து சாப்பிடவும்.

15. மஷ்ரூம் சூப்

தேவையானவை: காளான் (ஒன்றை நான்கு துண்டாக நறுக்கவும்) – ஒரு கப், சின்ன வெங்காயம் – 5, பெரிய வெள்ளை வெங்காயம் – ஒன்று, பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – 2, பார்ஸ்லி – ஒரு கைப்பிடியளவு, மிளகுத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 2+1 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: சின்ன வெங்காயம், பெரிய வெள்ளை வெங்காயம், பச்சை மிளகாய், தோல் நீக்கிய பூண்டு எல்லாவற்றையும் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், நறுக்கிய பொருட்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து பாதி வதங் கியதும் காளான், பார்ஸ்லியை சேர்த்துப் பிரட்டி, மிளகுத்தூள், உப்பு, ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காளான் வேகும்வரை கொதிக்கவிட்டு இறக்கி, ஹாண்ட் பிளண்டரில் அரைக்கவும் (அல்லது ஆறியதும் மிக்ஸியில் அரைக்கலாம்). கலவையை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதிவிட்டு இறக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் (கூடுதல் சுவைக்கு க்ரீமும் சேர்க்கலாம்) சேர்த்துப் பரிமாறவும்.’

16. ரோஜா(க்)

தேவையானவை: மைதா மாவு – ஒன்றரை கப், அரிசி மாவு – ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் – ஒரு டீஸ்பூன், பேக்கிங் சோடா – 1/4 டீஸ்பூன், ஈஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன், தண்ணீர் – ஒரு கப், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், தேங்காய்த்துருவல் – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, ஸ்பிரிங் ஆனியன் – ஒரு கொத்து, டோஃபு – ஒரு விரல் அளவு துண்டுகள் – 3, பீநட் சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – பொரிக்க, உப்பு – அரை டீஸ்பூன். (தனியாக கொஞ்சம் மைதா மாவு வைத்துக் கொள்ளவும்)

செய்முறை: வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்துக் கலக்கி 5 நிமிடம் அடுப்பில் வைக்கவும். மூன்று மாவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து, அதில் இந்தத் தண்ணீரைச் சேர்த்து மரக்கரண்டியால் மாவை நன்கு கலக்கி, 3 மணி நேரம் மூடிவைக்கவும் (மாவு மூன்று மடங்காக உப்பி வரும் என்பதால் உயரமான பாத்திரத்தில் வைக்கவும்). உப்பிய மாவை நன்கு கலக்கி, இரண்டு டேபிள்ஸ்பூன் அளவு ஒரு கோப்பையிலும், மீதி மாவை சரி பாதியாக இரண்டு பாத்திரங்களிலும் எடுத்து வைக்கவும். இரண்டு டேபிள்ஸ்பூன் மாவில் ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்துக் கலக்கி அதில் டோஃபு துண்டுகளைப் புரட்டி வைக்கவும். ஒரு பாதி மாவில் தேங்காய்த்துருவல், இரண்டு டேபிள்ஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்கு கலக்கவும். மற்றொரு பாதி மாவில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், மஞ்சள்தூள், மைதா மாவு இரண்டு டேபிள்ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கவும் (இது உருண்டை பிடிக்கும் அளவு இருக்காது. தளர்வாக உளுந்த வடை மாவை கையில் எடுத்து சிறுசிறு உருண்டையாகப் போடும் பதத்தில் வரும்).

வாணலியில் எண் ணெய் சூடானதும் டோஃபு துண்டுகளைப் பொன்னிற மாகப் பொரித்தெடுக்கவும். அடுத்து தேங்காய்த் துருவல் கலந்த கலவையை ஒவ்வோர் உருண்டையாகச் சேர்த்து பொரித்து எடுக்க வும். அதேபோல அடுத்த காரக் கலவையையும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்த வற்றை இரு துண்டுகளாக நறுக்கி தட்டில் பரப்பி, வெள்ளரித் துண்டுகளைச் சுற்றிலும் வைத்து, நறுக்கிய காய்ந்த மிளகாய்தூவி, பீநட் சாஸுடன் பரிமாறுவது உணவகங்களில் வழக்கம்.

17. பீநட் சாஸ்

தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு – இரண்டு இன்ச் அளவு, காய்ந்த மிளகாய் – 10, பூண்டு – 4 பல், பெரிய வெங்காயம் – ஒன்று, லெமன் க்ராஸ் – ஒரு விரல் அளவு, வேர்க்கடலை கரகரப்பாகப் பொடித்தது – 2 டேபிள்ஸ்பூன், புளித்தண்ணீர் – கால் கப், பிரவுன் சுகர் (அ) சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், கடலை எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன் + ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: காய்ந்த மிளகாயை வெந்நீரில் அரை மணிநேரம் ஊறவைக்கவும். பெரிய வெங்காயம், தோல் நீக்கிய பூண்டு, காய்ந்த மிளகாயை நறுக்கி, ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயில் வதக்கி ஆறவைத்து அரைக்கவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து, லெமன் க்ராஸ், அரைத்த மசாலா சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.எண்ணெய் பிரியும்போது அரைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். கொதித்ததும் புளித்தண்ணீர், உப்பு, சர்க்கரை சேர்த்துக் கலக்கி ஒரு கொதி வந்ததும் பொடித்த வேர்க்கடலை சேர்த்துப் புரட்டி மிதமான தீயில் ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

18. குயே லாபிஸ்

தேவையானவை: மைதா மாவு – அரை கப், அரிசி மாவு – அரை கப், கார்ன் ஃப்ளார் மாவு – 2 டேபிள்ஸ்பூன், கெட்டியான தேங்காய்ப்பால் – அரை கப், பாண்டன் இலை (அ) லவங்கம் – ஒன்று, சர்க்கரை – 3/4 கப், விரும்பும் வண்ணங்களில் ஃபுட் கலர் – சிறிதளவு, உப்பு – 1/4 டீஸ்ன்பூன்.

செய்முறை: அரை கப் தண்ணீரில் சர்க்கரை, பாண்டன் இலை சேர்த்து சர்க்கரை கரையும்வரை மிதமான தீயில் கொதிக்கவைத்து, சர்க்கரை கரைந்ததும் வடிக்கட்டி ஆறவிடவும். அத்துடன் உப்பு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். மாவுகளை எல்லாம் ஒன்றாகக் கலந்து, அதில் சர்க்கரை – தேங்காய்ப்பால் கலவை சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி வடிகட்டவும் (தண்ணீர் பதத்தில்). இட்லிப் பாத்திரத்தில், ஆவியில் வேகவைக்க தண்ணீர் கொதிக்க விடவும். ஒரு சாண் அளவு நீளம் கொண்ட அடி சமமான பாத்திரத்தின் உள்ளே எண்ணெயைத் தடவவும். கலந்து வைத்துள்ள மாவை சரி பங்காக நான்கு கோப்பைகளில் பிரித்து வைத்து, ஒவ்வொன்றிலும் விரும்பிய ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும். எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஒரு நிறமுள்ள மாவை ஊற்றி, ஆவியில் வைத்து (புட்டிங் வேக வைப்பது போன்று), இரண்டு நிமிடம் வேகவிடவும். திறந்து பார்த்தால் முதல் அடுக்கு வெந்து லேசாகப் பிசுபிசுப்பாக இருக்கும். இப்போது அடுத்த நிற மாவை மெதுவாக ஊற்றி இரண்டு நிமிடம் வேக விடவும். இதே போல எல்லா மாவையும் வேக வைத்ததும், கடைசி அடுக்கு ஊற்றி, 10 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். ஆறியதும் துண்டுகள் போடவும்.

குறிப்பு: மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்தப் பாரம்பர்ய இனிப்பு இடம்பெறாத விசேஷங்களே இல்லை!

19. குயே உபி காயூ (மரவள்ளிக்கிழங்கு கேக்)

தேவையானவை: துருவிய மரவள்ளிக்கிழங்கு – ஒரு கப், தேங்காய்ப்பால் – 1/4 கப், பாண்டன் இலை – 3, தண்ணீர் – அரை கப், சர்க்கரை – 3/4 கப், தேங்காய்த் துருவல் – ஒரு கப், யெல்லோ மற்றும் பிங்க் ஃபுட் கலர் – சிறிதளவு, உப்பு – 1/4 டீஸ்பூன்.

செய்முறை: துருவிய மரவள்ளிக்கிழங்கை மிக்ஸியில் தண்ணீர் இல்லாமல் கொரகொரப்பாக ஒரு சுற்று சுற்றி பாத்திரத்தில் சேர்க்கவும். பாண்டன் இலையுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி கிழங்கில் சேர்க்கவும். பின் தேங்காய்ப்பால், சர்க்கரை, உப்பு சேர்த்துக் கரைக்கவும். இரண்டு சிறிய, அடி சமமான பாத்திரத்தின் உள்ளே லேசாக எண்ணெய் தடவி, கலவையை இரண்டிலும் சமமாக ஊற்றவும். ஒன்றில் யெல்லோ கலரையும், மற்றொன்றில் பிங்க் கலரையும் சேர்த்து ஆவியில் (புட்டிங் வேக வைப்பது போன்று) அரை மணி நேரம் வேகவிட்டு இறக்கி, ஆறியதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும்.

ஒரு தட்டில் தேங்காய்த்துருவலை பரவலாகச் சேர்த்து, அதில் குயே உபி காயூவைக் கவிழ்த்து, நன்றாகப் புரட்டி எடுத்து துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

20. பிரவுனி

தேவையானவை: மைதா மாவு – ஒரு கப், வெண்ணெய் – அரை கப், முட்டை – 2(முட்டை விரும்பாதவர்கள் அரை டின் கண்டன்ஸ்ட் மில்க் சேர்த்து, சர்க்கரையில் பாதி அளவை குறைத்துக்கொள்ளலாம்), சாக்லெட் சிப்ஸ் – 3/4 கப், கொக்கோ பவுடர் – இரண்டரை டேபிள்ஸ்பூன், இன்ஸ்டன்ட் காபித்தூள் – அரை டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – 3/4 கப், பாதாம் அல்லது வால்நட்ஸ் – தேவைக்கேற்ப, உப்பு – கால் டீஸ்பூன்.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சாக்லெட் சிப்ஸ் சேர்த்து டபுள் பாய்லர் முறையிலோ அல்லது அவனிலோ (40 நொடிகள் போதும்) உருக்கவும். உருகியதும் கரண்டியால் நன்கு கலக்கி ஆறவிட்டு, அதில் முட்டை சேர்த்து நன்கு அடித்துக் கலக்கி, மைதா மாவு மற்றும் கோக்கோவைச் சலித்துச் சேர்த்து, அத்துடன் மற்ற பொருட்களையும் சேர்த்து ஒன்று சேர கரண்டியால் நன்கு கலக்கவும்.

பேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் சிறிது மைதா மாவைத் தூவி எல்லா இடங்களிலும் ஒட்டும்படி செய்துவிட்டு மீதியைக் கொட்டிவிடவும். அவனை 180 டிகிரி செல்சியஸில் ப்ரீஹீட் செய்யவும். கலவையை பேக்கிங் ட்ரேயில் பரவலாக சமப்படுத்தி, மேலே பாதாம் பருப்பைப் பொடித்துத் தூவி, 35 முதல் 40 நிமிடங்கள் வரை அவரவர் அவனைப் பொறுத்து பேக் செய்து எடுக்கவும் (35 நிமிடங்களுக்கு மேல் குச்சியால் நடுவில் குத்திப் பார்த்து எடுக்கவும்).

குறிப்பு: இது ஃப்ரிட்ஜில் வைக்காமலேயே ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். மறுநாள்தான் இதன் சுவை கூடுதலாக இருக்கும்.

21. கார்ன்ஃப்ளேக்ஸ் குக்கீஸ்

தேவையானவை: ப்ளைன் கார்ன் ஃப்ளேக்ஸ் – ஒரு கப்(குவியலாக), வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், தேன் – 2 டேபிள்ஸ்பூன், விரும்பிய நட்ஸ் மற்றும் உலர்ந்த செர்ரி, திராட்சை – 1/4 கப்.

செய்முறை: கார்ன் ஃப்ளேக்ஸை கையால் ஒன்றிரண் டாக உடைக்கவும். நட்ஸையும், உலர்ந்த பழங்களையும் பொடியாக நறுக்கவும். கப் கேக் பேக்கிங் தட்டில் சின்ன சின்ன கப் கேக் தாள்கள் பத்து அடுக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் உருகியதும் தேனைச் சேர்த்து ஒன்று சேர மிதமான தீயில் கிளறவும். வெண்மையாக நுரைத்து வந்ததும் கார்ன் ஃப்ளேக்ஸை சேர்த்து, நிறம் மாறாமல் வாசம் வரும்வரை கிளறி இறக்கி, நட்ஸ் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து நன்கு புரட்டி, உடன் தயார் செய்து வைத்திருக்கும் பேப்பர் கப்களில் ஒவ்வொரு ஸ்பூன் எடுத்து வைக்கவும். அவனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்து, அதில் கப்களை வைத்து 10 நிமிடம் வைத்து பேக்செய்து எடுக்கவும். ஆறியதும் மொறுமொறுப்பாக இருக்கும். காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஒரு வாரம் வரை வைத்துச் சாப்பிடலாம்.

குறிப்பு: ரைஸ் ஃப்ளேக்ஸிலும் இதேபோல செய்யலாம்.

22. அப்பம் பாலிக் (பான் கேக்)

தேவையானவை: மைதா மாவு – ஒன்றரை கப், பிரவுன் சுகர் (பழுப்பு சர்க்கரை) – 3 டேபிள்ஸ்பூன், பேக்கிங் பவுடர் (அ) பேக்கிங் சோடா – அரை டீஸ்பூன், இன்ஸ்டன்ட் ஈஸ்ட் – அரை டீஸ்பூன், உப்பு – கால் டீஸ்பூன், தண்ணீர் – 11/4 கப், முட்டை – ஒன்று (விரும்பாதவர்கள் தவிர்க்கலாம்), வெண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

ஸ்டப்ஃபிங்க்கு: கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை – அரை கப், க்ரீம் கார்ன் – 1/4 கப், பிரவுன் சுகர் – 1/4 கப், தேங்காய்த்துருவல், வாழைப்பழம் – விருப்பத்துக்கேற்ப.

செய்முறை: மைதா மாவுடன் சர்க்கரை, உப்பு, பேக்கிங் பவுடர், ஈஸ்ட் எல்லாம் சேர்த்து நன்கு கலந்து, முட்டை, தண்ணீர் சேர்த்து ஹாண்ட் விஸ்க்கால் கட்டியில்லாமல் நன்கு அடித்துக் கலக்கி, குறைந்தது ஐந்து மணிநேரம் மூடி ஃப்ரிட்ஜில் வைக்கவும். ஓர் இரும்பு தவாவை அடுப்பில் வைத்து, மாவை நன்கு கலக்கிவிட்டு ஒரு கரண்டி எடுத்து ஊற்றி மெல்லியதாக இல்லாமல் மெத்தென்று பரப்பவும். சுற்றியும், மேலும் வெண்ணெய் விடவும். மிதமான தீயில் அடி பொன்னிறமாகும்வரை சிவக்க வேகவிடவும். மேல் மாவு வெந்ததும், அடியும் சிவந்த நிலையில் இருக்கும் சமயம் பொடித்த வேர்க்கடலையை எல்லா இடங்களிலும் இருக்கும் படி மேலே தூவி, க்ரீம் கார்னை ஆங்காங்கே கொஞ்சம் சேர்த்து, சிறிது பிரவுன் சுகர் தூவி அப்படியே மடித்து எடுத்து, இரண்டாகக் கட் செய்து பரிமாறவும். இது ஒருவித ஸ்டப்ஃபிங்.

க்ரீம் கார்ன்-க்கு பதிலாக வேர்க்கடலைப் பொடி மற்றும் சுகர் தூவிய பின், வாழைப்பழத்தை மெல்லிய வட்டங்களாக நறுக்கிப் பரவலாக வைத்தும் மடித்து எடுக்கலாம். மற்றொரு முறையில், பொடித்த வேர்க்கடலை மற்றும் சர்க்கரையுடன் தேங்காய்த்துருவலைத் தூவியும் மடித்து எடுக்கலாம்.

23. நாசி கொரிங்

தேவையானவை: பாஸ்மதி அரிசி சாதம் – ஒரு கப், பெரிய வெங்காயம் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 2, வெங்காயத்தாள் – ஒன்று, சில்லி பேஸ்ட் – 1 டீஸ்பூன், சோயா சாஸ் – 1 டேபிள்ஸ்பூன், பூண்டு – 2 பல், மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன், முட்டை – ஒன்று (விரும்பினால்), எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தோல் உரித்த பூண்டு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், வெங்காயத்தாளைப் பொடியாக நறுக்கவும். அகன்ற வாணலியில் எண்ணெய் விட்டு, சூடானதும் நறுக்கிய பூண்டு, பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின் சில்லி பேஸ்ட், சோயா சாஸ் சேர்த்துப் பிரட்டி, முட்டை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு வேகவைத்த சாதம், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி கிளறி இறக்கவும்.

24. பைனாப்பிள் டார்ட்

தேவையானவை:

ஜாம் செய்ய: பைனாப்பிள் – ஒன்று, சர்க்கரை – 1/3 கப், உப்பு – 2 சிட்டிகை, பட்டை – அரை இன்ச், கிராம்பு – 2.

பிஸ்கெட் மாவுக்கு: மைதா மாவு – 200 கிராம், வெனிலா கஸ்டர்ட் பவுடர்(அ)கார்ன்ஃப்ளார் பவுடர் – 50 கிராம், மார்ஜரின்(அ)வெண்ணெய் – 120 கிராம், பொடித்த சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், முட்டை – ஒன்று, உப்பு – 2 சிட்டிகை.

செய்முறை: பைனாப்பிளை தோல் சீவி துண்டுகளாக்கி மிக்ஸியில் அரைக்கவும். அகலமான பாத்திரத்தில் அதைக் கொட்டி, அத்துடன் சர்க்கரை, உப்பு, பட்டை, கிராம்பு சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் விட்டு, பின் சுருண்டு வரும்வரை இடையிடையே கிளறிக்கொண்டே இருக்கவும். கெட்டியானதும் ஜாமை ஆறவிடவும்.

ஒரு பாத்திரத்தில் மாவுகளை எடுத்து உப்பு, பொடித்த சர்க்கரை சேர்த்துக் கலந்து, அதில் மார்ஜரின் சேர்த்து நன்கு கலக்கவும். முட்டையை ஒரு கோப்பையில் உடைத்து ஊற்றி அடிக்காமல் முள்கரண்டியால் லேசாகக் கலந்துவிட்டு அதில் ஒரு மேசைக்கரண்டி அளவு வைத்துகொண்டு, மீதியை மாவில் ஊற்றி மாவை நன்கு பிசையவும். தேவையெனில் ஒன்றிரண்டு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து மாவை நன்கு கெட்டியாகப் பிசைந்து, இரண்டாகப் பிரித்து உருண்டையாக்கி, காற்றுபடாமல் அரை மணிநேரம் மூடி வைக்கவும்.

ஆறிய ஜாமிலிருந்து பட்டை, கிராம்பை நீக்கிவிட்டு சிறு ஸ்பூன் அளவு எடுத்து உருண்டை போன்று செய்து வைக்கவும். அகன்ற சமமான தட்டில், மாவின் ஒரு பகுதியை மட்டும் வெளியில் எடுத்து, மேலே ஒரு பாலிதீன் பையை வைத்து, அடர்த்தியாக உருட்டைக் கட்டையால் வார்த்து, குக்கி கட்டர் அல்லது ஏதேனும் மூடியால் வட்ட வடிவில் வெட்டி, நடுவே கொஞ்சம் குழியாக இருக்கும்படி செய்து, அதில் ஜாம் உருண்டையை வைத்து, மேலே கொஞ்சம் மாவை மெல்லியதாய் வார்த்து, தீக்குச்சி அளவில் கீறி படத்தில் உள்ளவாறு வைத்து, ஒரு பிரஷ்ஷால் முட்டையை தொட்டு லேசாக மேலே தடவி, பேக்கிங் தட்டில் வைக்கவும். இதே போல் எல்லாவற்றையும் செய்து, அவனை 180 டிகிரி ப்ரீஹீட் செய்து, 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். ஆறிய பின் ஒரு டப்பாவில் சேமித்துவைத்து, இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரை வைத்துச் சுவைக் கலாம்.

25. லாங்க் பீன்ஸ் பிரட்டல்

தேவையானவை: லாங்க் பீன்ஸ் – இரண்டு இன்ச் அளவு நறுக்கியது – ஒரு கப், பூண்டு – 2 பல், சின்ன வெங்காயம் – 4, சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்ப்பால் – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தோல் நீக்கிய பூண்டு, சின்ன வெங் காயம், பச்சை மிளகாயை தட்டிவைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் அவற்றைச் சேர்த்து வதக்கி, சில்லி பேஸ்ட் சேர்த்து வதக்கிவிட்டு பீன்ஸைட் சேர்த்து நன்கு பிரட்டி, வேகும் அளவுக் குத் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு வேக விடவும். முக்கால் பாகம் வெந்த நிலையில் தேங்காய்ப்பால் சேர்த்து மூடவும். தண்ணீர் சுண்டி பீன்ஸ் வெந்து செட் ஆனதும் இறக்கவும்.

குறிப்பு: இதே முறையில் கடுகுக் கீரை, அஸ்பார கஸிலும் செய்யலாம்.

26. நாஸி லிமா(க்)

தேவையானவை: வேர்க்கடலை – ஒரு கையளவு, வெள்ளரிக்காய் – ஒன்று. சாதத்திற்கு: பாஸ்மதி அரிசி – 2 கப், தேங்காய்ப்பால் – 2 கப், பாண்டன் இலை – ஒன்று, லெமன் க்ராஸ் – 2 இன்ச் அளவு, பூண்டு – 5 பல்.

லிமாவுக்கு: சின்ன வெங்காயம் – 5, பூண்டு – 3 பல், இஞ்சி – ஒரு இன்ச் அளவு, காய்ந்த மிளகாய் – 5, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 5 டேபிள்ஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப.

செய்முறை: அரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரிலோ, பாத்திரத்திலோ தேங்காய்ப்பாலுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து (சாதம் வேக தேவையான அளவாக தண்ணீர் இருக்கும்படி கலந்து வைக்கவும்), அதில் தட்டிய பூண்டு, முடிச்சு போட்ட பாண்டன் இலை, லெமன் க்ராஸ், உப்பு சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதி வருவதற்கும் முந்தைய நிலையில் அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து நன்கு கொதித்ததும் கிளறி அடிப்பிடிக்காத வண்ணம் தம் போடவும்.

காய்ந்த மிளகாயை தண்ணீரில் போட்டு ஒரு கொதி கொதித்ததும், 15 நிமிடம் கழித்து மிக்ஸியில் போட்டு அத்துடன் புளி, சர்க்கரை தவிர மற்ற பொருட்களைச் சேர்த்து தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் வேர்க்கடலையைப் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வைக்கவும். அதே எண்ணெயில் அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் வதக்கவும். புளித்தண்ணீர், சர்க்கரை, உப்பு, மிக்ஸி கழுவிய சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி, எண்ணெய் பிரியும்வரை கொதிக்கவிட்டு இறக்க, லிமா தயார். ஒரு வட்ட கோப்பையில் சாதத்தை எடுத்து வைத்து அமுக்கி, ஒரு தட்டில் நடுவில் கொட்டவும். சுற்றி ஒரு பக்கத்தில் கொஞ்சம் லிமாவையும், மறுபக்கத்தில் வேர்க்கடலையையும் வைத்து, சுற்றி வெள்ளரிக்காயை வட்டவடிவில் அரிந்து வைத்துப் பரிமாறவும்.

27. குயே பஹ்லு

தேவையானவை: மைதா மாவு – 100 கிராம், சர்க்கரை – 80 கிராம், முட்டை-3(மாற்றாக, 1 டீஸ்பூன் வினிகரும் அரை டின் கன்டென்ஸ்டு மில்க்கும் சேர்க்கலாம்), பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், வெனிலா எசன்ஸ்/ரோஸ் எஸன்ஸ் – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – சிறிது, உப்பு – 1/4 டீஸ்பூன்.

செய்முறை: மைதா மாவு, பேக்கிங் பவுடரை சலிக்கவும். ஓர் அகலப் பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் சர்க்கரை கரையும்வரை லோ ஸ்பீடிலும், பிறகு ஹை ஸ்பீடிலும் வெள்ளையாக கெட்டியாக ஆகும் வரை நன்கு அடிக்கவும். பின் உப்பு, வெனிலா எசன்ஸ் மற்றும் சலித்து வைத்திருக்கும் மாவைச் சேர்த்து மெதுவாக ஒன்றுசேர கலந்துவிடவும்.

குக்கரில் (அவனிலும் சமைக்கலாம்) ஒன்றரை கப் உப்பு பரவலாக போட்டு அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடியில் ரப்பரும், வெயிட்டும் இல்லாமல் மூடி சூடு செய்யவும். சூடு வந்ததும் சிறிய சில்வர் அல்லது அலுமினிய கப்களின் உள்ளே எண்ணெய் தடவி, மாவை ஊற்றி, குக்கரின் உள்ளே தட்டின் மேல் வைத்து மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும். பிறகு திறந்து பார்த்தால் மேலே பொன்னிறமாக சிவந்து இருக்கும்(இல்லையென்றால் இன்னும் 5 நிமிடம் வைக்கவும்). பின் வெளியே எடுத்து குச்சியால் ஓரத்தை ஒருமுறை ஒதுக்கிவிட்டு, அதே குச்சியால் குத்தி எடுத்தால் வந்துவிடும். சுட்டு எடுத்து, ஆறியதும் சுவைக்கலாம்.

28. லாபிஸ் கேக்

தேவையானவை: மைதா மாவு – கால் கப், முட்டை – 2 (மாற்றாக கன்டென்ஸ்டு மில்க் பயன்படுத்தலாம், பொடித்த சர்க்கரை – அரை கப், வெண்ணெய் – அரை கப், உப்பு – 1/4 டீஸ்பூன், பட்டை(கொஞ்சம் கூடுதலாக), ஜாதிக்காய், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றைப் பொடித்த தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், விரும்பினால் வெனிலா எசன்ஸ் – அரை டீஸ்பூன், பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்.


செய்முறை: ஒரு விரல் அளவு உயரமும் அகலமும், ஒன்றரை சாண் நீளமும் கொண்ட ஒரு பாத்திரத்தில் பட்டர் பேப்பரை வைக்கவும் அல்லது வெண்ணெய் தடவவும். ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், பொடித்த சர்க்கரை சேர்த்து எலக்ட்ரிக் பீட்டரால் நன்கு அடிக்கவும். முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் இதில் சேர்த்து வெள்ளைக் கருவை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்துவிட்டு, வெண்ணெய், முட்டை கலவையை நன்கு மிருதுவாகும் வரை அடிக்கவும். அதில் உப்பு, பொடி, எசன்ஸ் சேர்த்து, பிறகு மாவு, பேக்கிங் பவுடரை சலித்துச் சேர்த்து கலக்கவும். பிரித்து வைத்திருக்கும் வெள்ளைக்கருவை லேசாக நுரை வர அடித்து, அதில் எலுமிச்சை சாறை சேர்த்து சிறிது நேரம் அடிக்கவும். நன்கு வெள்ளை நுரை போல் வரும் போது இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடிக்கவும். க்ரீம் போல் நுரைத்து கெட்டியாக வந்ததும், வெண்ணெய், சர்க்கரை, மாவு, மஞ்சள்கரு கலவையோடு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, ஒரு மரக்கரண்டியால் மென்மையாகக் கலக்கவும். அவனை 200 டிகிரி ப்ரீஹீட் செய்து, பேக் செய்ய தயார் செய்து வைத்திருக்கும் பாத்திரத்தில் ஒன்றரை டேபிள்ஸ்பூன் மாவை ஊற்றி சமப்படுத்தி 8, 10 நிமிடங்கள் பேக் செய்து, மேலே பொன்னிறமாக சிவந்ததும் எடுத்து, அதன் மேல் அதே அளவு மாவை ஊற்றி சமப்படுத்தி அதே போல பேக் செய்யவும். இதே போல் எல்லா மாவையும் ஒவ்வோர் அடுக்கும் சிவக்க சிவக்க மேலே ஊற்றி முற்றிலும் பேக் செய்யவும். ஆறியதும் மெல்லிய துண்டுகளாக வெட்டி எடுத்துப் பரிமாறவும்.

29. மீ கொரிங்

தேவையானவை: ப்ளைன் நூடுல்ஸ் – ஒரு பாக்கெட், பூண்டு – 2 பல், பச்சை மிளகாய் – ஒன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு டேபிஸ்பூன், பீன்ஸ் ஸ்ப்ரவ்ட் (முளைகட்டிய பீன்ஸ்) – ஒரு கைப்பிடி அளவு, கடுகு கீரை – ஒரு கொத்து, சில்லி பேஸ்ட் – ஒரு டேபிள்ஸ்பூன், சோயா சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், முட்டை – ஒன்று, எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை: தோல் நீக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாயைத் தட்டவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். நூடுல்ஸை மஞ்சள்தூள், சிறிது உப்பு சேர்த்த தண்ணீரில் வேகவைத்து வடிக்கவும். அகன்ற வாணலியில் எண்ணெய் சூடானதும் தட்டிய பூண்டு, பச்சை மிளகாய், வெங்காயம், முட்டைகோஸ், உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் சில்லி பேஸ்ட் மற்றும் சோயா சாஸ் சேர்த்துப் பிரட்டி, ஸ்ப்ரவ்ட்பீன்ஸ், நறுக்கிய கீரை சேர்த்து வதக்கி, முட்டை உடைத்து ஊற்றி, வேகவைத்த நூடுல்ஸையும் சேர்த்து நன்கு பிரட்டி சூடு நன்கு ஏறியதும் இறக்கவும்.

குறிப்பு: அனைத்தையும் அதிக தீயில் வதக்கவும்.

30. சய் குயே

தேவையானவை: ஸ்டப்பிங்க்கு: துருவிய ஜிகாமா கிழங்கு – 2 கப் (இது மலேசிய கிழங்கு. இதற்குப் பதிலாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு உபயோகிக்கலாம்), துருவிய கேரட் – ஒரு கப், சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 2 பல், சர்க்கரை – ஒரு ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

மேல் மாவுக்கு: மைதா மாவு – 3 கப், தண்ணீர் – 2 டம்ளர், வாழை இலைகள் – தேவைக்கேற்ப, எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பூண்டைப் பொடியாக நறுக்கவும். அகன்ற வாணலியில் எண்ணெய் சூடானதும் பூண்டு, வெங்காயம், உப்பை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். பின்பு துருவிய கிழங்கு, கேரட் சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்த தீயில் வைத்து, அடிப்பிடிக்காமல் இடையிடையே கிளறவும். சிறிது நேரத்தில் நிறம் மாறி சுருங்கி வெந்ததும், ருசி பார்த்து உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு பிரட்டி ஆறவிடவும். ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பை எடுத்து, அதில் நன்கு வெந்நீரை சிறிது சிறிதாகச் சேர்த்து நன்கு பிசையவும். ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கையால் நன்கு பிசைந்து வைக்கவும்.வாழை இலைகளைக் கழுவி சிறுசிறு துண்டுகளாக்கவும். அதில் ஒரு துண்டில் சிறிது எண்ணெய் தடவி, எலுமிச்சை அளவு மாவை எடுத்துத் தட்டி (நடுவில் கொஞ்சம் தடிமனாகவும், ஓரத்தில் மெல்லியதாகவும்), அதன் நடுவே ஆறிய கிழங்கை அதற்கேற்றார்போல வைத்து மூடி, ஓரங்களை ஒட்டும் அளவுக்கு நன்கு அழுத்தி விடவும். அதேபோல எல்லாவற்றையும் வாழை இலைத் துண்டில் தேவையான அளவு வைத்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

இதை அப்படியே சாப்பிடலாம், சில்லி சாஸ்/பீநட் சாஸ் தொட்டும் சாப்பிடலாம்.

Loading...
Categories: Samayal Tips Tamil, இனிப்பு வகைகள், சிற்றுண்டி

Leave a Reply


Sponsors